murasoli thalayangam
“RSS பவனாகும் ராஜ்பவன்.. மோகன் பகவத் சொல்வதையே சொல்லும் RN.ரவி” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ தலையங்கம் !
ஆர்.எஸ்.எஸ். பவன்!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என்ன சொல்கிறாரோ அதையே ராஜ்பவனில் இருந்து ஆளுநர் ஆர்.என்.இரவி சொல்லிக் கொண்டு இருக்கிறார். ‘’ஆங்கிலேயர் வந்த பிறகு தான் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்தது” என்கிறார் மோகன் பகவத். அதையே ஆளுநரும் சில நாட்களுக்கு முன்னால் எதிரொலித்து இருக்கிறார். ‘’ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு முன் தமிழ்நாட்டில் ஆண்களுக்கு இணையாக மகளிர் கல்வி பயின்றுள்ளனர். அதன்பின் படிப்படியாக அவர்கள் பின் தள்ளப்பட்டுள்ளனர்’’ என்று சொல்லி இருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வருவதற்கு முன்பு வரைக்கும் இவர்கள் பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக வைத்திருந்ததைப் போல கட்டமைக்கிறார்கள். அப்படி இருந்திருந்தால் ஏராளமான சமூகசீர்திருத்தச் சட்டங்களை ஏன் பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்திருக்க வேண்டிவந்தது? பெண்களை அடக்குவதற்காக பிரிட்டிஷ் ஆட்சி சட்டங்கள் கொண்டு வரவில்லை. பெண்களது உரிமைகளை நிலைநாட்டவே சட்டம் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஆட்சி.
கடந்த 6 ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். ‘’இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக எத்தனையோ கெடுதல்களை பிரிட்டிஷ் ஆட்சி செய்திருந்தாலும் சமூக ரீதியாக பல்வேறு சீர்திருத்தச் சட்டங்களை உருவாக்கிக் கொடுத்தது” என்று சொன்ன முதலமைச்சர், அவர்கள் ஆட்சியில் போடப்பட்ட சமூக சீர்திருத்த சட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள். பல்வேறு கொடூரங்கள் அதற்கு முன்பு இருந்ததால் தானே இச்சட்டங்கள் போடும் அவசியம் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பும் ‘சட்டங்கள்’ இருந்தன. ஆனால் அனைவருக்கும் பொதுவான சட்டமாக இல்லை. ஜாதிக்குத் தகுந்த மனுவின் சட்டமாக இருந்தது. அது போலவே, கல்வியும் இருந்தது. அது அனைவருக்குமான பொதுக் கல்வியாக இருந்ததா என்றால் இல்லை. இன்னார் படிக்கலாம் என்பதாக இருந்தது. அதை அனைவர்க்கும் பொதுவாக ஆக்கியதுதான் பிரிட்டிஷ் ஆட்சி கல்வி முறை.
7 வயது முதல் பெண்களுக்கு திருமணம் நடந்தது. மறு ஆண்டே கணவன் இறந்தாலும் மறுமணம் செய்ய முடியாது. பெண் எங்கே படிக்கப் போயிருப்பாள்? மூடத்தனமான பழக்க வழக்கங்களைப் பார்த்த இராஜாராம் மோகன்ராய், “அனைத்து மக்களுக்கும் கல்வி புகட்டுவதே மக்களைச் சீர்திருத்தும் ஒரே வழி” என்று சொன்னாரென்றால் நாட்டின் நிலைமை என்னவாக இருந்தது என்பதை அறியலாம்.
புனிதம் என்று கருதப்பட்ட உடன்கட்டை ஏறுதலை அவர்தான் முதலில் எதிர்த்தார். பெண் சிசுக் கொலை ஒரு சமயச் சடங்காக இருந்தது. அதனைத் தடுத்தவர் அவர்தான். இதனை தடுக்க சட்டம் போட வைத்தவர் அவர். 1849 ஆம் ஆண்டு இந்துப் பெண்கள் கல்விச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதுவே முக்கியமான தொடக்கம் ஆகும்.
‘அருவெறுக்கத்தக்க கேடு விளைவிக்கக் கூடிய மூடநம்பிக்கைகளுடனும் எவ்வித அடிப்படையான தார்மீக நெறிமுறைகளும் இன்றி 30 கோடி இந்தியர்கள் நாட்டில் அழுகிய பிணத்தின் மீது வாழுகின்ற புழுக்களைப் போல வாழ்கிறார்கள்’ என்று விவேகானந்தரே விம்மிய காலமாக அது இருந்தது. இதில் சில சலுகைச் சீர்திருத்தங்களை செய்யத் தொடங்கியது பிரிட்டிஷ் ஆட்சி.
1813 ஆம் ஆண்டைய சாசனச் சட்டப்படி இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. உட்ஸ் அறிக்கைப்படி சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் பல்கலைக் கழகங்கள் முதன்முதலாக உருவாக்கப்பட்டன. இந்த உட்ஸ் அறிக்கைதான் ‘இந்தியாவின் அறிவு சாசனம்’ என அழைக்கப்பட்டது. ரிப்பன் காலத்தில் அமைக்கப்பட்ட ஹண்டர் ஆணையம், மாநகராட்சிப் பள்ளிகள் தொடங்க வழிவகை செய்தது.
இந்தியாவில் எழுத்தறிவின்மையை அறவே ஒழிக்க 1913 ஆம் ஆண்டு அரசு முடிவெடுத்து அறிவித்தது. உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த சாட்லர் ஆணையம், பெண் கல்விக்கான தனி அமைப்பை உருவாக்கியது இந்த ஆணையம்தான். இன்றைக்கு நாம் பார்த்துவரும் 11 ஆண்டு பள்ளி படிப்பு, அதை முடித்து இண்டர் மீடியேட், அதன்பிறகு பல்கலைக் கழகக் கல்வி ஆகிய அனைத்தையும் செய்து கொடுத்தது சாட்லர் ஆணையம் தான்.
1929 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹார்டோக் ஆணையம், துவக்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் அமைக்கப்பட்ட சார்ஜெண்ட் அறிக்கை ஆரம்பக் கல்வி ( 3 - 6 வயது வரை), இலவச ஜூனியர் அடிப்படைக் கல்வி ( 6 - 11 வயது வரை), இலவச சீனியர் அடிப்படைக் கல்வி (11 - 14 வயது வரை), தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான ஆறுவருட உயர்நிலைக் கல்வி (11 - 17 வயது வரை) என வரையறுத்தது. இந்த வரலாறுகள் எதுவும் தெரியாமல், பிரிட்டிஷ் ஆட்சி தான் கல்வியைச் சிதைத்துவிட்டது என்பது வரலாற்றை மறைப்பதும் திரிப்பதும் ஆகும்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த ஆர்ய தர்மாபிவர்த்தினி சபை, திருக்கோவிலூர், சிதம்பரம், அத்வைத சபை, ஆரிய தர்மாபிவர்த்தினி பிரம்மண மஹாசபை, வீரட்டம், ப்ராமணர் சனாதன தர்ம சம்ரட்சண சபை, தஞ்சை, அத்வைத ப்ரகடன சபை, மதுரை, வர்ணாசிரம தர்ம சபை, சோலார்பேட்டை என்பவை பொதுவாகவே கல்வியை எதிர்த்தன. ‘சென்னை மாநிலக் கல்லூரியில் நம்மவர்கள் படித்தால் அவர்கள் பண்பாட்டை இழந்துவிடுவார்கள், வேதப்பாடசாலையில் படிக்கும் ஆண்களையே நாம் நம் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
அவர்கள்தான் நம் பெண்களுக்கு சிறந்த கணவர்களாக இருப்பார்கள்’ என்று அத்வைத சபை கூறியது. எந்த நிலைமையில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு. கல்லூரியில் படித்தவரை திருமணம் செய்தால், நம் பெண் பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு இருந்தவர்கள்தான் பெண்களுக்கு கல்வியைக் கொடுத்தார்களாம்!
அனைவர்க்கும் கல்வியைக் கொடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் இவர்களை இப்படி பேச வைக்கிறது!
- முரசொலி தலையங்கம் (09.03.2023)
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!