murasoli thalayangam
இந்தியா முழுமைக்கும் சமூகநீதிச் சுடரொளியை ஏற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - முரசொலி பாராட்டு!
இந்திய நாடு முழுமைக்குமான சமூகநீதிச் சுடரொளியை ஏற்றி வைத்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருக்கும் அநீதியைப் போக்குவதற்கான ஒரே மருந்தாக இருப்பது சமூகநீதிதான். சமூகநீதியை உருவாக்கிய மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து அகில இந்தியா முழுமைக்குமான கூட்டமைப்பை உருவாக்கும் விதையை முதலமைச்சர் அவர்கள் விதைத்துள்ளார்கள். அனைத்து மாநில மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.
சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியாகும்.வ 'socially and educationally' என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை ஆகும். “சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப் பட்டவராக. இருக்கும் எந்த சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது” என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம் ஆகும்.
1951 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இந்த முதல் திருத்தத்தை அறிமுகம் செய்து வைத்தார் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள். இப்படி ஒரு அரசியல் சட்டத்தை திருத்தும் சூழலுக்கு அடித்தளம் அமைத்தது. சென்னை மாகாணத்தின் சூழல்கள் தான் காரணம் என்றார் நேரு. "happenings in madras" என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு.
இதில் பொருளாதார ரீதியாக என்ற சொல்லைச் சேர்க்கலாமா என்ற விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தது. முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முன் வைத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது Economically என்ற வார்த்தையையும் சேர்க்கச் சொல்லி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதனை பிரதமர் நேரு அவர்களும் ஏற்கவில்லை. சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் ஏற்கவில்லை. Economically என்ற வார்த்தையைச் சேர்க்கலாமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதற்கு ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே விழுந்தது.
Economically என்ற சொல்லைச் சேர்க்கக் கூடாது என்று 243 வாக்கு கள் விழுந்தது. இப்படி இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல் ஆகும். ஆனால் அந்த பொருளாதார அளவுகோலை தூக்கி நிறுத்தியது பா.ஜ.க. உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.
சமீபத்தில் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடுகள் உள்ளன. பொருளாதார அடிப்படையில் உயர்வகுப்பினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை ஐந்து நீதிபதிகளில் மூவர் ஆதரித்து விட்டார்கள், இருவர் எதிர்த்து விட்டார்கள். "இடஒதுக்கீட்டை காலம் காலமாக தொடர்ந்து கொண்டு இருக்க முடியாது, அதற்கு கால நிர்ணயம் செய்து நிறுத்தி விட வேண்டும்" என்று நீதிபதி பர்த்திவாலா அத்தீர்ப்பில் எழுதி இருக்கிறார்.
இன்னொரு நீதிபதியான திரிவேதி எழுதி இருப்பது அதனை விட ஆபத்தானது. பட்டியலின. பழங்குடியினருக்கான நாடாளுமன்ற, சட்டமன்ற தனித்தொகுதிக்கே எதிராக இவர் எழுதி இருக்கிறார். "நமது சுதந்திரத்தின் எழுபத்தைந்து ஆண்டுகளின் முடிவில், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதான நலனுக்காக இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 334-வது பிரிவின்படி, மக்களவையிலும், மாநிலங்களின் சட்டப் பேரவைகளிலும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு என நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு உரிமைகள், அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து 80 ஆண்டுகளில் காலாவதியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலோ - இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்துக்கான நியமனங்கள் பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் ஏற்கனவே 104-வது சட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, இதே போன்ற திருத்தம் மற்றும் காலக்கெடு பரிந்துரைக்கப்பட்டால், அரசியலமைப்பின் பிரிவு 15 மற்றும் பிரிவு 16-இல் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் தொடர்பான அனைத்தும் முடிவுக்கு வரும்" என்று எழுதி இருக்கிறார் நீதிபதி திரிவேதி.
இந்த நிலையில் அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது. அதனாலேயே முனைப்புக் காட்டி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
நீட் தேர்வின் மூலமாக ஏழை எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்துவிட்டார்கள். மருத்துவ இடம் மத்திய தொகுப்புக்கு போய் விடுவதால் மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு முறையை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களது சேர்க்கை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று தீர்ப்பு அளித்தது. இதனை அமல்படுத்துங்கள் என்று சொன்னபோது, அன்றைய பழனிசாமி அரசு இது குறித்த விபரங்களை அனுப்பவில்லை என்று சொன்னது பா.ஜ.க. அரசு. 27 சதவிகிதமோ, 50 சதவிகிதமோ எந்த அடிப்படையிலும் இடஒதுக்கீடு கிடையாது என்று பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது. தி.மு.க. தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இது குறித்த விரிவான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தார்கள். இறுதியாகத்தான் இறங்கி வந்தது பா.ஜ.க. அரசு.
கர்நாடகாவில் செய்யப்பட்ட சமூக அநீதி அனைவர்க்கும் தெரியும். ஒன்றிய பா.ஜ.க. அரசு பல்வேறு வகைகளில் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கும் நிலையில் அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பானது மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது.
கோடானுகோடி பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுடரொளியாக இது அமையப்போகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!