murasoli thalayangam
மணிப்பூர் கொடூரம் பாஜக ஆளாத மாநிலத்தில் நடந்திருந்தால், என்ன பேசி இருப்பார் பிரதமர் ? -முரசொலி கேள்வி!
முரசொலி தலையங்கம் 922.7.2023)
நிர்வாண தேசத்தில்
எதைக் கற்பித்திருக்கிறது சமூகம்?
இரண்டு பெண்களின் உடை களையப்படுகிறது. உடை களைபவன் கொடூரன். உடை களையப்பட்ட பெண்ணை இழுத்து வருகிறது ஒரு கும்பல். எவருக்கும் குற்ற உணர்வு இல்லை. இந்தக் கொடூரக் கும்பலை வேடிக்கை பார்க்கிறது இன்னும் பல கும்பல்கள். இவர்களுக்கு எந்த வெட்க உணர்வும் இல்லை.
இது மட்டுமா கொடூரம்? இதனை விட கொடூரம் ஒன்று உண்டு. 80 நாட்களாக எரியும் மணிப்பூர் பற்றி கருத்துச் சொல்லாமல் ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்தியாவின் பிரதமர். இந்த எண்பது நாட்களில் உலகின் எத்தனையோ நாடுகளுக்குப் போய்த் திரும்பி விட்டார். “இந்தியா ஜனநாயக நாடு' என்று வாய் கிழியப் பேசி விட்டார். இன்னும் சில நாடுகளில் விருதுகளே வாங்கி வந்துவிட்டார். இவர் விருதுகளைப் பெற்று கையொலி வாங்கிக் கொண்டு இருக்கும்போதுதான் - இங்கே மணிப்பூரில் இரண்டு பெண்கள் நீர்வாணம் ஆக்கப்படுகிறார்கள்.
"குற்றவாளிகளை நான் விடமாட்டேன், சட்டத்தின்முன் நிறுத்துவேன்' என்கிறார் பிரதமர். பறந்த மானமும் தன்மானமும் அறமும் நெறியும் மீண்டும் கிடைக்குமா? இதே மாதிரியான வக்ரம், பா.ஜ.க. ஆளாத மாநிலத்தில் நடந்திருந்தால், என்ன பேசி இருப்பார் பிரதமர்? அந்த மாநிலத்தின் முதலமைச்சர்தான் அந்தப் பெண்களின் உடையைக் களைந்தார் என்று பேசி இருக்க மாட்டாரா? இப்போது வாயடைத்து நிற்கிறார்களே பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் - என்ன காரணம்? பழங்குடியினர் அல்லாத உயர்ஜாதிப் பெண்ணுக்கு இது நடந்திருந்தால்...? பேசுவீர்களே மணிக்கணக்கில்! இப்போது வாயடைத்து நிற்க என்ன காரணம்? உலகின் ஐந்தாவது பெரிய ராணுவம், மணிப்பூரில் என்ன செய்தது?
மணிப்பூர் எரிய எண்ணெய் வார்த்தது உங்களது சட்டம். ஒன்றாய் வாழ்ந்த மக்களிடையே மதவேறுபாட்டை விதைத்து நச்சுக் கருத்துக்களைப் பரப்பி, வாக்கு வாங்கு வதற்காக இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையைக் கெடுத்தீர்கள். இதனால்தான் நூற்றுக்கணக்கில் மரணங்கள். பல்லாயிரக்கணக்கில் வேறு மாநிலம் போய்விட்டார்கள். சொந்த மாநிலத்தில் அகதி முகாம்களில் பதுங்கி இருக்கிறார்கள் மக்கள். வீடுகள் இடிக்கப்படுகின்றன. கடைகள் நொறுக்கப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்படுகின்றன. இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா எங்கே போனார்? என்ன செய்ய முடிந்தது அவரால்? 80 நாட்களில் ஒரே ஒரு நாள்கூட மணிப்பூர் போகவில்லை பிரதமர். மணிப்பூரில் இருந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், பழங்குடி அமைப்பினரையாவது பார்த்தாரா? அதுவும் இல்லை. மணிப்பூர் பற்றி ஆலோசிக்க மிகத்தாமதமாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலாவது கலந்து கொண்டாரா பிரதமர்? அதுவும் இல்லை. அவர் வெளிநாட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்து கூட்டத்தை நடத்தினார்கள். மணிப்பூர் ஆலோசனைக் கூட்டத்தை வெளிநாட்டில் நடத்தி இருந்தால் ஒருவேளை அவர் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.
ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இலண்டன் வாழ் இந்தியர்கள் மத்தியில் எல்லாம் போய் பேசும் பிரதமரால், இந்திய வாழ் இந்தியர்கள் முன்னால் ஏன் பேச முடியவில்லை? நிமிர்ந்து ஏன் நிற்க முடியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்ணைப் பார்த்து ஏன் பதில் பேச முடியவில்லை? “இவை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு எண்பது நாட்களா?' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்ல; சொந்த பா.ஜ.க. உறுப்பினர்களே ‘மனசுக்குள்' கேட்க மாட்டார்களா? நினைக்க மாட்டார்களா?
மே மாதம் 4 ஆம் நாள் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. அந்த நாளில் தான் கர்நாடக மாநிலத்தில் வாகனம் முழுக்க பூக்கோலம் பூண நகர்வலம் வந்து, பா.ஜ.க.வுக்காக வாக்குக் கேட்டுக் கொண்டு இருந்தார் பிரதமர். மூன்று பெண்கள் உடை களையப்பட்டு உள்ளார்கள். இதனைத் தடுத்த ஒரு பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண்ணின் சகோதரர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ வெளியானது சூலை 18. இப்போதுதான் மணிப்பூர் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன்சிங் சொல்கிறார்: 'ஒரு குற்றவாளியைக் கைது செய்துவிட்டோம்' என்று!
வீடியோ வெளியாகி உலகம் கொதித்தபிறகு கைது செய்யலாம் என்று காத்திருந்தாரா? கைது செய்யப்பட்டது கூட உண்மையாக இருக்குமா எனச் சந்தேகமாக இருக்கிறது. "எங்களை வன்முறைக் கும்பல் புதருக்குள் வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்றார்கள். அப்போது போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. அதில் நான்கு போலீஸ்காரர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். வன்முறைக் கும்பல் எங்களை இழுத்துச் செல்வதை அந்த நான்கு போலீஸ்காரர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவவில்லை" என்று ஒரு பெண் பேட்டி அளித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த மணிப்பூர் காட்சி. காவல் நிலையங்களில் - துணை ராணுவப் படையிடம் இருந்த துப்பாக்கிகளை வன்முறையாளர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள். அங்கு வன்முறையாளர்கள் கையில் இருப்பது எல்லாம் 'அரசாங்க' துப்பாக்கிதான். பா.ஜ.க. ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் மணிப்பூரில் வெடிக்கும் துப்பாக்கி ரவைகள்.
பத்தாண்டு காலமாக மணிப்பூரில் கிறித்துவ - சிறுபான்மை - பழங்குடி – மக்களுக்கு எதிராக மதவாதப் பிரச்சாரம் செய்தவர்கள் அல்லவா இந்தக் கொடூரத்துக்குக் காரணம்? பத்தாண்டு காலமாக இந்திய சமூகப் பரப்பில் வெறுப்புணர்வுப் பேச்சு களை விதைத்தவர்கள் அல்லவா இந்தக் கொடூரத்துக்குக் காரணம்? நிர்வாணம் ஆக்கி அழைத்து வந்தவர்களை விட - வேடிக்கை பார்த்த மாநில பா.ஜ.க. அரசும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் அல்லவா இந்தக் கொடூரத் துக்குப் பொறுப்பேற்க வேண்டும்?எண்பது நாட்கள் கழித்து, 'அசிங்க வீடியோ வெளிவந்த பின்னால், “நாடு அவமதிக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் சொல்வது எத்தகைய கொடூரச் சூழலில் மனித வாழ்க்கை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டவில்லையா? பா.ஜ.க.வின் பேரழிவுக்கு சாட்சியமாக இருக்கிறது மணிப்பூர்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!