murasoli thalayangam

நீங்கள் சொன்ன மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற யார் தடுத்தது?.. பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முரசொலி!

முரசொலி தலையங்கம் (09-08-2023)

யார் தடுத்தது? -1

எந்த சாதனையையும் செய்யாத பிரதமர் நரேந்திர மோடி இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா? எந்த நல்லது செய்யவும் அவரை எதிர்க்கட்சிகள் விடவில்லையாம்!

ஆட்சி முடியப் போகும் இந்த நேரத்தில் 508 ரயில் நிலையங்களை இப்போது மறுகட்டமைப்பு செய்யப் போகிறார்களாம். அந்த விழாவில் காணொலி மூலமாகப் பேசியிருக்கிறார் பிரதமர். “நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சிகள் நாட்டுக்காக எதையும் செய்வதில்லை. மற்றவர்களையும் எதுவும் செய்ய விடுவதும் இல்லை” என்று சொல்லி இருக்கிறார். அவர் எந்த நன்மையைச் செய்ய முன் வந்தார். அதனை எதிர்க்கட்சிகள் தடுத்தன என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா? அதைச் சொல்ல அவரால் முடியவில்லை.

பிரதமர் ஆவதற்கு முன்னால் கொடுத்த முக்கியமான மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அவர் என்ன செய்தார்?

*கருப்புப்பணத்தை மீட்பேன், ரூ.15 லட்சம் வரை இந்தியர்கள் பெறலாம்.

*விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை இரண்டு மடங்கு ஆக்குவேன்.

* ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பேன். ஆகிய மூன்று முக்கியமான இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதா? இல்லை என்றால், அதனை நிறைவேற்ற முடியாமல் தடுத்தது எதிர்க்கட்சிகளா?

கருப்புப்பணம்:

“இந்தியாவின் மோசடிப் பேர்வழிகள் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். அந்த பணத்தைத் திரும்பக் கொண்டு வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இலவசமாகப் பெறுவான். பா.ஜ.க. வெற்றி பெற்றால் கறுப்புப் பணத்தை மீட்போம்” என்று பேசினார் அன்றைய நரேந்திரமோடி அவர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆச்சு? ‘இப்படி சும்மா சொன்னோம்’ என்று உள்துறை அமைச்சரே சொல்லி விட்டார்.

2015 ஆம் ஆண்டு ஏ.பி.பி. ஊடகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், “தேர்தல் தந்திரமாக அப்படிச் சொன்னோம். இது ஒரு உருவகம் தான்” என்று கூறினார். “Modiji's statement was an idiomatic expression (jumla) that was given during the Lok Sabha polls” என்றார் அமித்ஷா. “ரூ.15 லட்சம் தருவதாக நாங்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அது ஜும்லா” என்று சொன்னவர் அமித்ஷா. ஜூம்லா என்ற இந்தி/ உருதுச் சொல்லுக்கு பொய்யான வாக்குறுதி, பொய்யான வாக்கியம், வெற்றுச் சொல் என்று பொருள்.

ரூ.15 லட்சம் கொடுக்கவில்லை. இவர்கள் கருப்புப்பணத்தை வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக மீட்டுக் கொண்டு வந்துவிட்டார்களா என்றால் அதுவும் இல்லை.

விவசாயப் பொருட்கள்:

“விவசாயிகளின் வருமானம் அனைத்தும் இரண்டு மடங்கு ஆக்குவேன். விவசாயிகள் பற்றி ஆராய எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையை காங்கிரசு அரசு செயல்படுத்தவில்லை. பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவோம். அதிக லாபத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன்” என்று பிரதமர் சொன்னார். ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எதுவும் செய்யவில்லை.

விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாக நடப்பதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து, விவசாயத்தை மேம்படுத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் அமைக்கப்பட்டது. விவசாயிகளின் விரக்தி, இறக்குமதி அனுமதிகள், வேளாண் விளை பொருட்களுக்கு சந்தையில் உத்தரவாதம் இல்லாத நிலை, பாசன வசதி, மின்சாரம், கடன்கள், இயற்கைச்சீற்றம், விளைபொருட்களுக்கு கட்டுப்படி விலை இல்லை - ஆகிய காரணங்களால் விவசாயிகள் தற்கொலை நடப்பதாக எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை சொன்னது. நிலச்சீர்திருத்தம் செய்ய வேண்டும், கடன் மற்றும் காப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டும், விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்குள் போட்டித்திறனை அதிகரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை சொன்னது.

இந்த அறிக்கையில் மிக முக்கியமானது ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது ஆகும். அதாவது உள்ளீட்டு செலவு, உழைப்புக்கூலி, நிலத்துக்கான வாடகை ஆகியவை கொண்டு முதலில் ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டும். அந்த தொகையில் 50 சதவிகிதத்தை மேலும் கூட்ட வேண்டும்.அதுதான் பொருளுக்கான ஆதாரவிலை என்று சொன்னது சுவாமிநாதன் ஆணையம். இதனைத் தான் தருவோம் என்று 2014 ஆம் ஆண்டுக்கு முன்னால் மோடி சொன்னார். ஆனால் பிரதமர் ஆன இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் செய்து தந்தாரா இல்லை.

‘எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்குப் போட்டார்கள். “சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை” என்று 2015 ஆம் ஆண்டு சொன்னதுதான் மோடி அரசு ஆகும்.

2017 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக இருந்த ராதாமோகன்சிங் என்பவர், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லவே இல்லை’ என்று சொன்னார்.2018 ஆம் ஆண்டு அமைச்சர் அருண்ஜெட்லி என்ன சொன்னார் தெரியுமா? “எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை முழுமையாக அமல்படுத்திவிட்டோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்று சொன்னார். எம்.எஸ். சுவாமி நாதன் ஆணைய அறிக்கையை அமல்படுத்தாதது மட்டுமல்ல; விவசாயிகளிடம் இருந்து மண்ணையும், விவசாயத்தையும் பறிக்கும் மூன்று வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்ததும் மோடி அரசு ஆகும்.

- தொடரும்

Also Read: ” இந்தி திணிப்புக்கு பின் சமஸ்கிருதம்”.. பா.ஜ.கவின் சூழ்ச்சி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!