murasoli thalayangam
”மணிப்பூர் கலவரத்தை அடக்கத்தான் துப்பில்லை அதுபற்றி பேச கூடவா துப்பில்லை?”.. ஒன்றிய அரசை சாடிய முரசொலி!
முரசொலி தலையங்கம் (26-07-2023)
பிரதமருக்கு எதிராக பா.ஜ.க.?
மணிப்பூர் கலவரத்தை அடக்கத்தான் துப்பில்லை என்றால் அதற்கான பதிலைக் கூடச் சொல்வதற்கு துப்பில்லாத ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. நாடாளுமன்றத்துக்கு வந்து இன்னமும் பதில் சொல்லவில்லை பிரதமர் நரேந்திர மோடி!
உலக நாடுகளுக்கு எல்லாம் போய் -– அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் எல்லாம் முழங்கி வரும் பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய நாடாளுமன்றத்துக்கு வந்து ஏன் பேச முடியவில்லை? அது INDIA நாடாளுமன்றமாக இருப்பதாலா?
மே மாதம் 4 ஆம் தேதி எரியத் தொடங்கியது மணிப்பூர். அன்றைய தினம் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார் பிரதமர்.
* மே 19- – 21 ஜப்பானில் இருந்தார்.
* மே 21- – 22 பப்புவா நியூ கினியாவில் இருந்தார்.
* மே 22- – 24 ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
* ஜூன் 20 –- 23 அமெரிக்காவில் இருந்தார்.
* ஜூன் 24 -– 25 எகிப்தில் இருந்தார்.
* ஜூலை 13- – 14 பிரான்சில் இருந்தார்.
* ஜூலை 15 - – துபாயில் இருந்தார்.
அவரை எந்த நாட்டுக்கும் போக வேண்டாம் என்று சொல்லவில்லை. அது அவர் விருப்பம். வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகத்தானே பிரதமர் ஆகி இருக்கிறார். போகட்டும்.
ஆனால் மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? மணிப்பூர் பிரதிநிதிகளை ஏன் அழைத்துப் பேசவில்லை? மணிப்பூரை ஏன் கட்டுப்படுத்தவில்லை? கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கக் கூட இல்லை? இதுதான் இந்திய மனங்களின் உள்ளத்தில் எழுந்துள்ள கேள்வி.
இது ஏதோ எதிர்க்கட்சியின் கேள்வி என்று அரசியல்படுத்தி விட வேண்டாம். பா.ஜ.க.வில் உள்ள மனசாட்சி உள்ள மனிதர்களின் கேள்விதான் இது.
மணிப்பூர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பாவோலியன்லால் ஹொக்கிப் அளித்த பேட்டியில் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்...
“பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரத்துக்கு முக்கியத்துவம் தராமல் அமெரிக்க பயணத்துக்கு முன்னுரிமை கொடுத்து தவறு செய்து விட்டார். அவரது பயணத்துக்கு முன்னதாக அவரைச் சந்திக்க நாங்கள் பல முறை முயற்சி செய்தோம். ஆனால் இப்போது வரையிலும் பிரதமர் மோடியைச் சந்தித்து எங்களால் முறையிட முடியவில்லை. ஒரு வாரம் தாமதம் தள்ளிப்போடுவதே மிகப்பெரிய தாமதம் ஆகும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கு 78 நாட்கள் ஆனது. மைத்தி போராளிக் குழுக்கள், போலீஸ் கமாண்டோக்களுடன் சேர்ந்து நடத்திய தாக்குதல் களே இந்த வன்முறைக்கு 99 சதவிகிதம் காரணம்” என்று சொல்லி இருக்கிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ.
“ஒரு சார்புடைய அரசாங்கம் அமைதிக்கு கேடு விளைவிக்கும்” என்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இவர் சொல்லி இருக்கிறார். மணிப்பூர் போலீசாரும், வன்முறைக் குழுக்களும் சேர்ந்து நடத்திக் கொண்டு இருக்கும் கொடூரம் இது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. சொல்கிறார்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். ‘ஆளும் பா.ஜ.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக’ பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
* கரம்ஷியாம் சிங்
* தோக்சோம் ராதே ஷியாம் சிங்
*நிஷி கண்ட் சிங் சபம்
* குவைராக்பம் ரகுமணி சிங்
* பிரோஜன் சிங்
* டி.ரபிந்ரோ சிங்
* எஸ்.ரஜேன் சிங்
* எஸ்.கேபி தேவி
* ஒய்.ராதே ஷ்யாம் -– ஆகிய ஒன்பது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி இருந்தார்கள்.
* பா.ஜ.க. அரசு மீதும், நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க சிறப்பான நடவடிக்கை உடனடியாக எடுத்தாக வேண்டும்.
* மைத்தி மற்றும் குக்கி இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
* அமைதியை நிலைநாட்டுவதற்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பாதுகாப்புப் படைகளை நிறுத்த வேண்டும்.
* மாநிலத்தின் ஒருமைப்பாட்டில் எந்தவிதமான சமரசமும் செய்யக் கூடாது.
* குறிப்பிட்ட சமூகத்துக்கான தனிநிர்வாகம் என்ற வேண்டுகோள் எக்காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது. –
என்ற ஐந்து கோரிக்கைகளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்தார்கள். அதற்கும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் செவி சாய்க்கவில்லை. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங், உடனே தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ. க்கள் சிலரைப் போய் அமித்ஷாவை சந்திக்க வைத்தார். அதாவது சொந்தக் கட்சிக்கார எம்.எல்.ஏ.க்கள் சொல்வதையே இவர்கள் கேட்கவில்லை
மணிப்பூரில் உள்ள தேவாலயங்கள் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் மாநில பா.ஜ.க.வின் துணைத் தலைவர் ஆர்.வன்ராம்சுவாங்கா தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதுவரை 357 தேவாலயங்கள் எரிக்கப்பட்டு இருப்பதாக பா.ஜ.க. துணைத் தலைவர் ஆர்.வன்ராம்சுவாங்கா சொல்கிறார்.”
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். தேவாலயங்கள் எரிக்கப்பட்டதை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கண்டிக்கவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து ஒரு வார்த்தை கூட கண்டனம் வரவில்லை. மணிப்பூரில் கிறித்துவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டதற்கு மாநில அரசு, ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆதரவு அளித்தார்கள் என்று நம்புகிறேன்” என்று மிசோரம் மாநிலத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் பா.ஜ.க. துணைத் தலைவர் ஆர்.வன்ராம்சுவாங்கா குற்றம் சாட்டி இருக்கிறார். ஜூலை 14 ஆம் தேதி பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
குக்கி சமூக மக்களுக்கு தனி உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கடந்த மே மாதமே மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் பிரேன்சிங்குக்கு கடிதம் எழுதினார்கள். அதில் 7 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்.
இவை எல்லாம் எதைக் காட்டுகிறது. மனசாட்சியுள்ள சில பா.ஜ.க. பிரமுகர்களுக்கு எதிராகவே பிரதமரின் செயல்கள் இருக்கின்றன என்பதைக் காட்டவில்லையா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!