murasoli thalayangam
அரசு அலுவலகங்களில் திருக்குறள்: வள்ளுவத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முரசொலி தலையங்கம் (18-05-2023)
வான்புகழ் வள்ளுவம்!
'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருக்குறளும், அதற்கான விளக்கமும் தினமும் இடம்பெற வேண்டும்' என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வான்புகழ் வள்ளுவத் துக்கு மேலும் சிறப்பைச் சேர்த்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதற்கான முறையான உத்தரவை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அவர்கள் அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் அனுப்பி இருக்கிறார். 'அரசு அலுவலகங்களிலும் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சிப் படுத்துக' என்பதுதான் இதன் ஒரு வரிச் செய்தி ஆகும்.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறள் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும். திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண் காணித்து அறிக்கை அனுப்பவேண்டும்" என்று கூறுகிறது தலைமைச் செயலா ளரின் உத்தரவு. அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்களுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் கரும்பலகைக் குப் பதிலாக மின் பலகை பொருத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவாயிலில் இது வைக்கப்பட்டுள்ளது. தேமதுரத் தமிழோசை அலுவலகங்கள் அனைத்துக்கும் பரவும் வகை செய்யப்பட் டுள்ளது.
"உங்கள் மதம் குறள் மதம், உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள்” என்றார் தந்தை பெரியார்.
ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும், சிறப்பாக இந்நாட்டுப் பழங்குடிப் பெருமக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் 'திருக் குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும். நாகரி கத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய முடிகிறது.
நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியுமாயினும், அவை பெரும்பாலும் பண்டிதர்களுக்குத்தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால் திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்குரிய தக்க ஆதாரமாய் அமைந் திருக்கிறது.
நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரை யும் நாம் சிறந்த அறிவாளிகளாகக் குறிப்பிட முடியும்.
திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவற்றை மடியச்செய்ய, அக் கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன். சுருங்கக் கூறினால் புத்தர் செய்த வேலையைத்தான் திருக்குறள் செய்திருக்கிறது. புத்த தர்மமும் ஆரியத்திற்கு மாறான தர்மம்தான். அதனால் தான் அது இந்நாட்டு ஆரியர்களால் அழிக்கப்பட்டது. ஆரிய தர்மத்தை எதிர்த்து அழித்து ஒழிப்பதற் காகத்தான் திருக்குறள் பாடப்பட்டதென்பது. அதை ஆராய்ச்சி செய்வோர் எவருக்கும் விளங்காமற் போகாது.” என்றார் தந்தை பெரியார். அதனால்தான் திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். திருக்குறள் நூலைப் பரப்பினார்.
திருவள்ளுவரையும் அதற்கு அடுத்ததாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் பாடப்புத்தகங்களில் வைக்கச் சொன்னார்.
அந்த வரிசையில் குறளை முன்னெடுக்கும் இயக்கமாக எப்போதும் திரா விட முன்னேற்றக் கழகம் அமைந்துள்ளது. 'தீனா மூனா கானா' என்பதை திருக்குறள் முன்னணிக் கழகம் என்று பாடலாகவே எழுதினார் கவியரசு கண்ணதாசன். அதனைப் பாடினார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். குறள் 'பக்தராகவே" செயல்பட்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
சட்டமன்றத்தில் திருவள்ளுவர் படம் வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதே முதலில் சொன்னவர் கலைஞர் அவர்களே. பொதுப்பணித் துறை அமைச்சர் ஆனதும், பேருந்துகளில் திருக்குறளை இடம் பெற வைத்தவர் கலைஞர். மயிலாப்பூரில் இருக்கும் வள்ளுவர் கோவி லைச் சீரமைத்தவர் முதலமைச்சர் கலைஞர். தலைநகர் சென்னையில் வள் ளுவர் கோட்டம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர். குமரி முனையில் 133 அடியில் சிலை அமைத்து வள்ளுவரை வானுயர உயர்த்திக் காட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் தலைமையிலான தமிழறிஞர்கள் கூடி உருவாக்கியதுதான் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு ஆகும். கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முந்தியவர் வள்ளுவர் என்பதே அது. அதனை அரசுக் கணக்காக வும் 1971 ஆம் ஆண்டு மாற்றியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். இன்று திருவள்ளுவர் ஆண்டு என்று போடுவதற்கு காரணம். கலைஞரின் பேனா போட்ட கையெழுத்துத்தான் காரணம். குறளுக்கு உரை எழுதியது அவர் பேனா. குறளோவியம் தீட்டியதும் அவர் பேனா. அத்தகைய கலைஞரின் குறளாட்சியின் தொடர்ச்சியே இந்த ஆட்சி. 'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' வழங்கி வருகிறது அரசு. 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் படைத்தவர்க்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில மொழிப்பாடலாக அறிவித்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதனை இசைத்தட்டாக ஒலிபரப்புவதை விட, வாய்ப்பாட்டாக அனைவரும் பாட வேண்டும் என்று சொன்னது தான் தமிழின உணர்வின் மீட்சியாக அமைந்திருக்கிறது.
ஒரு முறை சென்னை மருத்துவக் கல்லூரியின் தமிழ் மன்றத்தைத் தொடக்கி வைக்கச் சென்றிருந்தார் கலைஞர் அவர்கள். 'உங்களுக்கு நான் புதிய மாத்திரைகளை அறிமுகப்படுத்த வந்துள்ளேன்' என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். 'ஒரு மாத்திரை அல்ல, 1330 மாத்திரைகள். அதைப் பயன்படுத் தினால் எந்த நோயும் வராது. மேட் இன் தமிழ்நாடு. அதுதான் திருக்குறள்' என்று சொல்லிக் கைதட்டலை அள்ளினார்.
திராவிடவியல் கோட்பாடுகளைக் கொண்ட எல்லார்க்கும் எல்லாம் என்ற ஆட்சி இந்தியாவை ஈர்க்கத் தொடங்கி இருக்கிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை பரப்புதலும் அதில் ஒரு கோட்பாடாகவே அமைந்திருக்கிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !