murasoli thalayangam
முதல்வரின் அனைவருக்கும் IITM திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் IIT-க்குள் எளிதாக நுழைய முடியும் -முரசொலி
கல்வியில் புதுமையும் பொதுமையும்!
“அனைவருக்கும் IITM” என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். இது புதுமையும் பொதுமையும் கலந்த அருமையான திட்டம் ஆகும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர்க்கும் ஆராய்ச்சித் திறனை உருவாக்கும் அடிப்படையில் திட்டமிடப்பட்ட திட்டம் இது. அறிவியல் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், புதிய, புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அதைப் போன்று தாங்களும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களுக்கு உருவாக்கவும் இந்த திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இத்திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே ஆகும் என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்புப் பயிலும் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் சென்னை ஐ.ஐ.டி. போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பினையும் வழிகாட்டுதல்களையும் வழங்கப் போகிறார்கள். அவர்களுடைய பன்னிரண்டாம் வகுப்பினை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வீதம் உதவித் தொகையும் பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பள்ளிக் கல்வித் துறையில் முதலமைச்சர் அவர்கள் காட்டும் அக்கறையும் ஆர்வமும் அளவில்லாதது. புதுமையான பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.
« இல்லம் தேடிக் கல்வி
« நான் முதல்வன்
« பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
« பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி
« சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி
« 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்க்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்
« பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்
« 9 முதல் 12 வரையிலான மாணவர்க்கு வினாடி–வினா போட்டிகள்
« மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி
« கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
« உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்
« வகுப்பறை உற்று நோக்கு செயலி
« மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி
- ஆகிய திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை சார்பில் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் “அனைவருக்கும் IITM” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. என்ற சொல்லே எல்லாராலும் உச்சரிக்கப்படும் சொல்லாக இல்லை. யாராலும் எளிதில் நுழைய முடியாத நிறுவனங்களாகக் கருதப்படுபவை ஆகும். அகில இந்திய அளவிலான போட்டியாளர்கள் இதில் இருப்பார்கள். இந்திய தொழில் நுட்பக் கழகமான ஐ.ஐ.டி. என்பது இந்திய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும். முதன்முதலாக ஐந்து கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது 13 நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களாக இயங்குகின்றன.
‘எல்லா ஊர்களிலும் இடத்தை தேர்வு செய்துவிட்டோம், சென்னையில் தான் சரியான இடம் கிடைக்கவில்லை’ என்று அன்றைய ஒன்றிய கல்வி அமைச்சர் அமிர்த கவுர் சொன்னபோது, இன்றைய சென்னை ஐ.ஐ.டி. இடத்தை தேர்ந்தெடுத்துக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் ‘ஆற்காடு இரட்டையர்கள்’ என்று போற்றப்பட்ட டாக்டர் இலட்சுமணசாமி ஆவார். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக அவர் அப்போது இருந்தார். இந்திய அளவில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய இவர் தலைமையில் ஒரு குழுவும் உருவாக்கப்பட்டது. தந்தை பெரியார், விஞ்ஞானி ஜி.டி.நாயுடு ஆகியோர் இதில் தங்களது கருத்துகளைச் சொன்னார்கள். பெண்கல்வி, தாய்மொழிக் கல்வி ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தந்து அந்த அறிக்கையை டாக்டர் இலட்சுமணசாமி கொடுத்தார். அவர்தான் ஐ.ஐ.டி. அமைய இருக்கும் இடத்தை தேர்வு செய்து கொடுத்தார். அது உருவாகிய காலம் முதல் ஐ.ஐ.டி.யில் படிப்பது என்பது பெருமையாகவும், தகுதியாகவும் ஆனது. அதே நேரத்தில் எல்லோராலும் அந்த வாய்ப்பை பெற முடியாத சூழலும் இருந்தது.
பள்ளிக் கல்வியில் மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களாக இருந்தாலும், ஐ.ஐ.டி.யின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது சிரமமாக இருந்தது. அதனாலேயே நுழையமுடியவில்லை. இரண்டுக்குமான சமநிலையை உருவாக்குவதற்குத்தான் இப்போது அடித்தளம் இட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் ஐ.ஐ.டி.யில் நுழையும் பயிற்சியை வழங்குவதுதான் இந்த திட்டம் ஆகும். ‘நீட்’ தேர்வை நாம் எதிர்ப்பதற்கு என்ன காரணம்? பள்ளிக் கல்வியில் உயர்ந்த மதிப்பெண் எடுத்தவர்களால், ‘நீட்’ நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. ‘நீட்’ பயிற்சி மையங்களில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி இவர்களால் பயிற்சி பெற முடியாததுதான் காரணம். இந்த அநீதியை நிராகரித்துத்தான் ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறோம்.
திராவிட இயக்கத்தின் நோக்கமே ஜனநாயக மயமாக்கல் தான். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பது ஆகும். உயரத்தில் இருப்பவர் உயரத்துக்கு அனைவரையும் உயர்த்துவதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம். அனைவர்க்கும் ஐ.ஐ.டி.எம். - என்ற திட்டத்தின் மூலமாக அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் ஐ.ஐ.டிக்குள் நுழையும் வாசலை ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் அவர்கள் திறந்துவிட்டுள்ளார்கள்.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!