murasoli thalayangam

1000 குடமுழுக்கு: “கோவில்களும் புத்துயிர் பெறுவது ஒரு சில கும்பலுக்கு பிடிக்கவில்லை..” - முரசொலி தாக்கு !

ஆயிரம் குடமுழுக்கு

“இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருப்பது பெருமை பொங்கும் சொற்கள் மட்டுமல்ல - உண்மையே அதுதான். ‘நாத்திகர்கள் கட்சி’ என்று கட்டமைத்து, ‘இவர்கள் ஆட்சியிடம் இருந்து கோவில்களைப் பறிக்க வேண்டும்’ என்று ஒரு கும்பல் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆயிரமாவது குடகுழுக்கை நடத்தி இந்தக் கும்பலின் தலையில் மண்ணைப் போட்டுவிட்டது தி.மு.க. அரசு.

சென்னை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் குடமுழுக்கு விழா மிகமிகச் சிறப்பாக நடந்துள்ளது. கழக ஆட்சி ஆறாவது முறையாக மலர்ந்ததற்குப் பிறகு - இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நடந்துள்ள கோவில் குடமுழுக்கு விழாக்களில் 1000 ஆவது குடமுழுக்குதான் இந்த காசி விசுவநாதர் கோவிலில் நடந்தது ஆகும். இதை வைத்துத்தான், ‘இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சி’ என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அரசிடம் இருந்து கோவிலைப் பறித்து சூறையாட நினைக்கும் கும்பல்களால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.

‘அனைத்துத் துறைகளின் வளர்ச்சி’ என்பதைத்தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படித்தான் செயல்படுத்தியும் வருகிறார்கள்.‘எல்லார்க்கும் எல்லாம்’என்பது இதன் உள்ளடக்கம் ஆகும்.

எந்த மனிதரையும் ஜாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் தந்துள்ளது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இன்னார்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என்பதையும் மாற்றி, பெண்கள் அர்ச்சகர் ஆக முடியாது என்பதையும் மாற்றி சமத்துவம் உலாவும் இடமாக கோவில்கள் மாறி இருக்கின்றன.

திருக்கோயில்கள் சார்பில் - 10 கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு விட்டன.

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Com, BBA, BCA, B.Sc Computer Science ஆகிய நான்கு பாடப் பிரிவுகள் மட்டுமல்ல, சைவ சித்தாந்தமும் கற்றுத் தரப்படுகிறது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் இது செயல்பட்டு வருகிறது. கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் தொடங்கப்பட்டு விட்டது கோவில் கல்லூரிகள்.

திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யவே வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் செய்யப்படுகின்றன.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்கு தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருக்கிறார்.

கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றப்பின் திருக்கோயில்களின் எண்ணிக்கையை தலா 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 இலட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இப்படி அனைத்துக் கோவில்களும் புத்துயிர் பெறுவது அந்தக் கும்பலுக்கு பிடிக்கவில்லை.

இன்னும் சொன்னால் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத்துறையே மிகமிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது.

1970 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறநிலையத் துறைக்குத் தனி அமைச்சரோ, சட்டப்பேரவையில் அறநிலையத்துறைக்கு என தனி விவாதமோ நடந்தது இல்லை. வேறு ஏதாவது ஒரு துறையோடு சேர்த்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை நடத்துவார்கள். முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் அறநிலையத்துறைக்கு தனியான மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவது தொடங்கப்பட்டது.

1967 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் ஐந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளும், 1996 - 2001 காலக்கட்டத்தில் 2,459 கோவில்களுக்கு திருப்பணிகளும், 2006 – 2011 காலக்கட்டத்தில் 4 ஆயிரத்து 539 கோவில்களுக்குத் திருப்பணிகளும் நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்களைக் கொண்டு வந்து சேர்த்தவர் கலைஞர். அவரது ஆட்சியில் தான் கோவில் சொத்துக்களும் அதிகம் ஆனது. கோவில்களின் வருமானமும் அதிகம் ஆனது. 1989, 1996 ஆண்டுகளில் ஆன்மிகப் பெரியவர்களைக் கொண்டு அறநிலையப் பாதுகாப்புக் குழுவை அமைத்தவர் கலைஞர். கிராமப்புற பூசாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்தவரும் அவரே. திருக்கோவில் தொடர்பான ஆகம விதிகள் வடமொழியில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்து, வெளியிட முயற்சிகள் செய்தார். போற்றி புத்தகங்களை வெளியிட்டார். இவை அனைத்தும் மீண்டும் இப்போதும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அன்றைய மடாதிபதிகள் எப்படி கலைஞர் ஆட்சியை பாராட்டினார்களோ - அதே வகையில் இன்றைய மடாதிபதிகள் இன்றைய முதல்வரையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இறை நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையையும் சேர்த்துப் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனால்தான் அவரை குறி வைக்கிறது ஒரு கும்பல். அந்த கும்பல் உண்டியலைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் தி.மு.க. அரசு, பக்தர்களைப் பற்றி மட்டுமே அக்கறையோடு செயல்படுகிறது.

- முரசொலி தலையங்கம்

13.9.2023

Also Read: “பிரதமரின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான்..” - வெளுத்து வாங்கிய முரசொலி !