murasoli thalayangam
”1 கோடி மகளிர் கூட்டத்தை மொத்தமாக ஈர்த்துவிட்டார்களே என்ற வயிற்றெரிச்சலைக் கொட்டும் பழனிசாமி” : முரசொலி!
முரசொலி தலையங்கம் (18-09-2023)
பழனிசாமியின் கதறலும் பதறலும்!
'மகளிருக்கு ஆயிரம் ரூபாய் ஏன் தரவில்லை?' என்று இதுவரை கேள்வி எழுப்பி வந்தார் பழனிசாமி. கொடுக்கத் தொடங்கியதும், 'எதற்காகக் கொடுக்கிறீர்கள்? தேர்தலுக்காக கொடுக்கிறீர்களா?' என்று கதறுகிறார். பதறுகிறார். கண்டிக்கிறார். குட்டிக்கரண அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் விழுந்துவிட்டதே... அவர்கள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வணங்கத் தொடங்கி விட்டார்களே என்பதுதான் பழனிசாமியின் கதறல் அறிக்கைக்குக் காரணம்.
ஆயிரம் ரூபாய் கொடுத்ததை நாக்கில் தேன் தடவுவதாகவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும், வாங்காதவர்களுக்கு பட்டைநாமம் போட்டுவிட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தான் தருவதாகவும், இதன் மூலமாக மகளிர் வாக்குகளை பெற நினைப்பதாகவும், தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது என்றும், இது ஏமாற்று வேலையாகும் என்றும், எல்லாரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்றும் பழனிசாமி அறிக்கை சொல்கிறது. பழனிசாமி எவ்வளவு பதற்றத்தில் இருக்கிறார் என்பதை இதன் மூலமாக அறியலாம்.
'ஆயிரம் ரூபாய் ஏன் தரவில்லை?' என்று கேட்டுக் கொண்டிருந்தவர் இவர் தான். வாக்குறுதி என்னாச்சு? என்று கேட்டவர் இவர் தான். 'பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள்' என்று சொன்னதும் இவர் தான். இப்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கத் தொடங்கியதும், முதல் ஆளாக பழனிசாமி தான் வரவேற்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அந்த பெருந்தன்மையை பழனிசாமியிடம் எதிர்பார்க்க முடியாது. 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்துவிட்டு' வந்த வரலாறு அவருடையது. அதை அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. சும்மா இருந்திருக்கக் கூடாதா? அறிக்கை என்ற பெயரால் இப்படியா வயிற்றெரிச்சலைக் கொட்டுவது?
'ஐயகோ! கோடிக்கணக்கான மகளிர் கூட்டத்தை மொத்தமாக ஈர்த்துவிட்டதே' என்ற பொறாமையும் வஞ்சகமும் தான் அவரது அறிக்கையில் வெளிப்படுகிறதே தவிர வேறல்ல.
'எல்லோருக்கும் கொடுப்பதாகச் சொன்னீர்களே?' என்கிறார் பழனிசாமி. அனைவர்க்கும் வீடு என்றால், வீடு இல்லாதவர்க்கு வீடு என்றே பொருள். அனைவர்க்கும் வேலை என்றால், வேலை இல்லாதவர்க்கு வேலை என்றே பொருள். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது அவசியமானவர்கள் அனைவருக்கும் என்பதே பொருள்.
இந்த திட்டத்தில் இணைவதற்காக ஒரு கோடியே 63 லட்சம் பேர் தான் விண்ணப்பம் செய்து கொண்டார்கள். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்காதவர்கள், மறுபடியும் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
'இந்த திட்டத்தின் பயன் கிடைக்காதவர்கள், கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்ற காரணத்தை தெரிவித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு அவர்கள் மறுபடியும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று முதலமைச்சர் அவர்களே அறிவித்துள்ளார்கள். எனவே, முதல் கட்டமாக வாய்ப்பை பெற இயலாதவர்கள், அடுத்து விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்காக பேசுவதைப் போல பழனிசாமி நடிக்கத் தேவையில்லை.
'28 மாதமாக ஏன் தரவில்லை' என்று கேட்கிறார் பழனிசாமி. அதற்கான உண்மையான காரணம் அவருக்கே தெரியும். அரசின் நிதிநிலைமையை அதல பாதாளத்துக்குள் தள்ளிவிட்டுப் போனவரே பழனிசாமி தான்.அவரது ஆட்சி கால நிதிநிலைமையை வெள்ளை அறிக்கையாகவே திமுக அரசு வெளியிட்டதே. மறந்து போய்விட்டதா பழனிசாமிக்கு?
* 2011-–12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை உச்சநிலையில் இருந்தது. அது கடந்த 2011–-21 கால அ.தி.மு.க.வின் பத்தாண்டு காலத்தில் மந்த நிலைமையை அடைந்துள்ளது.
* அதிலும் குறிப்பாக 2013–-14 ஆண்டில் இருந்து தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது.
* 2006–-13 காலக்கட்டத்தில் ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு உபரி வருவாயை அடைந்திருந்தது. 2013 முதல் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.
* 2017–-19 காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு ஆக்கப்பட்டு விட்டது.
* 2016– 21 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிதிப்பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறை விகிதம் என்பது 52.48 சதவிகிதம் ஆகும். இது முந்தைய ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 14.95 சதவிகிதமாக இருந்தது.
* அ.தி.மு.க. ஆட்சியின் உண்மையான செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டுள்ளது.
* ஒட்டுமொத்தமாக இன்றைய கடன் என்பது 5,70,189 கோடி ரூபாய் ஆக இருக்கிறது.
- – ஒட்டுமொத்தமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டின் நிதிநிலைமை, நிலையற்ற தன்மையில் இருப்பதாக அந்த வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியது. பழனிசாமியின் கையாலாகாததனத்தால் தான் உடனடியாக வழங்க முடியவில்லை.
''சமீபத்தில் முடிவடைந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மாற்றியமைக்கவோ அல்லது கைவிடுவதற்கோ ஒரு காரணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த அறிக்கை இல்லை" –- என்று கொட்டை எழுத்தில் 125 ஆவது பக்கத்தில் ஆறாவது, ஏழாவது, எட்டாவது வரியாக உள்ளது. பழனிசாமியைக் காரணமாகக் காட்டி கொடுத்த வாக்குறுதிகளை தவிர்க்க நினைக்கவில்லை முதலமைச்சர். 'நான் மறக்கவில்லை, உறுதியாக வழங்குவேன்' என்று பல்வேறு மேடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வந்தார்கள். சொன்னபடி கொடுத்துள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுக்கிறார்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பெறுகிறார்கள். இடையில் பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல் இருந்தால் போதும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!