murasoli thalayangam
9 ஆண்டுகளாக மோடியின் மெகா போட்டோஷூட்டைத் தான் இந்தியாவே பார்க்கிறது.. - முரசொலி தாக்கு !
பாட்னாவும் வாசிங்டனும் 1
இந்தியாவின் எதிர்காலத்துக்கான பாதையை பாட்னா வகுத்துக் காட்டி இருக்கிறது. வழிகாட்டி இருக்கிறது! பாட்னாவில் கூடினோம், மகிழ்ச்சியோடு திரும்பினோம்" -என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த வரிகளிலேயே மொத்தமும் அடங்கி இருக்கிறது.
“ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் கூட்டினார். பா.ஜ.க. என்று சொல்வதால் தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணியாக இதனை யாரும் நினைக்க வேண்டாம். இந்தியாவின் ஜனநாயகத்தை மக்களாட்சியை மதச்சார்பின்மையை பன்முகத்தன்மையை ஒடுக்கப்பட்ட மக்களை ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டு மானால் பா.ஜ.க. மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் தெளிவாக இருக்கிறோம். இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் சொல்லி இருக்கிறேன்" என்பதைக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “2023 ஜூன் 23 ஆம் தேதி கூடினார்கள் - 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும் தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் நான் சொல்லி இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்கள்.
"பா.ஜ.க.வை வீழ்த்துவதை அனைத்துத் தலைவர்களும் ஒற்றை இலக்காகக் கொண்டு விட்டார்கள். பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டு விட்டது" என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருப்பதே இந்திய நாட்டுக்குச் சொன்ன நற்செய்தி ஆகும்.
மம்தா பானர்ஜி வரமாட்டார், அகிலேஷுக்கு ஆர்வம் இல்லை, அரவிந்த் கெஜ்ரிவால் நிச்சயம் வரமாட்டார் என்று தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள். அந்தக் கட்சியுடன் இந்தக் கட்சி சேராது, இவர்கள் இருந்தால் அவர்கள் வர மாட்டார்கள் என்று எழுதி வந்தார்கள். அவர்கள் ஆசையில் மண் விழ. அனைவரும் வந்துவிட்டார்கள்.
இப்போது இந்தியாவில் இருக்கும் மற்ற கட்சிகளின் பெயரை எழுதி அவர்கள் எல்லாம் பாட்னா வரவில்லை என்று எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். பாட்னாவுக்கு அழைப்பு விடுத்தவர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள். அழைக்கப் படாதவர்கள் எப்படி வருவார்கள்? காங்கிரசு பா.ஜ.க. ஆகிய இரண்டையும் எதிர்க்கும் சில கட்சிகளுக்கு பாட்னா கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மையே தவிர, அவர்கள் வரவில்லை என்பது உண்மையல்ல.
பாட்னா கூட்டம் வெற்றி என்பதன் அடையாளம்தான் அமித்ஷா பேச்சில் தெரிகிறது. 'அது எதிர்க்கட்சிகளின் போட்டோஷூட்' என்று வயிற்றெரிச்சலைக் காட்டி இருக்கிறார் உள்துறை அமைச்சர். ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவே மோடியின் போட்டோஷூட்டைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அவர் எந்த உடை போடவில்லை? எந்த தொப்பி வைக்கவில்லை? யார் வேஷம் கட்டவில்லை? சுமார் ஆயிரம் வேஷங்களில் பிரதமரின் புகைப்படம் இணையத் தளங்களில் இருக்கிறது. மெகா போட்டோஷூட் தான் பா.ஜ.க. ஆட்சியே.
குஜராத் முன்னேறிவிட்டது என்று போலியான 'போட்டோ ஷாப்' மூலமாக ஆட்சியைப் பிடித்து, நித்தமும் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டு இருப்பதுதான் பா.ஜ.க.வின் ஆட்சியே தவிர, எதிர்க்கட்சிகள் நடத்துவது போட்டோஷூட் அல்ல!
முதலில் இது எதிர்க்கட்சிகளின் கூட்டம் அல்ல. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொல்லி இருக்கிறார்: “நாங்கள் எதிர்க்கட்சிகள் அல்ல, பாரத மாதாவை நேசிக்கும் தேசபக்தி கொண்ட இந்தியக் குடிமக்கள்" என்று சொல்லி இருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகம், ஒன்பது ஆண்டுகளாகக் கருகிக் கொண்டு இருக்கிறது. அதனைக் காப்பாற்றுவதற்கான கூட்டத்தின் தொடக்கம்தான் பாட்னா. “மீண்டும் இந்த அரசு வந்தால் இந்தியாவில் தேர்தல்களே நடக்காது" என்கிறார் மம்தா. “மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற பெயரை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது. நாம் அதனை பாதுகாக்க விரும்பு கிறோம்" என்று சொல்லி இருக்கிறார் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி.
மணிப்பூர் ஐம்பது நாட்களாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகம் பேசி வருகிறார் இந்தியப் பிரதமர். இந்தியாவில் ஜாதி, மதப் பாகுபாடு இல்லையாம். இந்தியாவில் பத்திரிக்கையாளர்களைப் பார்த்தே பழக்கம் இல்லாத பிரதமரிடம்,"இந்தியாவில் சிறுபான்மை யினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமர்சிப்பவர்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகிறதே?" என்று கேட்கப்படுகிறது.
"இந்தியாவின் மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டத்தில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயக கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். இந்தியா ஜனநாயக நாடு என அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுவதால் இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது. ஜாதி, மத பாகுபாடுகள் இந்திய ஜனநாயகத்தில் காட்டப்படுவது இல்லை" -இதுதான் பிரதமரின் பதில்.
இந்த பதிலில் ஜனநாயகம், ஜனநாயகம் என்ற வார்த்தை இருக்கிறது அவ்வளவுதான். ஆனால் நடைமுறையில் பா.ஜ.க.விடம் ஜனநாயகம் கிடையாது. "மானே தேனே போட்டுக்கோ' என்பது மாதிரி ஜனநாயகம், ஜனநாயகம் என்று பதிலில் சொல்லிக் கொண்டார்.
- தொடரும்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!