murasoli thalayangam
“கொடநாடு மர்ம மரணங்கள்.. தவறான தகவல்களை சொல்லி வசமாய் சிக்கிய பழனிசாமி” : வெளுத்து வாங்கிய ‘முரசொலி’!
மூன்றுமே தவறான தகவல்கள்- 1
கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள், பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஆகிய மூன்றும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தவை. இதில் முறையான நடவடிக்கை எடுத்ததாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். இது அவரது நாணயமற்ற தன்மையையே காட்டுகிறது.
ஜெயலலிதா ஊட்டி சென்றால் தங்கும் வீடுதான் கொடநாடு பங்களா. அதுவே அவரது முகாம் அலுவலகமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அந்த பங்களாவை ஒரு கும்பல் குறி வைத்தது.
அ.தி.மு.க. ஆட்சியில்தான் 2017 ஏப்ரல் 24ஆம் நாள் நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியை கட்டிவைத்து விட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இறுதியில் அவர் கொலை செய்யப்படுகிறார். பங்களாவில் இருந்த பொருள்கள் அனைத்தும் திருடப்படுகிறது. சயான் என்ற கேரளாவைச் சேர்ந்தவர் தான் இதனைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் அதாவது ஏப்ரல் 28 ஆம் நாள், இதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் விபத்தில் மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்த இந்த கனகராஜ் சேலத்தைச் சேர்ந்தவர். சயான் என்பவர் உள்ளிட்ட கூலிப்படையை பணம் கொடுத்து அழைத்து வந்ததாகச் சொல்லப்படுபவர் இந்த கனகராஜ்.
கனகராஜ் இறந்த அதே நாளில் சயான் சென்ற காரும் விபத்துக்கு உள்ளாகிறது. அதில் அந்த இடத்திலேயே சயானின் மனைவியும் குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். காயத்துடன் சயான் தப்புகிறார். குற்றவழக்குகளில் இதுபோன்று நிறைய நடக்கும். ஒருவரை வைத்து ஒரு சம்பவம் செய்ய வைப்பார்கள். அதே ஆட்களை உடனே காலி செய்தும் விடுவார்கள். இதுதான் கொடநாடு சம்பவத்தில் நடந்துள்ளது. அடுத்த சில நாட்களில் கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் என்பவர் மர்மமான முறையில் இறக்கிறார். தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது.
கொடநாடு பங்களாவில் சில சின்னச் சின்ன பொருள்கள்தான் காணாமல் போனதாகவும், அவைகளும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டன என்றும், அவற்றை கைப்பற்றி விட்டோம் என்றும் அ.தி.மு.க. ஆட்சியில் சொன்னார்கள். 2019 ஆம் ஆண்டு ‘தெகல்ஹா’ பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்யூ ஒரு அதிர்ச்சியான வீடியோவை வெளியிட்டார். அதில் சயானும் வாளையார் மனோஜும் பேட்டி தந்திருந்தார்கள்.
‘பழனிசாமிக்கு இவை எல்லாம் தெரியும். அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம்’ என்று கனகராஜ் தங்களிடம் சொன்னதாக சயான் அதில் பேட்டி கொடுத்தார். பழனிசாமியின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்குமூலத்தில் சயான், வாளையார் மனோஜ் இருவரும் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு உதவியதாக சஜீவன் என்பவர் பெயரையும் சயானும் வாளையார் மனோஜும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த சஜீவன், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவுக்கு மர வேலைப்பாடுகள் செய்து கொடுத்ததாகச் சொல்லப்படுபவர். அந்த சஜீவனுக்கு அ.தி.மு.க.வில் வர்த்தகர் அணிச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்திருந்தார் பழனிசாமி. சஜீவனுக்கு கட்சிப் பதவி தரக்கூடாது என்று ஊட்டியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினரே எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
பழனிசாமி முதலமைச்சராக நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அவர் அருகில் சஜீவன் இருந்துள்ளார். மூன்று அரசு விழாக்களில் பழனிசாமியுடன் சஜீவன் இருந்துள்ளார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.
பழனிசாமி மீது குற்றம் சாட்டினார்கள் என்பதால் சயானும் மனோஜும் சிறையில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டுள்ளார்கள். தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக நீதிமன்றத்திலேயே புகார் கூறியுள்ளனர். மறு விசாரணை கோரி பலமுறை நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தார். ‘என்னைக் கைது செய்தபோது 3 செல்போன்களைக் கைப்பற்றினீர்கள். ஆனால் அதனை நீங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. அதனை என்ன செய்தீர்கள்?’ என்று நீதிமன்றத்தில் வைத்தே போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார் சயான்.
‘என்னை வேண்டுமென்றே துன்புறுத்துகிறார்கள். இப்படிச் செய்வதற்கு கருணைக் கொலை செய்துவிடுங்கள்’ என்று சயான் நீதிமன்றத்தில் சொன்னார். இவை அனைத்தும் அவரை உண்மையைச் சொல்லவிடாமல் தடுக்கும் காரியமாகவே அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது.
இந்த நிலையில் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. மறுபடியும் குற்றவாளிகளையும், சாட்சிகளையும் விசாரிக்கத் தொடங்கியதும், சட்டமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார் பழனிசாமி. ‘வழக்கு முடியும் தருவாயில் இருக்கும் போது எதற்காக மேல் விசாரணை செய்ய வேண்டும்’ என்று பேட்டி கொடுத்தார்.’என்னைப் போன்றவர்களுக்கே தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை’ என்றும் பேட்டி அளித்தார்.
ஆளுநரைச் சந்தித்து, மனு கொடுத்தார். ‘நிர்பந்தம் காரணமாக காவல்துறையினர் மேல் விசாரணை நடத்துகிறார்கள்’ என்று குற்றம் சாட்டினார். முடியும் தருவாயில் உள்ள வழக்கை மீண்டும் எதற்காக விசாரணை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார்.
எந்த வழக்கையும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல்துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை (Further Investigation) என்பது குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின் 173(8) பிரிவின் படி நடத்தப்படுவது. அதன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர், கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு.
அதன்படி தான் கொடநாடு வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தப்படுகிறது. மேற்கொண்டு விசாரணை செய்யக் கூடாது என்று எந்த வழக்கிலும் யாரும் சொல்ல முடியாது. அது குற்றவாளிகளைக் காப்பாற்றுவதாக ஆகும். இதனைத் தான் தன்னிடம் அதிகாரம் இருந்தபோதும் பழனிசாமி செய்தார். இப்போதும் அதையே செய்ய நினைக்கிறார்.
உண்மையை வெளியில் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றால், அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடையத் தானே வேண்டும். குற்றச்சம்பவம் நடந்தது ஜெயலலிதா தங்கி இருந்த வீடுதானே? விசாரணை செய்தால் ஏன் கோபப்படுகிறார்கள்? எனவேதான் மர்மங்கள் உடைபடவே வேண்டும்!
-– தொடரும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!