murasoli thalayangam
சனாதனம்.. மோடிக்கும் பா.ஜ.க கூட்டத்திற்கும் RSS தலைவர் மோகன் பகவத்தே பதில் சொல்லிவிட்டார் : முரசொலி!
முரசொலி தலையங்கம் (09-09-2023)
மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்
மணிப்பூருக்கு போய் பார்க்காத - அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத - 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத - பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம்.
சனாதனம் குறித்து பிரதமர் மோடி எழுப்பும் கேள்விகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விரிவாக விளக்கமாக பதில் அளித்துவிட்டார். “இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது” என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒப்புக்கொண்டு விட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும் போது, “சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்” என்றும் மோகன் பகவத் சொல்லி விட்டார். ஒன்றிய அமைச்சர்கள், மோகன் பகவத் பேச்சைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
On reservations, RSS chief Mohan Bhagwat says, “We kept our own fellow human beings behind in the social system...We did not care for them, and this continued for almost 2,000 years...Until we provide them equality, some special remedies have to be done...Reservations are one of them. Reservations should continue till there is such discrimination. The Sangh gives complete support to the reservations provided in the Constitution.” - ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மோகன் பகவத் இப்படி பேசியதும் அவரை இணையத் தளங்களில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ‘நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சனாதனத்தை மறைக்கும் சக்திகள் அவரை விமர்சித்து பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் பேசியதைத் திரித்தும், ‘சனாதனம் என்றால் ஒற்றுமைதான்’ என்றும் பொய் சொன்ன கூட்டம், இப்போது மோகன் பகவத்தும் அதைச் சொன்னதும் அவரையும் திட்டத் தொடங்கி இருக்கிறது.
இந்தக் கருத்தை மோகன் பகவத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
* மும்பை ரவீந்தர் மந்திர் வளாகத்தில் நடந்த புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647 ஆவது பிறந்த நாளில் பேசிய ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னார்:
“இந்து மதத்தில் சாதிகள் கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி வேறுபாடுகள் கிடையாது. மேல் சாதி, கீழ் சாதி என்ற அடிப்படை அற்ற பழக்கத்தை உருவாக்கியவர்கள் பண்டிட்டுகளே” (6.2.2023) என்று பேசினார். உடனே மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரது பேச்சை பூரி சங்கராச்சாரியார் கண்டித்தார். பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்தில் மோகன் பகவத் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்க அறிக்கை கொடுத்தது. “பண்டிட்டுகள் என்று மோகன் பகவத் குறிப்பிட்டது எந்த ஒரு பிரிவினரையும் அல்ல. ஜாதி படி நிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படிச் சொன்னார்” என்று விளக்கம் அளித்தார்கள். இவரது பேச்சு முக்கிய இணைய தளங்களிலும் வீடியோவாக உள்ளது.
* “நாட்டில் அனைவரும் சாதி வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும். யாரேனும் இதைப்பற்றிக் கேட்டால் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வர்ண மற்றும் சாதி அமைப்புகள் கடந்த கால விஷயம் எனவும், அதை அனைவரும் மறந்து விட வேண்டும்” என்று 8.10.2022 அன்று மோகன் பகவத் பேசி இருக்கிறார்.( தந்தி டி.வி.)
* டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ரேணுகா போகரே ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அப்போது பேசிய மோகன் பகவத், “இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை, அவைகள் மறக்கப்பட வேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும். பாகுபாடு செய்பவை அனைத்தும் பூட்டப்பட வேண்டும். உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல” என்று பேசினார். (8.10.2022)
* அகமதாபாத் ஜி.எம்.டி.சி. மைதானத்தில் சமாஜ் சக்தி சங்கம் விழாவில் கலந்து கொண்டு மோகன் பகவத் பேசினார். “நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை இந்தியா அடைய முடியாது என்று அம்பேத்கர் சொன்னார். அதை அடைய நம் சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை அகற்ற வேண்டும். நாம் கடந்த காலத்தில் ஒற்றுமையான சமூகமாக இருந்தோம். பின்னர் இந்த சாதிகள் மற்றும் வகுப்புகளை உருவாக்கினோம். இது நமக்குள் வேறுபாடுகளை உருவாக்கியது. இந்தச் சூழலை அன்னிய சக்திகள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தீய சுழற்சியில் இருந்து நாம் முழுமையாக வெளியே வந்து ஒன்றுபட வேண்டும்” என்று வெளிப்படையாகவே பேசினார் மோகன் பகவத். (14.4.2023)
வர்ண - சாதி அமைப்புகள் குறித்து மோகன் பகவத் சொன்னதுதான், பிரதமர் மோடிக்கு நமது பதில்கள் ஆகும். இந்த விளக்கத்தை ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!