murasoli thalayangam
“உணவளிக்கும் நிலங்களை நிலக்கரிக்காகத் தோண்டுவது வயிற்றில் அடிக்கும் செயல்..” - முரசொலி கடும் கண்டனம் !
நிலமும் நிலக்கரியும் !
« எந்தக் காரணத்தைக் கொண்டும், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - என்று சட்டமன்றத்தில் உறுதி அளித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
« தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி இந்தியப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
« நமக்கு உணவளிக்கும் அன்னை பூமியான டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்திலேயே உறுதி அளித்துள்ளார்கள்.
நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தி.மு.க. அரசு எத்தகைய உறுதியோடு இருக்கிறது என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் - 2005, கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் - 1957 ஆகியவற்றின் கீழ் 17 / 7 வது பாகம் ஏலத்தை ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் 29 மார்ச் 2023 அன்று அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், தமிழ்நாட்டில் சேத்தியாத் தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் அமைந்துள்ளன. இவை காவிரி டெல்டா பகுதிகள் ஆகும். உணவளிக்கும் நிலங்கள் இவை. இதனை நிலக்கரிக்காகத் தோண்டுவது வயிற்றில் அடிக்கும் செயலாகவே அமையும்.
இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநில அரசுடன் எந்தக் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
« அரியலூர் மாவட்டம் - உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி -
« கடலூர் மாவட்டம்–- புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி -
« தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகியவற்றில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும்.
இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள், ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் - 2020’ இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன.
மைக்கேல்பட்டி ஒன்றியமானது காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது. நிலக்கரிக்காக இப்பகுதி தோண்டப்பட்டால் இந்தப் பகுதியே நாசமாகிவிடும்.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் படி, “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது” என்று இருக்கிறது என்றும் –
இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் “நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்” ஆகியவை அடங்கும் என்றும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது, அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியும் இருக்கிறது.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் 2015 ஆம் ஆண்டு நிரந்தரத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள். இதன்படி நிலக்கரிப் படுகை மீத்தேன் திட்டத்துக்கு தடையும் இருக்கிறது. இவ்வளவையும் மீறி இந்த ஏல அறிவிப்பை எப்படி ஒன்றிய அரசு விடுகிறது எனத் தெரியவில்லை.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் இன்னொரு முக்கியமான கேள்வியும் உள்ளது. ‘’ இந்தியாவில் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தியில் 50 சதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யவும், 2070 ஆம் ஆண்டு நிகர கார்பன் வெளியேற்றத்தை 0 சதவிகிதம் ஆக ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் சூழலில், அதிக நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்திற்கு விடுவது முரணாக உள்ளது” என்று அந்த இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்க வட்டாரங்கள் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், ஏலத்தின் தவணையில் இருந்து விலக்கிட வேண்டும் என்றும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதனை தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிரொலித்து இருக்கிறது. இதுவே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலாகும்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!