murasoli thalayangam
‘சனாதனம்’ மட்டுமே தெரிந்த ஆளுநருக்கு மாநில அரசின் உரிமைகள் பற்றி தெரியுமா?.. முரசொலி சரமாரி கேள்வி!
முரசொலி தலையங்கம் (11-03-2023)
மாநில உரிமையே!
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தைத் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.இரவி, ‘தமிழ்நாடு அரசுக்கு இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்.
‘’அனைத்து வகையான சூதாட்டமும் மாநிலப் பட்டியலில் உள்ளதால் மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றலாம். பல மாநிலங்கள் இத்தகைய சட்டத்தை இயற்றி உள்ளன” -– என்று கடந்த ஆண்டு (3.8.2022) நாடாளுமன்றத்தில் சொன்னவர், ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என்பது ஆளுநருக்குத் தெரியுமா?
ஆளுநருக்கு அறிவுரை கூறிய பிரகஸ்பதிக்குத் தெரியுமா?
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ மகாபலி சிங் எழுப்பிய கேள்விகள் இவை...
« ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயத்தைத் தடை செய்வதை இந்த அரசாங்கம் முன்மொழிகிறதா?
« அப்படியானால் அதன் விபரம் என்ன?
« ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம் பரவுவதால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? எடுக்க இருக்கின்ற நடவடிக்கைகள் என்ன? -– என்பது அவரது கேள்வி ஆகும். இதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைக்கான ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்துள்ள பதில் என்ன தெரியுமா?
‘‘All forms of gambling and betting come under the purview of State Governments and they have enacted their laws to deal with the same within their jurisdictions under List-II of the Seventh Schedule of the Indian Constitution. Betting and gambling is illegal in most parts of the country.
Online gaming platforms are intermediaries and they have to follow the due diligence as prescribed in the Information Technology (IT) Act, 2000 and the Rules thereunder. MeitY regulates all the intermediaries as per the IT Act and the Rules therein. Online gaming platforms are treated as illegal when game of chance is involved in those platforms.
‘Police’ and ‘Public Order’ are State subjects as per the Seventh Schedule of the Constitution of India. States/UTs are primarily responsible for the prevention, detection, investigation and prosecution of crimes through their Law Enforcement Agencies (LEAs). The Law Enforcement Agencies (LEAs) at Centre and States take appropriate legal action as per provisions of law and when appropriate”
- என்பதுதான் ஒன்றிய அமைச்சரின் பதில் ஆகும்.
அதாவது ‘சூதாட்டம் மற்றும் பந்தயம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களும் மாநில அரசாங்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழாவது அட்டவணை இரண்டாவது பட்டியலின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகார வரம்புகளுக்குள் அவர்கள் இதுபோன்ற தடைச் சட்டங்களை இயற்றியுள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இது சட்ட விரோதமாக்கப் பட்டுள்ளது’ என்கிறார் ஒன்றிய அமைச்சர்.
காவல் துறை மற்றும் பொது ஒழுங்கு என்பது மாநில அதிகாரங்கள் ஆகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது சட்ட அமைப்புகள் மூலமாக குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், விசாரணை நடத்துதல், வழக்குத் தொடுத்தல் ஆகியவற்றைச் செய்வது அவர்களது முதன்மையான பொறுப்பு ஆகும். மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இது போன்ற விதிகளைப் பயன்படுத்தி பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன –- என்கிறார் ஒன்றிய அமைச்சர்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட 2948 ஆவது கேள்விக்கு 3.8.2022 அன்று அளிக்கப்பட்ட பதில் இது.
ஒன்றிய அமைச்சர் சொன்னதன்படியே தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை நிறைவேற்றுகிறது. ‘சனாதனம்’ மட்டுமே தெரிந்த ஆளுநருக்கு இது தெரியவில்லை.
ஆன்லைன் சூதாட்டம் குறித்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். ‘’ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதுவரை 40 இளைஞர்கள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதனைத் தடுக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?’’ என்று தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்ன சொன்னார் தெரியுமா?
‘மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லவில்லை. ‘’19 மாநிலங்கள் ஆன்லைன் மசோதாவைக் கொண்டு வந்துள்ளன. அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் மசோதா கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசிக்கும்” என்றுதான் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சொன்னார். மாநிலங்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்பதுதானே அவரது விளக்கத்தின் உள்ளடக்கம்!
எந்த உரிமையின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்பதை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
« மாநிலப் பட்டியலில் 1 ஆவது பிரிவு, பொது உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம்.
« பிரிவு 6 இல் பொது சுகாதாரம்
« பிரிவு 33 இல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குப் பிரிவு
« பிரிவு 34 இல் சூதாட்டம் மற்றும் பந்தயம் வைத்து ஆடுதல் – - ஆகிய பிரிவுகளை மையமாக வைத்துத்தான் இந்தச் சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் எஸ்.ரகுபதி. இதுவும் ஆளுநர் மாளிகை அறிய வேண்டும்.
‘‘ஆன்லைன் சூதாட்டத்தை விட ஆளுநரின் சூதாட்டம் மோசமாக உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு சொல்லி இருப்பதைப் போல தீர்ப்புச் சொல் இருக்க முடியுமா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!