murasoli thalayangam
பா.ஜ.க என்ற பாசிசக் கூட்டத்துக்கு நடுவே.. சூதுகளை வென்று ஆன்லைன் சூதாட்ட சட்டம் நிறைவேற்றம்: முரசொலி!
முரசொலி தலையங்கம் (13.04.2023)
சூது தடுக்கப்பட்டது!
பல்வேறு சூதுகளை வென்று சூதுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. பொதுவாகக் குற்றங்களைத் தடுப்பதுதான் நெருக்கடியைத் தரும். ஆனால் இன்றைய நிலையில் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் போடவே நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு முதன் முதலாகச் சட்டம் கொண்டு வந்தது. 2021 பிப்ரவரி மாதமே இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உடனே இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளை ஒட்டுமொத்தமாகத் தடை செய்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட மசோதா ஆகும். சரியான விதிமுறைகள் இல்லை என்று உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியது.
2021 மே மாதம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. எதையும் முறைப்படி, சட்டவழிகாட்டுதல்படி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஆணையம் அமைக் கப்பட்டது. மக்களிடம் கருத்துக்கேட்க இந்த ஆணையம் அறிவிப்புச் செய்தது. அப்போதுகூட சிலர் விமர்சித்தார்கள். 'ஆன்லைன் சூதாட் டத்தை தடை செய்யலாமா என்று மக்களிடம் கருத்துக் கேட்ட முதல் அரசாங்கம் தி.மு.க. தான்' என்று சொன்னார் பா.ஜ.க.வுக்கு தலைவராகச் சொல்லிக் கொள்ளும் முன்னாள் போலீஸ்காரர் அண்ணாமலை.
நீதியரசர் சந்துரு குழுவானது 27.06.2022 அன்று தனது அறிக் கையினை அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளி செல்லும் மாணவர்களுக்கிடையே இணையவழி விளையாட்டு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்து கொள் வதற்காக, பள்ளிக்கல்வித் துறை ஜூலை 2022-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள 2,04.114 அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கோரப்பட்டது. மாணவர்களின் ஒரு முகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 சதவிகித ஆசிரியர்கள் சொன்னார்கள்.
இணையதள விளையாட்டை தடுப்பது தொடர்பாக அரசால் இயற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து, பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7.8.2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல் பெறப்பட்டது. அதில், 10.708 மின்னஞ்சல்களில் இணையதள விளையாட்டையும், இணையதள ரம்மி விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டது. 27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்கு எதிராக கருத்து தெரிவித்தது.
இணையதள விளையாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வழக்கு ரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் 11.08.2022 மற்றும் 12.08.2022 ஆகிய நாட்களில் உள்துறை கூடுதல் தலை மைச்செயலாளர் அவர்கள் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன. இவை அனைத்தையும் அடிப்படையாக வைத்துத்தான் ஒரு வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டது 26.09.2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன் பிறகு தான், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் 2022-ஐ மாண்புமிகு ஆளுநர் அவர்களால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் அரசிதழில் அக்டோபர் 3. 2022-ல் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு, மேற்கண்ட அவசர சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டது. இந்த சட்டமானது கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு. ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக சட்டத்துறையால் அனுப்பப்பட்டது.
2022 அக்டோபர் 19 ஆம் நாள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்தை 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ஆளுநர் திருப்பி அனுப் பினார். 139 நாள் கழித்து திருப்பி அனுப்பினார் ஆளுநர். மார்ச் 23 ஆம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகும் அப்படியே கிடப்பில் போட்டு இருந்தார்.
மாநில அரசுக்கு இது போன்ற சட்டம் போட அதிகாரம் இல்லை என்றார். 'நான் நிறுத்தி வைத்தாலே அவ்வளவுதான்' என்றார். இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் முதலமைச்சர். உடன டியாக சட்டமன்றத்தில் இதனைக் கண்டித்து முழங்கினார். 'இதுபோன்ற சட்டங்களுக்கு கையெழுத்துப் போட கால நிர்ணயம் வேண்டும்' என்றார். முதலமைச்சர் உரையாற்றிய இரண்டு மணிநேரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார் ஆளுநர். உடனடியாக அன்றைய தினமே அரசிதழிலும் வெளியிட்டு விட்டார் முதலமைச்சர்.
சூது தடுக்கப்பட்டு விட்டது. ஆனலைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறுவெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் விளையாடுபவர் களுக்கு இனி 3 மாதம் சிறைத் தண்டனை. இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை. இந்த விளையாட் டுகளை நடத்துவோருக்கு 3 ஆண்டுகள் சிறை. இரண்டாவது முறை தவறு செய்தால் தண்டனைக் காலம் அதிகம் ஆகும். ஆளுநரின் அலட்சியத்துக்கு மத்தியில் 41 உயிர்கள் பரிதாபமாக பலியாகி இருக்கின்றன.
பா.ஜ.க. என்ற பாசிசக் கூட்டத்துக்கு நடுவே - நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு எவ்வளவு கட்டங்களைத் தாண்ட வேண்டி இருக்கிறது - எத்தனை அஸ்திரங்களை ஏவ வேண்டி உள்ளது பாருங்கள்!
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!