murasoli thalayangam
இதற்காகவே நாம் பிரதமர் மோடியை பாராட்டத்தான் வேண்டும்.. முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
முரசொலி தலையங்கம் (21-09-2023)
இப்போதுதான் புரிகிறதா?
இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி இன்றைய தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு இப்போதுதான் புரிகிறது. பத்தாண்டு காலம் நேரு எதிர்ப்பு பிரச்சாரத்தைச் செய்து வந்த மோடி அவர்கள், புதிய நாடாளுமன்றத்துக்குப் புறப்படுவதற்கு முன்னால் ஆற்றிய உரையில் நேருவைப் புகழ்ந்துவிட்டார். அதற்காகவே அவரை பாராட்டத்தான் வேண்டும்.
ஒன்றிய கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்த அமைப்பு வெளியிட்ட பதாகையில் ஜவஹர்லால் நேருவின் படமும் இல்லை, மெளலானா அபுல் கலாம் ஆசாத் படமும் இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து 9 ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவின் படமே மறைக்கப்பட்டது. நேருவின் பெயரை 2022 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிடவில்லை.
டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இருக்கிறது. இதன் பெயரையே பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என்று மாற்றி விட்டார்கள். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களால் உருவாக்கப்பட்டது இது. இதனை முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அத்தகைய புகழுக்குரியது இது. இதன் பெயராக இருந்த நேரு பெயரை கடந்த ஆகஸ்ட் 14 அன்றுதான் தூக்கினார்கள்.
கோவா பிரச்சினையில் பிரதமர் நேரு சரியாக நடந்து கொள்ளவில்லை, தனது உலகளாவிய இமேஜை காப்பாற்றிக் கொள்வதில்தான் அக்கறை செலுத்தினார் என்று நாடாளுமன்றத்தில் 2022 பிப்ரவரி மாதம் பேசினார் பிரதமர் மோடி.
“காந்தி, நேரு என குடும்பப் பெயர்களில் 600 திட்டங்கள் இருந்ததாகச் செய்தி படித்தேன். அவர்களுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏன் நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைப்பது இல்லை? நேருவின் பெயரை எங்காவது நாங்கள் குறிப்பிட மறந்துவிட்டால் காங்கிரசார் அப்செட் ஆகிறார்கள். நேரு மிகப்பெரிய மனிதர். பிறகு ஏன் அவரது பெயரை யாரும் குடும்பப் பெயராகப் பயன்படுத்துவது இல்லை? நேரு பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்? பயம்?” என்று கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் பேசினார் பிரதமர் மோடி.
பெரோஸ் காந்தி –- என்ற பெயரை வைத்தே இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி எனச் சொல்லப்பட்டது. இதனை தான் ‘நேரு’ என்று ஏன் வைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேட்டார் பிரதமர்.
காஷ்மீர் விவகாரத்தில் நேரு சரியாக நடந்து கொள்ளவில்லை என்று விமர்சித்தார் ( 2022 அக்டோபர்) பிரதமர். நேருவுக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று (2018 பிப்ரவரி) நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி. இப்படி எல்லாம் தொடர்ந்து நேருவை அவமானப்படுத்தி வந்தவர் தான் பிரதமர் மோடி. ஆனால் இப்போது நாக்கை அப்படியே திருப்பிப் போட்டுவிட்டார்.” ‘உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்தியாவே விழித்துக் கொண்டிருக்கிறது’ என்ற பிரதமர் நேருவின் பேச்சு தான் உலகமெங்கும் பெரும் பாராட்டைப் பெற்றது. அந்தப் பேச்சு தற்போது நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. நேரு,சாஸ்திரி, இந்திரா, நரசிம்மராவ், வாஜ்பாய் என்று பல்வேறு பிரதமர்கள் தங்கள் சிறப்பான தலைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திரா காந்தி காலத்தில் வங்க தேசம் உருவானதையும் நினைவூட்டி இருக்கிறார் பிரதமர். இராஜேந்திர பிரசாத், அண்ணல் அம்பேத்கர், மாவீரன் பகத்சிங் ஆகியோரையும் நினைவு கூர்ந்துள்ளார் பிரதமர்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றை இப்போதுதான் அவர் படிக்க ஆரம்பித்து பேசுகிறார் என்பதை இதன் மூலமாக உணர முடிகிறது. இதற்கே ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது!
ஒன்பது ஆண்டுகள் – ஒன்பது முறை - ஒன்பது சிறைகளில் இந்தியாவின் விடுதலைக்காக அடைக்கப்பட்டு இருந்தவர் நேரு. ‘என்னுடைய அரசியல் வாரிசு நேருதான்’ என்று காந்தி சொன்னார். ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தலைமை மகுடம் நேருவுக்குத்தான் போகவேண்டும், ஏனென்றால் அவர்தான் முழுமையான இந்தியர்’ என்றும் காந்தி சொன்னார். அத்தகைய ஆட்சியை தான் நேருவும் வழங்கினார்.
பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழி வாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டுவந்து – அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார். வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார். மதச்சார்பற்ற மனிதராக அவர் இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார். மதச்சார்பின்மையின் இலக்கணமாகத் திகழ்ந்தார். கூட்டாட்சி நெறிமுறைகளை அவர் அடிக்கடி பேசினார். அணிசேராக் கொள்கையை கடைப்பிடித்தார். அதனால் உலகத் தலைவர்கள் அனைவரும் அவரை வணங்கினார்கள்.
இத்தகைய நேருவின் பெருமையை மறைக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். நல்ல மாற்றம் தான்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!