murasoli thalayangam
அப்போது ஊழல்வாதி.. இப்போது பா.ஜ.க.வாஷிங் மெஷினால் சுத்தமாகிவிட்டார் அஜித் பவார்: முரசொலி!
முரசொலி தலையங்கம் (05-07-2023)
''பா.ஜ.க. வாஷிங் மெஷின்''
பா.ஜ.க.வின் வாஷிங் மெஷின் மீண்டும் தனது பணியைத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிராவில் இப்போது பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவர்களை, அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் சி.பி.ஐ.யும் துரத்தி வருகிறது. இவர்கள் இப்போது பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த தால் அனைவரும் சுத்தமாக்கப்பட்டுள்ளார்கள்" –என்று ஒன்றிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார். ஆமாம்! பா.ஜ.க.வின் வாஷிங் மெஷினில் போட்டதும் அஜித்பவார் சுத்தமாகி விட்டார்.
கடந்த 2021, அக்டோபர் 7ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது மூன்று சகோதரிகளின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மும்பை, புனே, கோவா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அஜித் பவாருக்கு சொந்தமான, நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரிக்கணக்கில் காட்டப்படாத கருப்புப்பணம் கண்டறியப்பட்டதாகவும், 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 4.32 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அஜித் பவாருக்கு, அவர் பெயரிலும் அவரது பினாமிகள் பெயரிலுமாக மொத்தம் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு உள்ளதாக வருமான வரித்துறை செய்தியை கசியவிட்டது. 'என்னை மிரட்ட முடியாது' என்றார் அஜித் பவார். இப்போது அஜித் பவார் பயந்துவிட்டார். அவர் மீது ரெய்டு நடத்திய பா.ஜ.க.கட்சி, அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்கி மகிழ்ந்துள்ளது.
ஊழல்வாதியான அஜித் பவார், இப்போது சுத்தமானவராக ஆக்கப்பட்டு விட்டார் பா.ஜ.க.வாஷிங் மெஷினால்!
அஜித் பவாருக்குச் சொந்தமான ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. இப்போது அவர் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்ச ராக இருக்கிறார். அவரது வீட்டுக்கு மேல்விசாரணை நடத்த அமலாக்கத்துறை போகுமா? 18 மணி நேரம் வேண்டாம்... 1 மணி நேரமாவது விசாரணை நடத்துமா அமலாக்கத்துறை?!
அணி மாறி பா.ஜ.க.ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள 9 பேரில் அஜித்பவார் உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அஜித் பவார் மீது நீர்பாசன திட்ட வழக்கு உள்ளது. ஹசன் முஷ்ரிப் மீது சர்க்கரை ஆலை வழக்கு உள்ளது. சகன் புஜ்பால் மீது கட்டுமான வழக்கு உள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் இவர். அதிதி தட்கரேயின் தந்தை மீது நீர்பாசன வழக்கு இருக்கிறது. அணி மாறி இருக்கும் பிரபுல் படேல் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை உள்ளது.இவர்கள் அனைவரும் பா.ஜ.க.வின் வாஷிங் மெஷினால் வெளுக்கப்பட்டு விட்டார்கள்.
2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்தது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க.வும் சிவசேனாவும் ஒருமித்த முடிவுகளை எடுக்கவில்லை. அதனால் ஆட்சி அமைக்கவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க.வும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தது. பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக ஆனார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் துணை முதலமைச்சர் ஆனார். இந்த ஆட்சி மூன்றே நாளில் முடிவுக்கு வந்தது. அஜித் பவார் மீதான அனைத்து வழக்குகளையும் பா.ஜ.க. அரசு திரும்பப் பெற்றது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைந்தது. அப்போது சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதலமைச்சர் ஆனார். இதனை பா.ஜ.க.-வால் பொறுக்க முடியவில்லை. சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே என்பவரை இழுத்து அந்தக் கட்சியை உடைத்தது. அவர் சிவசேனா எம்.எல்.ஏ.க்களை கடத்தி வந்தார். அந்த மாநிலத்தை விட்டே வேறு மாநிலத்தில் அடைத்து வைத்திருந்தார்கள். இதனால் பெரும்பான்மை ஆதரவை உத்தவ் தாக்கரே இழந்தார். அதனால் தனது பதவியை விட்டு அவர் விலகினார்.
சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டேவுடன் கை கோர்த்து பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார்கள். பா.ஜ.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னவிஸ், துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக் கொண்டார்.ஏதாவது கிடைத்தால் போதும் என்று நினைத்தார் பட்னவிஸ்.
இந்த நிலையில்தான் ரெய்டுக்கு மேல் ரெய்டு நடத்தி தேசியவாத கட்சியில் இருந்து அஜித் பவார் இழுக்கப்பட்டார். இப்போது ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர். பட்னவிஸோடு சேர்ந்து அஜித் பவாரும் துணை முதலமைச்சர். ஏதாவது கிடைத்தால் போதும், ரெய்டில் இருந்து தப்பினால் போதும் என்று நினைக்கிறார் அஜித் பவார்.
இவ்வளவும் 2019 அக்டோபர் முதல் 2023 ஜூலை வரை நான்காண்டு காலத்தில் நடந்தவை ஆகும். படிக்கும் போதே நாற்றம் அடிக்கிறதா? இதுதான் பா.ஜ.க. பாணி அரசியல் ஆகும்.
சிவசேனாவில் இருந்து உடைக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர். தேசியவாத காங்கிரசில் இருந்து மிரட்டி அழைத்து வரப்பட்ட அஜித் பவார், துணை முதலமைச்சர். இந்த லட்சணத்தில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆள்கிறதாம்! இத்தகைய கீழ்த்தரமான சம்பவங்களின் மூலமாகத்தான் ஆள்கிறது பா.ஜ.க.;ஆள நினைக்கிறது பா.ஜ.க.!
'மூன்று எஞ்சின் அரசு இது' என்று தங்கள் மூன்று பேரையும் வர்ணித்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இது வளர்ச்சிப் பாதையில் முன்னேறுமாம். ஒன்று பஸ் எஞ்சின். இன்னொன்று பைக் எஞ்சின். மற்றொன்று ஆட்டோ எஞ்சின். மூன்றையும் ஒரே வண்டியில் பொருத்தினால் என்ன ஆகும்? அதுதான் அடுத்தடுத்து நாம் பார்க்க இருக்கும் அரசியல் ஆகும். ஏக்நாத் ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும், அஜித் ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ.க.வில் இணைத்துவிட்டு இவர்கள் இருவரையும் தூக்கி வெளியில் வீசப் போகிறார்கள். அதையும் பார்க்கத்தானே போகிறோம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!