murasoli thalayangam
”பாசிச பா.ஜ.கவின் பசிக்கு பலியாகும் அப்பாவி மணிப்பூர் மக்கள்”.. முரசொலி கடும் தாக்கு!
முரசொலி தலையங்கம் (24-07-2023)
எரிவது யாரால்?
எரியும் மணிப்பூர் தீயை ஏன் அணைக்கவில்லை என்று பா.ஜ.க. மீது கேள்வி எழுப்பப்படுகிறது. நியாயமான கேள்விதான். மணிப்பூர் மாநிலத்தை ஆள்வதும் பா.ஜ.க. ஒன்றியத்தை ஆள்வதும் பா.ஜ.க. அவர்கள் தான் அந்தத் தீயை அணைக்க வேண்டும். மே 4 ஆம் தேதி தொடங்கிய பிரச்சினையை சூலை மாதக் கடைசி வரைக்கும் அவர்களால் ஏன் அடக்க முடியவில்லை? எதனால் என்றால்.. அதை அந்தப் பிரச்சினையை உருவாக்கியதே அவர்கள்தான்.
இங்கு வாழும் 53 விழுக்காடு மக்கள் மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் மலைப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள். ‘மைத்தி' மக்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். குக்கி பழங்குடியினர் சிறுபான்மை கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்கள்.
குக்கி பழங்குடியின மக்களுக்கு தரப்பட்டுள்ள உரிமையை மைத்தி இன மக்கள் கேட்கிறார்கள். இதனை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்கிறது. மைத்தி இன மக்களை பழங்குடியினராக சேர்ப்பது குறித்து மாநில அரசு நான்கு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று மணிப்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19 அன்று தீர்ப்பளிக்கிறது. தனது முடிவை மாநில அரசு எடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
ஏற்கனவே அனைத்து வசதிகளையும் அடைந்து வரும் மைத்திகளுக்கு பழங்குடியின சலுகையும் கொடுத்தால் இதில் உள்ள இடங்களையும் அவர் களே அடைவார்கள் என்று குக்கி மக்கள் பயந்தார்கள். எனவே, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கினார்கள். ஏப்ரல் 23 அன்று வேலைநிறுத் தம் நடந்தது. மே 3 அன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பேரணி நடத்தி னார்கள் குக்கி இன மக்கள். 'மைத்தி இனப்பெண்ணை குக்கி பழங்குடியினர் பாலியல் வன்கொடுமை செய்ததாக' வதந்தி கிளப்பினார்கள். அதன் பிறகு வன்முறை வெடிக்கத் தொடங்கியது.
மொத்தமுள்ள 60 உறுப்பினர் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் 40 உறுப்பினர் கொண்ட தொகுதிகளில் மைத்தி இன மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். தனது அரசியல் லாபங்களுக்காக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முயற்சிக்கிறது பா.ஜ.க. ஆய்வாளர் கார்த்திக் புகழேந்தி இதுகுறித்த பல்வேறு தகவல்களை விரிவாக எழுதி இருக்கிறார்.
"மணிப்பூரின் இரு இனக் குழுக்களுக்கு இடையே பரப்பிவிடப்பட்ட இந்த வெறுப்பரசியல், வன்முறை, கலவரங்களுக்குப் பின்னால், நீதிமன்ற உத்தரவு மட்டுமல்ல... மதம், அரசியல், பொருளாதார வளச் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களும் இருக்கின்றன. 2022-ல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க. 32 இடங்களில் வென்றது. அவற்றில் இம்பால் (17), பிஷ்னுபூர் (4) சுரசந்த்பூர்(3), சந்தேல் (2) ஆகிய பா.ஜ.க. வென்ற தொகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் மைத்திகள்.
300 ஆண்டுகள் பழமையான மைத்திகளின் 'சனமகி' பண்பாடும். மத சம்பிரதாயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடக்கிறது. இதனால். பெரும்பான்மை மைத்திகள் மீது அக்கறை காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு, சிறுபான்மையினரான கிறிஸ்தவ குக்கி பழங்குடிகளை அவர் களுக்கு நேரெதிராக நிறுத்தும் அரசியல் அங்கு பா.ஜ.க. வுக்குப் பலனளித்தி ருக்கிறது. இதற்காக, மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மைத்திகள் தரப்பிலான கோரிக்கை முதன்மைபடுத்தப்படுகிறது. இது பழங்குடியினரை சமவெளி களில் இருந்து வெளியேற்றுவதற்கான மறைமுகக் குரல்தான்.
ஒருபுறம், காட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியினர் வாழும் மலைப் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, அவர்களின் வீடு. கட்டடங்களை இடிக்கும் பணிகளையும் ஆளும் பா.ஜ.க. அரசு மேற்கொள் கிறது. மறுபுறம், சட்டமீறல்களுடன் மலைப் பகுதியில் பழங்குடியினர் அல்லாத வர்களின் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே, அண்டை நாடுகளிலிருந்து குக்கி இனப் பழங்குடிகள் மணிப்பூரில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றும், அவர்களை உள்ளூர் குக்கி மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றும் திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரம் அங்கு மேற்கொள்ளப்படுகிறது.
மணிப்பூரிலும் அரம்பை தெங்கால், மைத்தி - லீபன் உள்ளிட்ட சில பாசிச பா.ஜ.க.வின் ஆசிபெற்ற அமைப்புகளே இந்த வன்முறையினை முன்னின்று நடத்தியிருக்கின்றன. நவீன ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங் களை ஏந்தியபடி இருசக்கர வாகனங்களில் கும்பலாகச் சென்று, காவல் நிலையங்களைச் சூறையாடி, குக்கி பழங்குடி கிராமங்களில் புகுந்து, அவர் களின் வீடுகளை, பொருட்களை, பெண்களை, ஆண்களை நாசம் செய்து கொலைகளில் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகளின் முக்கியக் கொள்கை, மணிப்பூரின் மன்னர் காலத்துப் பண்பாடான ‘சனமகி” ராஜ்ஜியம் திரும்பவும் வரவேண்டும் என்பதுதான். மணிப்பூர் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைமை யகத்தில் பறப்பது இவர்களின் சனமகி கொடியே" என்று எழுதி இருக்கிறார் கார்த்திக் புகழேந்தி. ஏன் பா.ஜ.க. மவுனம் காக்கிறது என்று தெரிகிறதா?
யாரால்? என்றால் இவர்களால்தான். அதனால்தான் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மணிப்பூரில் நடப்பது சட்டம் ஒழுங்கு மீறல் அல்ல. பா.ஜ.க. ஆதரவு சக்திகளால் உருவாக்கப்பட்ட சமூகக் குழப்பம் ஆகும். அதனால்தான் வேண்டுமென்றே மவுனம் காக்கிறார்கள். இவர்களது மவுனத்துக்கான பலிகளே அப்பாவி மக்கள். பாசிச பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!