murasoli thalayangam
பிரிஜ் பூஷனை கைது செய்யாதது ஏன்? பாஜக MP என்பதால் அவருக்குச் சலுகை காட்டுகிறீர்களா? முரசொலி விமர்சனம் !
முரசொலி தலையங்கம் (2.6.2023)
எறிய வேண்டியது பதக்கங்களை அல்ல!
...........
இந்தியா முழுமைக்கும் தலைகவிழ்ந்து நிற்கிறது பா.ஜ.க. ஆனாலும் பிரிஜ் பூஷனை அந்தக் கட்சி விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அவரைக் கைது செய்யத் தயாராக இல்லை. அவர் மீது எந்தப் புகாரும் இல்லை என்றும், மல்யுத்த வீராங்கனைகள் வைக்கும் புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும் தகவல்களைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். உலக மல்யுத்தக் கூட்டமைப்பு இவர்களைக் கடுமையாகக் கண்டித்துவிட்டது.
மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்திய பிரிஜ் பூஷன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று உலக மல்யுத்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தங்களது உரிமைகளைக் காக்கப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது உலக மல்யுத்தக் கூட்டமைப்பு. போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப் போகிறோம் என்றும் அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
''உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மேலும், ஒருங்கிணைந்த உலக மல்யுத்தக் கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐ.ஓ.ஏ.), இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் கமிட்டியிடமிருந்து அடுத்த பொதுக் கூட்டமைப்பு தேர்வு குறித்து 45 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் உலக மல்யுத்தக் கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்யும். மேலும் மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்' உடன் போட்டியில் பங்கேற்க வழிவகை ஏற்படுத்தப்படும். இந்த விஷயத்தில் ஏற்கெனவே உலக மல்யுத்தக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதையும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெறவிருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டது என்பதையும் நினைவூட்டுகிறோம்'' எனத் தெரிவித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் பிரிஜ் பூஷனைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால், டெல்லி போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் பிரிஜ் பூஷன் குறித்து சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. ''இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் மீது ஒரு சிறுமி உள்பட பல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே 40 கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 2 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்ட நிலையிலும் டெல்லி காவல் துறையானது பிரிஜ் பூஷனை இது வரை கைது செய்யாதது ஏன்?' என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
''டெல்லியில் ஒவ்வொரு நாளும் 6 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக டெல்லி போலீஸ் கைது செய்ய முயற்சிக்கிறது. ஆனால் இதுவரை பிரிஜ் பூஷனை ஏன் கைது செய்யவில்லை? இது அப்பட்டமான அநீதி இல்லையா? எம்.பி. என்பதால் அவருக்குச் சலுகை காட்டுகிறீர்களா? பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக, அவர்களுக்கு நீதியை மறுப்பதன் மூலமாக, இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் புகார் கொடுப்பவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகிறீர்களா?" என்றும் ஸ்வாதி மலிவால் அந்தக் கடிதத்தில் கூறி இருக்கிறார்.
ஆனால் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மீது சுறுசுறுப்பாக வழக்குப் போட்டுள்ளார்கள். எட்டு பிரிவுகளில் வழக்காம். மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதும் வழக்காம். அதைவிடக் கொடுமை, போலியான புகைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டதுதான். கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் சங்கீதா போகத், வினேஷ் போகத் ஆகியோர் சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருப்பது போல போலியான போட்டோஷாப் புகைப்படத்தை பா.ஜ.க. பரப்பியது.
புதிய நாடாளுமன்றத் திறப்புவிழா அன்று மல்யுத்த வீராங்கனைகள் மானம் காக்கப் போராடியது இவர்களுக்கு அவமானமாகத் தெரியவில்லை. போட்டிகளில் பதக்கம் பெற்ற போது, 'இந்தியாவின் மகள்களாக' அடையாளம் காணப்பட்ட அவர்கள் இன்று இழிவுபடுத்தப்படுவதைவிட இந்த நாட்டுக்கு அவமானம் இருக்க முடியுமா?
இந்தப் பதக்கங்களை கங்கையில் தூக்கி எறியப் போகிறோம் என்று கிளம்பியதைவிட கேவலம் வேண்டுமா?
வழக்கறிஞர் 'தடா' ஓ.சுந்தரம், சமூக வலைதளத்தில் எழுதி உள்ள கவிதை ஒன்று இப்படிச் சொல்கிறது...
''எறிய வேண்டியது பதக்கங்கள் அல்ல சாக்சி!
நாட்டின் பெருமைக்காக நீ
உடலை வருத்திக் களத்திலிறங்கி
உலகப் போட்டியில் வெற்றிகள் குவிக்க
மூக்குடைபட்டும் உதடுகள் கிழிந்தும்
முக எலும்புகள் நொறுங்கியும்
முகவாய்க் கட்டை பெயர்ந்தும் வாய்
கொப்பளித்துத் துப்பிய குருதியை
துடைத்துத் துடைத்து மடித்து வைத்தும்
வயிற்று வலியோடு வழிந்ததையும்
சேர்த்து வைத்திருந்த துணிகளை
கல் நெஞ்சுக்கார காவலனின்
முகத்தில் வீசி எறியம்மா! அந்தக்
கவுச்சி வாடையிலாவது வெட்கப்பட்டு
எல்லை மீறி நடந்த அந்த ஜென்மம் மீது
சட்டம் பாயட்டும் சங்கிகள் ஆட்சியில்!
அன்றொரு நாள் உனக்கும் முன்னோடி
கருப்பரின மாவீரன் முகமது அலி
சண்டைக் களத்தில் பெற்ற வெற்றியை
வெள்ளை எலிகள் கேலி செய்தன.
அவமதிப்பால் அழுதபடி ஆத்திரத்தோடு
வெற்றிப் பதக்கத்தை வீசி எறிந்தான்
ஆற்றில் மூழ்கியது பதக்கம் ! அன்றே
ஏற்ற உறுதியால் அகிலம் புகழ அலியின்
தோளில் வெற்றி மாலைகள் குவிந்தன!
எறிய வேண்டியது பதக்கங்கள் அல்ல!
எரிக்க வேண்டியது அதிகாரத் திமிரை!
..
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!