murasoli thalayangam
“ஆரியப் படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம்..” - முரசொலி தலையங்கம் !
திராவிடப் பண் பாடுவோம் -3
ஆரியம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது, ‘சூத்திரர்கள்’ என்ற போர்வையில் மனிதர்களையும், அனைத்து இனப் பெண்களையும். மனுவில் அதிகம் இழிவு செய்யப்பட்டு இருப்பவர்கள் சூத்திரர்களும், பெண்களுமே! எனவேதான் பெரியார் இந்த இரு இழிவுகளைத் துடைக்கவே கிளம்பினார்.
‘திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது சாதி ஒழிப்பும், பெண்ணுரிமையும்’ என்று அறிவித்தார். ஒன்று ரத்த பேதம் இல்லை என்பது. இன்னொன்று பால் பேதம் இல்லை என்பது. இந்தத் தத்துவங்களை மையமாகக் கொண்டு கட்சியை நடத்துவதும், அந்தத் தத்துவங்களை வென்றெடுக்கும் திட்டங்களை ஆட்சியில் இருக்கும்போது நிறைவேற்றுவதும் தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும். ‘திராவிட மாடல் என்ற ஒரு நிர்வாகமே கிடையாது’ என்கிறார் ஆளுநர்.
வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு கோட்பாடும் ஒவ்வொரு சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டவை என்று. மார்க்ஸும் ஏங்கெல்சும் உருவாக்கிக் கொடுத்த கோட்பாட்டின் அடிப்படையில் சோவியத் நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்கு செய்தார்கள் லெனினும் ஸ்டாலினும். அதில் பண்பாட்டு விழுமியங்களையும் இணைத்தார் சீனாவில் மாவோ. ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னுக்கு வைத்தார் பிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும். இவை அனைத்தும் மார்க்சியமாகவும், லெனினியமாகவும், ஸ்டாலினிசமாகவும், மாவோயியமாகவும், பிடல் வழியாகவும், சே வழியாகவும் உலகில் பேசப்பட்டு வருகின்றன. அத்தகைய தன்மை கொண்டதுதான் பெரியாரியம். பெரியாரியத்தின் கோட்பாட்டுக்குள் அண்ணாவும், கலைஞரும் உரம் சேர்க்கிறார்கள். இதன் ஒட்டுமொத்த கூட்டுச் சேர்க்கையாக இன்றைய முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்.
இன்றைய பா.ஜ.க. ஆட்சியை ‘தேசிய ஆட்சி’ என்று அடையாளம் காட்ட முடியாது. எந்த தேசியம் என்ற கேள்வி எழும். இவர்களது சிந்தாந்த குருநாதர்களான கோல்வால்கரும், ஹெட்கேவரும் சொல்வது எல்லாம் ‘கலாச்சார தேசியம்’ ஆகும். அதாவது இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்கள் என்பதை இவர்கள் ஏற்க மாட்டார்கள். ‘இந்துப் பண்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே இந்தியர்கள்’ என்று சொல்வார்கள். இதன் அடிப்படையில் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
இப்படி ஒரு நிர்வாகத்தை நடத்தும் இவர்களைப் பார்த்து, ‘பா.ஜ.க. மாடல் நிர்வாகம் என்ற ஒரு நிர்வாகமே கிடையாது’ என்று நம்மாலும் சொல்ல முடியும். தங்களது கொள்கைக்கு ஏற்ப இவர்கள் செய்துகொள்ளும் நிர்வாக ஒழுங்கு அவர்களது பாணியாக இருப்பதைப் போல, திராவிடக் கொள்கைக்கு ஏற்ப நாம் செய்து கொள்ளும் நிர்வாக ஒழுங்குக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர்.
நீதிக்கட்சி 1920 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வருகிறது. ‘எல்லோரும் படிக்கலாம்’ என்ற அரசாணையை 9.3.1923 அன்று போடுகிறது. அதுவரை இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக் கூடாது என்று இருந்தது. அதனை மாற்றி அமைக்கிறது இந்த அரசாணை. படிக்க வந்த அனைவருக்கும் இடமோ, வேலையோ கிடைக்கவில்லை. உடனே, சமூக ரீதியாக இடஒதுக்கீட்டை வழங்குகிறது நீதிக்கட்சி. யாருக்கெல்லாம் இடம் கிடைக்கவில்லையோ அவர்களுக்கு இடம் கிடைக்கச் செய்கிறது இந்த இடஒதுக்கீட்டு வகுப்புரிமை. மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் ஒரு தகுதியாக இருந்துள்ளது. அதனை நீக்குகிறது நீதிக்கட்சி.
வேண்டியவர்களை மட்டும் கல்லூரிக்குள் படிக்க அனுமதித்த முறையை மாற்றி, கல்லூரிக் குழு அமைத்து மாணவர்களைத் தேர்வு செய்தது நீதிக்கட்சி. பட்டியலின மக்கள் படிக்க ஊக்கத்தொகை தரப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிக் கல்விக்கு ஊக்கத்தொகை தரப்பட்டது. விடுதிகள் திறக்கப்பட்டன. பெண்களுக்கு எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்விக்கு வழிவகை செய்யப்பட்டது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டது. இரவுப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. பஞ்சாயத்து வாசக சாலைகள் உருவாக்கப்பட்டன.
1926 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த ஏ.பி.பாத்ரோ மதுரை மாநாட்டில் பேசும் போது, தமிழ்நாட்டில் இருந்த 78 நகராட்சிகளில் 26 நகராட்சிகளில் இலவச கட்டாயக் கல்வி தரப்படுவதாகச் சொன்னார். சாதிப் பாகுபாடு காட்டி யாரையும் கல்வி நிலையங்களில் சேர்க்க அனுமதி மறுக்கக் கூடாது என்று அரசாணை போடப்பட்டது. அப்படிச் செய்யும் கல்வி நிறுவனத்தின் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் அரசாணை போடப்பட்டது. இதனைத் தான் ‘திராவிட இயக்கத்தின் நோக்கம்’ என்கிறோம்.
நீதிக்கட்சியின் புகழ் பாடுகிறோம் என்றால் இதனால்தான். பேசினார்கள், எழுதினார்கள், பத்திரிக்கை நடத்தினார்கள் என்பதற்காக அல்ல; சீர்திருத்த ஆட்சியை நடத்தினார்கள் நீதிக்கட்சியினர். அதனால்தான் அதற்கு மகுடம் சூட்டுகிறோம். இதன் தொடர்ச்சியைத் தான் பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் செய்து காட்டினார்கள். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்திக் காட்டி வருகிறார்கள்.
இந்த நூற்றாண்டின் பல்வேறு வளர்ச்சிக்கு திராவிடவியல் கோட்பாடு அடித்தளம் அமைத்துள்ளது. சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சியைக் கண்ணுக்கு முன்னால் காட்டி விட்டது. அதனால்தான் இதனைப் பார்த்து கோபம் கொள்கிறார்கள். ‘திராவிடர் - சூத்திரர்’ என்று பிரித்த சக்திகளே அப்படி எதுவும் இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இக்கோட்பாடு சாதனையைச் செய்துள்ளது. அடிமை எதிர்க்கத் தொடங்கியதும் சங்கிலியை அவிழ்த்துவிடுவது போல இருக்கிறது ஆரிய - திராவிடப் பிரிவினை என்பதெல்லாம் இல்லை என்பவர் கூற்று. ஆளுநரின் காலாவதிப் புலம்பலும் இந்த வகைப்பட்டது தான்.
‘’திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தைக் காலாவதி ஆக்கியது திராவிடம். வர்ணாசிரமத்தைக் காலாவதி ஆக்கியது திராவிடம். மனுநீதியைக் காலாவதி ஆக்குவது திராவிடம். சாதியின் பேரால் இழிவு செய்வதை காலாவதி ஆக்குவது திராவிடம். பெண் என்பதால் புறக்கணிப்பதைக் காலாவதி ஆக்குவது திராவிடம். இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்... ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு. எத்தகைய அந்நியப் படையெடுப்புகளாக இருந்தாலும் - ஆரியப் படையெடுப்புகளாக இருந்தாலும் - அதனை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம்” என்று முழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
எதிரி எந்த வேடம் தாங்கி வந்தாலும் அதனை வீழ்த்தும் வலிமை திராவிடத்துக்கு உண்டு. அது சமூகநீதிக் கோட்பாடு மட்டுமல்ல, சமூக நிர்வாகக் கோட்பாடாகவும் வடிவமைத்துள்ளார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நூற்றாண்டு காணும் திராவிட இயக்கத்தின் மாபெரும் வளர்ச்சியே இந்த ஆட்சி.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!