murasoli thalayangam
ஒரே தீர்மானம்.. அத்துமீறி செயல்படும் ஆளுநரை அடக்கி காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முரசொலி தலையங்கம்!
முரசொலி தலையங்கம் (12-04-2023)
அத்துமீறலை அடக்கிய தீர்மானம்!
ஆளுநரின் அத்துமீறலை அடக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அடக்கியும் காட்டிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
“அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வகிப்பவர். அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும்.
அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசுத் தலைவர். அந்த வகையில் குடியரசுத் தலைவர்தான் ஆளுநரின் தலைவர். இதை அரசிய லமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதில் எந்த பிரச்சினையும் எழ வில்லை. உங்களுடைய கடமையை நீங்கள் சரியாக ஆற்ற வேண்டும். அவ்வளவுதான்” என்று ஆளுநர் ஆர்.என்.இரவி தனக்குத்தானே நல்ல பிள்ளையைப் போல சொல்லிக் கொண்டார். ஆனால் நல்லபிள்ளையாக நடந்து கொள்ளவில்லை.
ஒன்றியத்தை பா.ஜ.க. அரசு ஆள்கிறது. மாநிலத்தை தி.மு.க. அரசு ஆள் கிறது. அதனால் ‘சர்ச்சை வருவது இயற்கைதான்' என்பதைப் போல அவர் அதனை சாதாரணமாக ஆக்கப் பார்த்தார். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தைப் பொறுத்த வரையில், ‘மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் உண்டு’ என்று ஒன்றிய அமைச்சர்களே சொல்லி விட்டார்கள். நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தி விட்டார்கள். அதன்பிறகும், ‘மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று ஆளுநர் ஆர்.என்.இரவி சொன்னதுதான் சந்தேகத்துக் குரியதாக அமைந்தது. இதில் பா.ஜ.க. - தி.மு.க. முரண்பாடுகள் இல்லை. ஆளுநரின் தன்னிச்சையான, மர்மமான நிலைப்பாடுகள்தான் பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டக் கம்பெனிகளைச் சேர்ந்தவர்கள் அவரை வந்து சந்தித்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்வதைத் தவிர்த்தார். வழக்கமாக தினமும் அவர் எடுக்கும் வகுப்புகளில் இதற்கல்லவா பதில் சொல்லி இருக்க வேண்டும்? அதைச் சொல்லாமல் இருந்ததுதான் பிரச்சினையே தவிர - ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சி ... மாநிலத்தில் இன்னொரு கட்சி ஆட்சி என்பதல்ல காரணம்!
அரசியலமைப்பு பிரிவு 200 கூறுவது என்ன?
ஒரு மசோதா (Bill) இயற்றப்பட்டு ஆளுநரிடம் செல்கிறது என்றால் அவர் அதற்கு அனுமதி அளிக்கலாம். அனுமதியை நிறுத்தி (withhold) வைக்கலாம். குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பலாம். ஆளுநர் நிறுத்தக் கூடியது சட்டத்தை அல்ல. அனுமதியை (withholds assent) தான். வித்ஹோல்ட் அல்லது நிறுத்தி வைத்தல் என்றால் அது தற்காலிகமானது, நிரந்தரமானது அல்ல. இந்தச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஒரு தெளிவு இருக்கிறது. அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவோ அல்லது மாற்றங்களை செய்யவோ. 'எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில்' ஆளுநர் அந்தச் மசோதாவை சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தான் இருக்கிறது.
எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவாக (as soon as pos sible) என்பதே விதியாகும். திருப்பப்பட்ட மசோதாவானது மீண்டும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதற்குப் பிறகும் அவர் அதை நிறுத்தி வைக்கக் கூடாது (Governor shall not withhold assent therefrom). ஆளுநர் அதனை மீண்டும் அரசுக்கு அனுப்பி சந்தேகங்களைக் கேட்பதற்கு செய்யப்பட்ட வசதியை, தனக்குத் தரப்பட்ட தன்னிச்சையான அதிகாரமாக நினைத்து நிறுத்தி வைத்து சட்டத்தையே கொல்லப்பார்க்கிறார் ஆளுநர்.
சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவில் ஆளுநருக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்புவதற்கு காலக் கெடுவைக் கூறாமல் 'எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்’ திருப்பி அனுப்ப வேண்டும் என்று மென்மையாக அரசியலமைப்பு சட்டம் கூறி இருப்பது, ஆர். என்.இரவி போன்றவர்கள் எல்லாம் ஆளுநர்களாக வரமாட்டார்கள் என்று அந்தக் காலத்தில் நமது அரசியல் சட்ட மேதைகள் எதிர்பார்க்கவில்லை.
இன்றைய சட்டத்தின் படி ஆளுநரையும் உள்ளடக்கியதுதான் சட்டமியற்றும் துறை. Legislature க்குள் ஆளுநரும் இருக்கிறார். தனது துறையை தானே மதிக்காத தன்மையை என்ன சொல்வது?
இதனை தனிப்பட்ட ஆன்லைன் சட்டம், ஆர்.என்.இரவி எனச் சுருக்கிப் பார்க்காமல் இன்னும் விரிவாக பார்க்க வேண்டும் என்பதைத்தான் முதல மைச்சரின் உரை தெளிவுபடுத்துகிறது.
இந்திய அரசியலமைப்பில் சட்டம் இயற்றுவது என்பது, மக்களால் மக்க ளின் பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெற வேண்டியது என்பது அடிப்படை. இதற்கு கையெழுத்துப் போடும் பொறுப்பை ஆளுநர்களுக்கு கொடுத்ததே மிக மோசமான செயல்பாடு ஆகும். இது அரசியலமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்ட காலம் முதல் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 'இதனை ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை' என்று எழுதி இருக்கிறார் முரசொலி மாறன் அவர்கள்.
“சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது கவர்னருடைய கையெழுத்தைப் பெற்ற பிறகுதான் சட்டமாக முடியும். இவ்வாறு ஒரு மசோதா சட்டசபைக்கு அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்பும் இராஜபவனம் செல்கிறது. நிறைவேற்றப்பட்ட பிறகும் கையெழுத்திற்காக இராஜபவனம் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு ‘இரட்டைத் தாழ்ப்பாள்' போட்டு, அதன் திறவுகோல் கவர்னர் கையில் கொடுக் கப்பட்டிருக்கிறது. அதாவது சட்டசபையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் அவ் வளவு அவநம்பிக்கை” என்று ‘மாநில சுயாட்சி' என்ற நூலில் முரசொலி மாறன் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இத்தகைய நடைமுறை இருந்தது ஏன் என்றால். மாகாணங்களை ஆளும் கட்சிகளை அடக்குவதற்காக மாநில ஆளுநர்களை அந்த ஆட்சி பயன்படுத்தியது. அதற்காகத்தான். இப்போதைய பா.ஜ.க.வும் அதற்காகவே பயன்படுத்துகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
அத்துமீறல் எண்ணத்தோடு செயல்படும் ஆளுநரை அடக்கும் நோக்கத்துடன் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் அவர்கள். 'சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வேண்டும்' என்பதே அந்தத் தீர்மானம். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார் ஆளுநர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என இருக்க முடியாது.
மிக முக்கியமான கருத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்கள். “சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகள் அவையான இந்தச் சட்டமன்றங்களுக்கு வழங்கிவிட்டு அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் எனக் கருதுகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இந்திய மாநிலங்களின் ஒட்டுமொத்த குரலாக அமைய வேண்டியது இதுதான்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!