murasoli thalayangam
வி.பி.சிங் பிறந்தது உ.பியாக இருந்தாலும் உதிரத்தில் கலந்தது தமிழ்நாடு.. சிலைவைக்க இதுதான் காரணம்: முரசொலி!
முரசொலி தலையங்கம் (22-04-2023)
சமூகநீதிக் காவலர்!
சமூகநீதியின் ஆட்சியை நடத்தி வரும் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவரது முழு உருவச் சிலை தலைநகரில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
‘ஒரு வீரரை இன்னொரு வீரர்தான் போற்ற முடியும்.
ஒரு தியாகியை இன்னொரு தியாகிதான் போற்ற முடியும்’ – - என்று அவை முன்னவரும் – - கழகப் பொதுச் செயலாளரும்- – நீர் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் சட்டமன்றத்தி லேயே பதிவு செய்துள்ள சொற்கள்தான் உண்மையானவை.
இராஜா வீட்டுப் பிள்ளை வி.பி.சிங். ஆனால் ஏழைக் குடிசைகளில் பிறந்தவர்களைப் பற்றியே நினைத்தார். உயர்குலம் என்று கருதப்படும் குலத்தில் பிறந்தார். ஆனால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே ஆட்சியை நடத்தினார். பதவிகள் அவருக்கு மிகமிகக் குறுகிய காலமே இருந்தது. அந்தக் குறுகிய காலத்தில் தான் எல்லா விதமான சாதனைகளையும் செய்தார். ‘மண்டலுக்குப் பிறகு நான் வேறு ஒரு மனிதனாக மாறி விட்டேன்’ என்றவர் அவர்.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை அவர் வழங்குவார் என்று அவரது கட்சியினரே எதிர்பார்க்கவில்லை. அதனைத் தான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்களே லேசாகக் கோடிட்டுக் காட்டினார்கள்.
மண்டல் அறிக்கையை அமல்படுத்துவதற்காக 1990 ஆகஸ்ட் 2 ஆம் நாள் இரண்டு தடவை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதற்கு இடையில் தேசிய முன்னணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டமும் நடந்தது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தார்கள். அதேநேரத்தில், இதனை அமல்படுத்துவதற்கு பிரதமர் வி.பி.சிங் கால தாமதம் செய்கிறார் என்றும் சந்திரசேகர் குழுவைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் சொன்னார். ‘நாட்டில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருக்கும் வரை மண்டல் கமிஷன் பரிந்துரை அமல் ஆகாது’ என்று அந்த எம்.பி.சொன்னதும் கோபம் ஆனார் பிரதமர்.
‘’மண்டல் அளித்துள்ள பட்டியலையும், மாநிலங்கள் வைத்துள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலையும் பொருத்த வேண்டியுள்ளது. அதனால் தான் தாமதம்” என்றார் பிரதமர் வி.பி.சிங். ‘இவை எல்லாம் வெறும் சாக்குப் போக்குகள்’ என்று சில எம்.பிக்கள் கூச்சலிட்டார்கள்.
உடனே பிரதமர் வி.பி.சிங் அவர்கள் எழுந்து, ‘மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்து வதற்கான தேதியை இப்போதே முடிவு செய்வோம்’ என்று அறிவித்தவர் தான் அவர். இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் அனுபவிக்கும் இடஒதுக்கீடு உரிமையை பெற்றுத்தந்தவராக உயர்ந்து நிற்கிறார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். இது தான் அவரது ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க.வுக்கு காரணமாக அமைந்தது.
‘’பல நூற்றாண்டு பழமையுடன் மோதும் போது எத்தனை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை அறியாதவனல்ல நான். நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரை துரத்திச் சென்று ஒரு முட்டுச் சந்தில் நிறுத்துவோம் என்றால் நமது நாட்டில் மேலும், மேலும் அமைதி யின்மையே நிலவும்” என்று நாடாளு மன்றத்திலேயே அழுத்தமாகச் சொன்னவர் அவர்.
உயர்ஜாதி சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் உருவாகி நாடு முழுதும் கலவரங்களைக் கட்டவிழ்த்தபோது பாட்னாவில் லல்லுபிரசாத் ஏற்பாடு செய்த மாபெரும் கூட்டத்தில் பேசிய வி.பி.சிங் ஒரு குட்டிக் கதையைக் கூறி, இடஒதுக்கீடு கொள்கையை விளக்கினார்.
‘’ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளிடையே பாகப் பிரிவினை நடந்தது. வீட்டில் இருந்த ஒரே மாட்டையும் இரண்டாகப் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் தலைப்பகுதி தம்பிக்கும், பின்பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப்பட்டது. தம்பியின் கடமை ஒவ்வொரு நாளும் தலைப் பகுதியிலுள்ள வாய்க்கு -– மாட்டின் தீவனம் போட வேண்டும். அண்ணனோ ஒவ்வொரு நாளும், பின் பகுதியிலுள்ள மாட்டின் மடியிலிருந்து பால் கறந்து கொண்டே இருந்தார்.
எத்தனை காலத்துக்குத்தான் இந்த அநீதியை தம்பி சகித்துக் கொண்டிருப்பான்? ஒரு நாள் அண்ணன் பால் கறந்து கொண்டிருக்கும்போது தம்பி, தலைப்பகுதியிலிருந்த கொம்பைப் பிடித்து ஆட்டி விட்டான். அவ்வளவுதான்; இத்தனை ஆண்டுகாலம் தீனி போடாமலேயே பாலை மட்டும் கறந்து கொண்டிருந்த அண்ணனை மாடு எட்டி உதைத்தது.
அண்ணன் - ‘இது அநீதி; அநியாயம்’ என்று அலறுகிறான். அந்தக் கொம்பைப் பிடித்து ஆட்டிய வேலையைத்தான் நான் செய்தேன். அதற்காக காலம் காலமாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தவர்கள் என்னை எதிர்க்கிறார்கள்” என்றார் வி.பி.சிங்.அதனால் தான் அவருக்குச் சென்னையில் சிலை வைக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்; தமிழ்நாட்டை உயிராக மதித்தவர்; தலைவர் கலைஞரை சொந்த சகோதரராகப் போற்றியவர் வி.பி.சிங் அவர்கள். அவருக்கு தமிழ்மண்ணில் சிலை வைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே அவருக்கு அமைக்கும் முதல் சிலையாகக் கூட இது இருக்கலாம். அவர் பிறந்த உத்திரப்பிரதேச மாநிலத்திலேயே அவருக்கு சிலை இல்லை. பிறந்தது உ.பி.யாக இருந்தாலும் அவரது உதிரத்தில் கலந்தது தமிழ்நாடல்லவா? அவர் திராவிடப் பேரியக்கத்தின் பெருஞ்சொத்தல்லவா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!