murasoli thalayangam
‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த கட்சி திமுக’.. மீண்டும் நிரூபித்த தலைவர் மு.க.ஸ்டாலின் -முரசொலி !
முரசொலி தலையங்கம் (15.9.2023)
அண்ணன் இருக்கின்றார்!
...............................
சந்தனமே!
தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்காற்றே!
நந்தாச் சுடர் விளக்கே!
நறுமணத்துப் புதுமலரே!
கண்ணியத்தைக் கடமையினைக் கட்டுப்பாடெனும்
பண்பைக் கண்போலக் காத்திடற்குக்
கற்பித்த பெருந்தகையே!
சிங்கத் தமிழர்களின் சிந்தையெலாம் பறிகொண்டு
வங்கக் கடலோரம் வாய்மூடிக் கண்மூடி
மோனத் தவமிருக்கும் முத்தமிழே!
குடிசையெலாம் மேலுயர்ந்து
கோபுரமாய் விளங்கிடவும்
மடமையிருள், கொல்வறுமை
மடிந்தே மருகிடவும்
எல்லாரும் நலனெல்லாம்
எய்தி மகிழ்ந்திடவும்
நல்லதோராட்சியினைத்
தோற்றுவித்த நாயகமே!
எண்ணக் குறிப்பறிந்தே
ஈடேற்றும் தம்பியரின் அண்ணாவே!
எனையிங்கே ஆளாக்கிக்
காத்திட்ட ஆருயிரே!
நும்கனவு அத்தனையும் நனவாக்கும்
சீரியநற் பணியினையே செய்கின்றோம்
நாள்தோறும்!
செய்பணிகள் அனைத்திலுந்தான்
அண்ணனே! நீ இருக்கின்றாய்!
-– என்றே எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்! காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா, உதயமான நாள் செப்டம்பர் 15 அன்று. அது இன்று!
முதன் முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா அவர்கள் தனது கன்னிப் பேச்சில் கனல் தெறிக்க ஒரு கருத்தைச் சொன்னார்கள். “நாங்கள் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்று நீங்கள் அறிவீர்கள். இந்தச் சபையும் அறியும். நாங்கள் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்றால் எங்களைத் தோற்றுவித்ததும் இந்த நாட்டிலுள்ள ஒரு விசித்திரமான தலைமைதான் என்பதை யாவரும் உணர வேண்டும். விசித்திரமான நிலைமைகள்தான் விசித்திரமான கட்சிகளை ஏற்படுத்துகின்றன” என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இன்னொன்றையும் சொன்னார் அண்ணா தொலைநோக்குப் பார்வையுடன். “இந்த சபைக்கு நாங்கள் வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம்” –- என்று அண்ணா அவர்கள் சொன்ன நாள்: 4.7.1957. எண்ணி பத்தே ஆண்டில் அரியணையில் அமர்ந்துவிட்டார்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இன்று வரை ‘தமிழ்நாடு’ என்ற பெயரே அச்சம் தருவதாக இருக்கிறது. தமிழும் ஆங்கிலமும் என்பதை வரையறுத்தார். இந்தித் திணிப்புக்கு தடுப்புச் சுவர் அப்படியே இருக்கிறது. இன்று மற்ற மாநிலங்களும் இந்தித் திணிப்பை எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றன. சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்றார் அண்ணா. கடந்த வாரம் கூட உச்சநீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்தார் அண்ணா!
அண்ணா மறைவுற்ற போது பெரியார் சொன்னார்: ‘அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்று! இந்த சொற்களுக்குள்தான் எத்தனை பொருள்? அண்ணா இருப்பதைப் போலவே கொள்கை இருக்க வேண்டும், கோட்பாடு இருக்க வேண்டும், கழகம் இருக்க வேண்டும், கண்ணியம் நிலைக்க வேண்டும், கட்டுப்பாடு காக்க வேண்டும், தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்தது தான், ‘அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்பது ஆகும்.
கலைஞராட்சி, அண்ணாவின் ஆட்சியாக அப்படியே தொடர்ந்தது. மாநில சுயாட்சி இல்லையே என்று வருந்தினார் அண்ணா. மாநில சுயாட்சியை இந்திய அரசியலுக்குள் கொண்டு சென்று அதனை நிலைநிறுத்த அயராது உழைத்தார் கலைஞர். மாநில சுயாட்சித் தீர்மானம் போட்ட முதல் இந்திய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினார் கலைஞர். மாநிலக் கட்சிகளின் கருத்தைக் கேட்டு ஒன்றிய அரசு செயல்படும் நிலையை உருவாக்கினார். கூட்டணி ஆட்சி என்பது கூட்டாட்சியாகவும்– மாநில சுயாட்சியை உயிர்ப்பிப்பதாகவும் ஆக்கினார் கலைஞர். சமூகநீதிக் கோட்பாட்டை இந்தியவியல் கோட்பாடாக மாற்ற - மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வைத்தார் கலைஞர்.
மாநிலக் கட்சிகள்தானே, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தானே, ஒரு மாநிலக் கட்சித் தலைவர்தானே என்ற ஏளனப் பேச்சை அகற்றி, ‘மாநிலக் கட்சித் தலைவர்களே, அகில இந்தியத் தலைவர்களாக வலம் வரலாம்’ என்ற நிலையை கலைஞர் உருவாக்கினார். வடக்கின் தராசை கொஞ்சம் இறக்கி, தெற்கின் தராசை கொஞ்சம் உயர்த்தி -– ஒன்றிய முள்ளின் முனையை கொஞ்சம் மழுக்கிக் காட்டினார் கலைஞர். ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்தார் கலைஞர்!
அந்த உருவாக்கத்தின் இன்றைய செயல்வடிவமாக திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் உருவான கூட்டணி பாணியை அகில இந்தியாவுக்கும் விரித்தார் இவர். ‘கரும்பு ஆலையில் மீண்டும் மீண்டும் பிழிவதைப் போல ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் பிழிய வேண்டும்’ என்று கூட்டணிக்கான பாணியைச் சொன்னார் அண்ணா. செய்து கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர். ‘இந்தியா’ கூட்டணியின் விதை மட்டுமல்ல, பதியமும் இங்கே போடப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எடுத்துச் சென்று நட்டுவிக்கப்பட்டது. இனி தோப்பாகும். அண்ணாவே நினைத்துப் பாராத உச்சம் இது!
‘திராவிட மரபினத்தைச் சார்ந்தவன் நான்’ –- என்று சொன்னார் அண்ணா. திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரே அச்சமூட்டுகிறது. ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்றார் கலைஞர். ஜாதி வேறுபாடு மட்டுமே அவரால் நீக்க முடிந்தது. இதோ பெண் ஓதுவார்கள் பாடும் காட்சியைப் பார்க்கும் போது பால் பேதமும் பஞ்சாய் பறக்கிறது. தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றும் வண்ணம் ஒரு கொள்கையாட்சியை நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர். ‘மதறாசி’ போய்விட்டது இப்போது. ‘இப்படி ஒரு முதலமைச்சர் வேண்டும்’ என்று வங்காளத்திலும், மலையாளத்திலும் தெலுங்கிலும் குரல் கேட்கிறது. ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்து வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்!
தொடக்கத்தில் சொல்லப்பட்ட கவிதைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வைத்த தலைப்பு: ‘அண்ணன் இருக்கிறார்’. ஆமாம்! அண்ணன் இருக்கிறார். வாழ்கிறார். ஆள்கிறார்.
அண்ணா வாழ்க!
அண்ணா ஆட்சி தொடர்க!
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!