murasoli thalayangam
‘INDIA’ கூட்டணியின் வலிமை மோடிக்கு தெரிகிறது.. அந்த விரக்திதான் நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது -முரசொலி !
முரசொலி தலையங்கம் (14.8.2023)
பதிலுரை அல்ல, விரக்தி உரை!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிமீது என்ன நோக்கத்துக்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.
1. நாடாளுமன்றத்துக்கே வராத பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்துக்குள் வரவைக்க வேண்டும்.
2. நாடாளுமன்றத்தில் பேசாத பிரதமரை பேச வைக்க வேண்டும். –- இதுதான் எதிர்க்கட்சிகளின் உண்மையான நோக்கம். இந்த இரண்டு நோக்கமும் நிறைவேறிவிட்டது. வராதவர், வந்தார். பேசாதவர், பேசினார்.
பிரதமரை நோக்கி எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கியமான கேள்விகள் இரண்டு.
1. பற்றி எரியும் மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை?
2. நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு என்ன பயம்? - – இதுதான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய இரண்டு முக்கியமான கேள்விகள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் இறுதி வரை அவர் பதில் சொல்லவே இல்லை. இரண்டு மணி நேரம் பேசினார். ஆனால் முக்கியமான இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 5.09 மணிக்கு பேசத் தொடங்கினார் பிரதமர். 2014 ஆம் ஆண்டு தேர்தல் மேடைகளில் காங்கிரஸ் கட்சிமீது என்ன குற்றச்சாட்டுகளை வைத்து வந்தாரோ அதே குற்றச்சாட்டு களை வைத்தார். தொடர்பில்லாத ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார். ‘மணிப்பூர்’ என்று குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள் எதிர்க்கட்சிகள். மணிப்பூரைப் பற்றி பிரதமர் வாயே திறக்கவில்லை. ஒன்றரை மணி நேரமாகப் பேசியவர் மணிப்பூர் என்ற சொல்லையே உச்சரிக்கவில்லை. 6.40 மணிக்கு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தார்கள். வெளிநடப்பு செய்தது அவருக்கு வசதியாக ஆனது. உடனே மணிப்பூர் பற்றி பேசத் தொடங்கினார். 7.22 மணிக்கு ஒரு வழியாக உரையை முடித்துக் கொண்டார். 2 மணி நேரம் 13 நிமிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார் பிரதமர்.
பிரதமரின் பதிலுரை என்பது பதில்கள் எதுவும் சொல்லாத உரை. இந்த உரை, ‘பிரதமர்’ ஆற்றிய உரையாக அமைய வில்லை. பா.ஜ.க. தலைவர் ஆற்றிய உரையாக அமைந்திருந்தது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசும் உரையாக மோடியின் உரை அமைந்திருந்தது. ‘எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் இல்லை’ என்று பிரதமர் சொன்னார். அப்படியானால் இரண்டு மணி நேரம் எதற்காக காங்கிரஸ் கட்சிக்கு பதில் சொன்னார்? இல்லாத காங்கிரசுக்கு பதில் சொல்வதற்கு எதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவு செய்தார்?
ஒரு ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பதில் சொல்லும் பதிலுரை எப்படி அமைந்திருக்க வேண்டும்? அந்த ஆட்சி இந்த நாட்டு மக்களுக்கு எந்த வகையில் நம்பிக்கை தரும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பதைச் சொல்வதாக அமைந்திருக்க வேண்டும். தனது ஆட்சி செய்த சாதனைகளை அடுக்குவதாக அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் எத்தனை கோடி மக்களுக்கு நன்மை தந்துள்ளது என்பதை வரிசைப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது, இப்போது எப்படி வளர்ந்துள்ளது என்பதைப் புள்ளி விபரங்களோடு சொல்வதாக அமைந்திருக்க வேண்டும். ‘இப்படி எல்லாம் நன்மை செய்திருப்பவர்கள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்வது எதிர்க்கட்சிகளின் உள்நோக்கம் ஆகும்’ என்று முடிக்க வேண்டும்.
மாறாக, காங்கிரஸ் கட்சியை, ராகுல் காந்தியை, இந்தியா முழுமைக்குமான எதிர்க்கட்சிகளை, ‘இந்தியா’ கூட்டணியை, திராவிட முன்னேற்றக் கழகத்தை –- விமர்சிப்பதன் மூலமாக பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார மேடையாக நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திக் கொண்டார்.
‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதைப் போலவும் பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருப்பதைப் போலவும்தான் இந்த உரை அமைந்திருந்தது’ என்று மிகச் சரியாகவே கிண்டல் அடித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஏட்டுக்கு அளித்துள்ள பதிலில், “பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களாக பா.ஜ.க. அரசு மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
அது எதற்கும் பதில் சொல்லவில்லை பிரதமர். மாறாக, தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார். 2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பிரதமர் உரையையாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ‘எதிர்க்கட்சித் தலைவர்’ மோடி பேசுவதைப் போல இருக்கும்” என்று சொல்லி இருந்தார் முதலமைச்சர் அவர்கள். இதுதான் உண்மை.
ஒரு முக்கியமான கருத்து பிரதமரின் உரையில் இருந்து தெளிவாகத் தெரிய வந்துள்ளது...
‘இந்தியா’ கூட்டணி வலிமையோடு அமைந்துள்ளது என்பது பிரதமர் உரை மூலமாகத் தெரிகிறது. இந்தக் கூட்டணியின் பலம் என்பதும், அது வெற்றிக் கூட்டணியாக அமைந்திருக்கிறது என்பதும் நம்மை விட பிரதமர் அதிகமாக உணர்ந்துள்ளார். தனக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக வாங்கும் வல்லமை ‘இந்தியா’ கூட்டணிக்கு உண்டு என்பதை அவர் உணர்ந்துவிட்டார். ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களால் தனது இமேஜ் சரிந்து விட்டது என்பதை அறிந்துவிட்டார் பிரதமர். அந்தக் கோபத்தைதான் - – அந்த விரக்தியைத்தான் தனது உரை மூலமாக வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். எனவே, இது பதிலுரை அல்ல, விரக்தி உரை!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!