murasoli thalayangam
தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி.. இனி காளைகள் துள்ளும் : முரசொலி புகழாரம்!
முரசொலி தலையங்கம் (22-05-2023)
துள்ளும் காளைகள்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை இல்லை என்று அறிவித்துவிட்டது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் அமர்வு ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கி விட்டார்கள். தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது.
பழந்தமிழ் இலக்கியங்களில் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உள்ளது.
சங்க இலக்கியமான கலித்தொகையில்,
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய –- உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்-- – என்றுரைக்கிறது.
அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது இறைவனையும் அரசனையும் வாழ்த்துகின்றனர். பண்டைக் காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது.
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக் கட்டு’ என ஆனது. இதே போன்ற விளையாட்டுகள் மற்ற சில மாநிலங்களிலும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் சல்லிக்கட்டு, கர்நாடகாவில் இருக்கும் கம்பாலா, மகாராஷ்டிராவில் இருக்கும் ரேக்ளா ஆகிய போட்டிகளை நடத்த தடைவிதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். இதனை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தனது விசாரணையைத் தொடங்கியது.
‘‘ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி அல்ல, அது விவசாயிகளின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் கலந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டப்படிதான் நடக்கிறது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசுதான் செய்து தருகிறது. விலங்குகளை அதிகமான மதிக்கிறோம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் விலங்குகள் ஆண்டு தோறும் அக்குடும்பங்களால் முறையாக, மிகுந்த கவனத்தோடு வளர்க்கப்படுகின்றன. போட்டி முடிந்ததும் அதே ஈடுபாட்டுடன் வளர்க்கப்படுகின்றன” என்றும் தமிழ்நாடு அரசு அழுத்தம் திருத்தமான வாதங்களை வைத்தது.
இதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. ‘‘ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்தச் சட்டம் உள்நோக்கத்துடன் இயற்றப்பட்டது அல்ல. இது போன்ற சட்டங்களை இயற்ற மாநில சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது. தமிழர் பண்பாட்டின் அங்கமாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது என்று சட்டசபை தீர்மானித்து சட்டம் இயற்றி விட்டதால் சட்டசபையின் நோக்கத்தை இந்த நீதிமன்றம் இடையூறு செய்யப் போவதில்லை. விலங்கு வதையைக் குறைத்து பண்பாட்டு விளையாட்டாக இது தொடர்வதால் அதற்கு தடை விதிக்கத் தேவையில்லை. இந்த தீர்ப்பு கர்நாடகாவில் நடைபெறும் கம்பாலா, மராட்டியத்தில் நடைபெறும் ரேக்ளா ஆகிய போட்டிகளுக்கும் பொருந்தும்” என்று நீதிபதிகள் உறுதிபட தீர்ப்பளித்துவிட்டார்கள். எனவேதான் ‘தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க தீர்ப்பு’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தடை செய்வதற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு முதலே தி.மு.க. அரசு போராடி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. அப்போது தி.மு.க. அரசு, அதற்கு எதிராக கடுமையான வாதங்களை வைத்தது. நிபந்தனைகளுடன் போட்டியை நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பினைப் பெற்றது (2007) கழக அரசு. சட்டசபையில் 2009 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கழக அரசு நிறைவேற்றியது. இதனை ஏற்று இப்போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. 2011 ஆம் ஆண்டும் போட்டிகளை நடத்த கழக அரசு அனுமதி பெற்றுத் தந்தது.
விலங்குகளை மையமாக வைத்து நடைபெறும் போட்டிகளுக்கு மொத்தமாக தடை விதிக்க மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து சிக்கல் எழுந்தது. 2014 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சரியாக வாதங்களை வைக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்தத் தடை தொடரும் என்று 2017 ஆம் ஆண்டு சனவரியில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதுவும் அ.தி.மு.க. ஆட்சி காலம் ஆகும்.
அப்போதுதான் சென்னை கடற்கரையில் தமிழர் கூட்டம் திரண்டு போராடியது. அமைதி வழியில் போராடியவர்கள் மீது வன்முறையை ஏவி கூட்டத்தைக் கலைத்தது அ.தி.மு.க. ஆட்சி. இவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைத்த காட்சி அப்போது ஊடகங்களில் வெளியானது. “I am rather surprised to see. Because, my intelligence officers informed me that there is a picture of a policeman indulging in some kind of violence. It is just ridiculous. We will find out who did this and the motive for that”, என்று அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸ் கமிஷனராக இருந்தவர் பேட்டி கொடுத்தார். போலீஸ்காரர்களை வைத்தே வன்முறை செய்தது அ.தி.மு.க. ஆட்சி.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் பரவியது. வெளிமாநிலங்களிலும், தமிழர் வாழும் நாடுகளிலும் போராட்டம் சூழ்ந்தது. இந்த நிலையில்தான் 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டத்தைக் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இந்த சட்டத்துக்கு உறுதியான வாதங்களை வைத்து வாதாடியது கழக அரசு. சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சொன்னது மாதிரி, “சமீபகாலமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்புகள் அளிக்காமல் ஓரிருவர் மாறுபட்ட தீர்ப்பையே அளித்து வந்தார்கள். இந்த வழக்கில்தான் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு தந்தார்கள்” என்பதே மகிழ்ச்சிக்குரியது ஆகும்.
இனி காளைகள் துள்ளும். தமிழர் தம் பண்பாடு வெல்லும்!
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!