murasoli thalayangam
கிழிகிறது பாஜக ஆட்சியின் முகத்திரை.. மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்திய நாளிதழ்கள்.. முரசொலி தாக்கு !
முரசொலி தலையங்கம் (15-03-23)
‘புதைகுழி’ பேச்சுகள் எதனால்?
கர்நாடகா மாநிலத்தின் மீது திடீர் பாசம் வந்திருக்கிறது பிரதமர் நரேந்திர மோடிக்கு. பாசம் வரத்தான் செய்யும். ஏனென்றால் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. வோட்டு அறுவடைக்காக அவரது இதயம் கர்நாடகாவுக்காகத் துடிக்கிறது.
கடந்த இரண்டு மாதத்தில் ஐந்தாவது முறையாக பிரதமர் அவர்கள் கர்நாடக மாநிலத்துக்கு வந்து சென்றுள்ளாராம். இதில் இருந்தே அவர் ஆர்வம் தெரிகிறது. ‘தேர்தலுக்காக வேலைகள் ஜரூர்’ என்று ‘தினமலர்’ தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டுள்ளது. ‘தேர்தல் வியூகம்’ என்று ‘தினமணி’ பெட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காகத்தான் இது என்பதை அவர்களது ஆதரவு சக்திகளே ஒப்புக் கொண்டு வருகின்றன.
பிரதமரின் பேச்சு அவரது தோல்வியை இப்போதே ஒப்புக் கொள்வதைப் போல இருக்கிறது. ‘இரும்பு மனிதர்’ என்று சொல்லப்படும் அவர், ‘காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எனக்கு புதைகுழி தோண்ட கனவு காண்கிறது’ என்று பேசி இருக்கிறார். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பது அவரது முழக்கம். அந்த முழக்கம் ஈன ஸ்வரத்தில் ஒலிப்பதையே பிரதமரின் உரை காட்டுகிறது. புதைகுழி தோண்டும் அளவுக்கு காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பலம் இருப்பதையே பிரதமரின் உரை காட்டு கிறது. எதற்காக இந்த கழிவிரக்கம் தேடும் பேச்சு? ஏன் தேவைப்படுகிறது இந்த அழுகாச்சி காவியம்?
பல்வேறு திட்டப்பணிகளைத் தொடக்கி வைப்பதற்காக கர்நாடகா வந்திருந்த பிரதமர், பெங்களூரு – மைசூரூ அதிவிரைவுச் சாலையைத் திறந்து வைத்துள்ளார். 8,480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 118 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையாகும் இது. இது முழுமையாக முடிந்துள்ளதா என்றால் இல்லை. இன்னும் 21 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் போடப்படவில்லை. இந்தத் திட்டத்திற்கு 2018 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கியது. ஐந்து ஆண்டுகள் கழித்தும் அரைகுறையாகவே இருக்கிறது. இந்தச் சாலைகளை இணைக்கும் ராம்நகர், மத்தூர், மண்டியா உட்பட பல்வேறு பகுதிகளில் இணைப்புச் சாலை பணிகள் இன்னும் முடிவடையவில்லை.ஏன் இந்த அவசரம்? இதோ ‘தினமணி’யே எழுதுகிறது:
‘‘பழைய மைசூரு பகுதியைச் சேர்ந்த மாண்டியா மாவட்டத்தில் சாலைப் பேரணியையும் விரைவுச்சாலை தொடக்க விழா நிகழ்ச்சியையும் பா.ஜ.க. நடத்தியது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகமாகவே பார்க்கப்படு கிறது. மாண்டியா மாவட்டமானது முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, செல்வாக்கு செலுத்தும் பகுதியாக உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். பழைய மைசூரு பிராந்தியத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. அந்த மாவட்டங்களில் பா.ஜ.க.வுக்கு குறைந்த அளவிலான ஆதரவே உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அங்கு மக்கள் ஆதரவைப் பெறவும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரசு கட்சிகளின் செல்வாக்கைக் குறைக்கவும், தொடர் நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது’’ என்று எழுதி இருக்கிறது ‘தினமணி’. சட்டமன்றத் தேர்தல் வருவதால் அரசியல் லாபத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இது என்பதை அம்பலப்படுத்தி இருக்கின்றன நாளிதழ்கள்.
திட்டங்களைத் தொடங்கி வைப்பதை வரவேற்கலாம். ஆனால் தேர்தல் வருவதற்கு முன்புதான் தொடங்கி வைப்பார்களா? ஐந்தாண்டு காலம் என்ன செய்தார்கள் அந்த மாநிலத்துக்கு என்றால் எதுவுமில்லை. கர்நாடக காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காதில் பூ வைத்துக் கொண்டு சபைக்குள் வந்திருந்தார்கள். ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த திட்டங்களையும் பா.ஜ.க. அரசு இதுவரை நிறைவேற்றவில்லை… அதேபோல், கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ.க. அரசு ஏமாற்றி விட்டதை சுட்டிக்காட்டும் வகையில் காதில் பூ வைத்துள்ளோம்’’ என்று சொன்னார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள். ‘காதில் பூ’ என்ற பொருள்படும் வார்த்தையான #KiviMeleHoova என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலை தளங்களில் டிரெண்ட் ஆனது.
இதற்கு என்ன காரணம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சொல்லி இருந்தார். ‘‘தேர்தல் அறிக்கையில் 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க. அதில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறது’’ என்று சொல்லி இருக்கிறார் அவர். கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக பிரசாரம் செய்துவரும் காங்கிரஸ் கட்சி பேடிஎம் (PAYTM) க்யூ ஆர் கோட் (QR Code) போலத் தோற்றமளிக்கும் ஒரு போஸ்டரை வடிவமைத்து அதை சுவர்களில் ஒட்டியது. அதில் பேடிஎம் பெயர் இருக்கும் இடத்தில் ‘பே சிஎம்’ என கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது. க்யூ ஆர் கோட் இடம் பெறும் இடத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவம் இடம் பெற்றிருந்தது. அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களே எழுப்பி வருகிறார்கள்.
கர்நாடகா பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதல் விருபாக்சப் பாவின் மகன் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான மதல் விருபாக்சப்பா, மாநில அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் பிரசாந்த் மதல்
என்பவரை லோக் ஆயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியின் முகத்திரையை இது கிழித்து வருகிறது.இவை அனைத்தையும் ‘புதைகுழியில்’ போட்டு மூட நினைக்கிறார் பிரதமர். அதனால்தான் ‘புதைகுழி’ பேச்சுக்கள் எல்லாம்!
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!