murasoli thalayangam
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசிசவாதிகளை வீழ்த்திய சோவியத் ஸ்டாலினாகவே பாஜகவினருக்கு தெரிகிறார்- முரசொலி !
முரசொலி தலையங்கம் (28-06-23)
ஆமாம்! அந்த ஸ்டாலின்தான்!
பாட்னாவில் ஏற்பட்ட அகில இந்தியக் கட்சிகளின் ஒற்றுமை என்பது மகத்தான சாதனைதான் என்பதை பா.ஜ.க.வின் பய அலறலைப் பார்த்தாலே உணர முடிகிறது!
"அவர்கள் சேர்ந்தே இருக்க மாட்டார்கள்' என்று சொல்லி தனக்குத் தானே மனதைத் தேற்றிக் கொள்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 'காங்கிரசை ஒரு காலத்தில் எதிர்த்தவர்கள் எல்லோரும் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளார்கள்" என்று நடுங்குகிறார் பா.ஜ.க. தலைவர் நட்டா. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு "ஸ்டாலின்' என்ற பெயரே பயமுறுத்துவதாக அமைந்துள்ளது. “ஸ்டாலின் என்பது ரஷ்ய சர்வாதிகாரத்தின் பெயர். அதேபோல் சர்வாதிகாரத்தை ஸ்டாலின் செய்கிறார்" என்கிறார் ராஜ்நாத்சிங். மிரண்ட கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்பதைப் போல இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஸ்டாலின் என்ற பெயர் ஹிட்லர்களை வீழ்த்திய பெயர் என்பதால் ராஜ்நாத்சிங்குகள் பயம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சாதனைகளாக இவை பட்டியலிடப்படுகின்றன. மார்க்சியம் - லெனினியம் என்ற தத்துவத்தைக் காத்து நின்றார். தாய்மொழி தேசிய இனப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். முதலாளித்துவத்துக்கு சோவியத்தில் முடிவு கட்டினார். சோசலிச ஆட்சி முறையே முதலாளித்துவத்துக்கு மாற்று என்பதை நிரூபித்தார். உலகில் முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். சோவியத்தை மாபெரும் தொழில் வல்லரசு ஆக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்து குடிமக்களுக்கும் சமூக பாதுகாப்பு, எழுத்தறிவின்மை முழுமையாக நீக்கம் ஆகியவற்றைச் செய்து காட்டினார். இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் வெற்றி பெற வழிகாட்டினார். கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளை உருவாக்கினார். வெளிநாடுகளில் நடந்த பாட்டாளி வர்க்க போராட்டங்களை ஆதரித்தார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இருந்தார். இவைதான் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் சாதனைகள் ஆகும்.இவை எதுவும் ராஜ்நாத் சிங் கண்ணுக்குத் தெரியவில்லை. பிற்போக்கு வாதிகளின் கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். புரட்சியாளர்களையும், சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களையும் இப்படித்தான் பிற்போக்குவாதிகள் காலம் காலமாக கொச்சைப்படுத்தி வந்துள்ளார்கள்.
"விவசாயிகளுக்கு நிலம், உழைக்கும் வர்க்கத்துக்கு பாதுகாப்பு, ரஷ்யாவின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஜனநாயகக் குடியரசு" என்று அறிவித்தார் ரஷ்ய அதிபர். அதைச் செய்தும்காட்டினார். ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகம் செய்து சோவியத்தை மீட்டெடுத்தது ஸ்டாலினின் சாதனையாகும். முதலாளித்துவ நாடுகள் தொழில் வீழ்ச்சியில் இருந்தபோது, 1920களின் இறுதியில் சோவியத் பொருளாதாரம் மட்டும் இரண்டு மடங்கு வளர்ச்சியைக் கண்டது. அனைத்துத் தொழில்களும் வளர்ச்சியைக் கண்டது. 1932 ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் தொழில் துறை 334 விழுக்காடு வளர்ச்சியை பெற்றிருந்தது. அமெரிக்கா 84 விழுக்காட்டிலும், இங்கிலாந்து 74 விழுக்காட்டிலும் இருந்தன. தானிய உற்பத்தி பொங்கி எழுந்தது. பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரஷ்யாவை முன்னணி தொழில் வளர்ச்சி நாடாக மாற்றியது தான் ஸ்டாலினின் சாதனையாகும். இந்த சாதனைகளை ஒப்புக் கொள்ள மறுப்பவர்கள், ரஷ்ய அதிபரை சர்வாதிகாரி என்று குறை சொல்லத்தான் செய்வார்கள். சோசலிசத்தின் சாதனைகளை, இதுபோன்ற பொய்களின் மூலமாக நிராகரிப்பார்கள்.
பாட்டாளி வர்க்கமே ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் அரசதிகாரமாக அது இருந்தாலும், வேற்றுமைக்கு உரிய மரியாதை கொடுக்கும் கட்டமைப்பை ரஷ்யாவில் லெனினும் ஸ்டாலினும் வழிமொழிந்தார்கள். ரஷ்ய மக்களின் சமத்துவம் மற்றும் இறையாண்மை, பிரிந்து சென்று சுதந்திர அரசு அமைக்கும் அளவுக்கு ரஷ்ய மக்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை, சிறப்புரிமைகள் நீக்கம், தேசியசிறுபான்மையினருக்கும் இனக்குழு வினருக்கும் சுதந்திரமான வளர்ச்சி என்று அறிவிக்கப் பட்டது. தேசிய இனங்களுக்கான தனி அமைச்சரே இருந்தார் ரஷ்யாவில். ஸ்டாலினே சில காலம் அந்த அமைச்சராகவும் இருந்தார். மகா ரஷ்ய தேசிய வெறியைக் கண்டிப்பதில் முதல் ஆளாக இருந்தார் ஸ்டாலின். இவையே ஸ்டாலினிசத்தின் சர்வதேச அடையாளங்கள் ஆகும். சர்வாதிகாரி என்ற ஒற்றைச் சொல்லின் மூலமாக இவற்றை எல்லாம் மறைக்கப் பார்க்கிறார் ராஜ்நாத் சிங்.
காங்கிரசுடன் சேர்வதையும், ஒரு காலத்தில் காங்கிரசுக்கு எதிராக அணி சேர்ந்தவர்கள் இன்று அதனையும் இணைத்துக் கொள்கிறார்களே என்றும் குறை சொல்கிறது பா.ஜ.க. அதற்கும் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். உலக அரசியலில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் தீர்மானித்த போது அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளுடன் இணைந்து அவர்களை வீழ்த்த வழி காட்டியவர்தான் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆவார். நாடுகளையேகூட ஜனநாயக ஏகாதிபத்தியம், பாசிச ஏகாதிபத்தியம் என்று பிரித்துச் சொன்னவர் அவர்தான். 'எந்த இரண்டும் ஒன்றல்ல, எதிலும் முதன்மை தரத்தக்கது ஒன்றுண்டு' என்று சொன்னவர் அவரே. "எதிரி மிகக் கொடூரமாக சோவியத்தை அழிக்க முனைகிறார்; சோவியத் தேசிய இனங்களை அழித்து ஜெர்மன் இளவரசர்களின் அடிமையாக மாற்ற நினைக்கிறார்" என்றார் அன்றைய ஸ்டாலின்.
இதோ இன்றைய நிலைமைக்கு எதிராக பாட்னா அணிச் சேர்க்கையானது இத்தகைய எச்சரிக்கையைத்தான் இந்தியாவுக்குத் தந்துள்ளது. ஒற்றைத் தன்மை கொண்ட நாட்டை உருவாக்கி ஒரு மனிதக் குடையின் கீழ் இந்திய ஜனநாயகத்துக்கான முடிவுரையை எழுத நினைப்பவர்களுக்கு முடிவுரை தீட்டப்படவேண்டும்.இதற்கான தொடக்கத்தை பாட்னா விதைத்து விட்டது. அதனால்தான் நட்டாவும், அமித்ஷாவும், ராஜ்நாத்சிங்கும் அலறுகிறார்கள். அவர்களுக்கு பாசிசவாதிகளை வீழ்த்திய ஸ்டாலினாகவே இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தெரிகிறார்.ஆமாம்! அது உண்மை தான்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?