murasoli thalayangam
கீழடி ஆய்வுகளை உலக மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்துவிட்டார் முதலமைச்சர் -முரசொலி புகழாரம் !
முரசொலி தலையங்கம் (7.3.2023)
சொல்லியலும் தொல்லியலும் 1
‘‘இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும்” என்று சொல்லி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதற்கான ஆதார மையத்தை நேற்றைய தினம் (5.3.2023) திறந்து வைத்திருக்கிறார். கீழடி அருங்காட்சியத்தை அழகிய வடிவில் கட்டி எழுப்பி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்ற தொல்காப்பியத் தமிழும்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் தமிழும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கத்தமிழும்,
பஃறுளி ஆறும் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி என்ற சிலப்பதிகாரத்தமிழும்,
அறம் செய விரும்பு என்ற ஒளவைத் தமிழும்,
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே என்ற தாயுமானவத் தமிழும்,
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் தமிழும்,
சாகச் செய்வானைச் சாகச் செய்யாமல் சாகின்றாய் தமிழா சாகின்றாயே என்ற பாவேந்தர் தமிழும்,
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற நாமக்கலார் தமிழும் –- உலவிய மண் இந்த தமிழ் மண். இத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் நமக்கு எப்படி வாய்த்தது?
அவை நமது மொழிக்குள் இருக்கிறது. நமது சொல்லுக்குள் இருக்கிறது. நமது மண்ணுக்குள்ளும் இருக்கிறது. அதனால் தான் மண்ணுக்கும் பெயர் வைத்து இலக்கணம் வகுத்தான் தமிழன். மண்ணும் மக்களுமாக இணைந்து பண்பட்ட பூமி தமிழ்ப் பூமி.கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி –- என்று நாம் சொல்லும் போது, ‘ஆமாம் இது பாட்டு தானே’ என்று புறம் பேசியவர் உண்டு.
‘தென் தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் –- என்று சொல்லும் போது இது கவிஞனின் கற்பனை என்பார்கள்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புகுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே -– என்பதைக் கேட்க நன்றாக இருக்கிறது. நடைமுறையில் நடக்குமா என்பார்கள்.
இவை அனைத்தும் நடந்தவைதான், நடந்தவைதான் இலக்கியமானது என்றால் ‘கற்பனை’ என்றார்கள். நிலத்தின் இயல்புக்கு தகுந்தவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் அமையும் என்பதை வைத்தே பண்பாட்டை ‘முதற்பொருள்’ என்று சொன்னவன் தமிழன். இத்தகைய முதற்பொருள் பண்பாட்டு விழுமியங்களைக் கண்டெடுத்து உலகுக்கு உணர்த்தும் பணியை தன்பணியாய் மேற்போட்டுக் கொண்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். அவருக்குக் தாய்மடியான கீழடி கிடைத்துள்ளது.தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் சொல்லியலாக மட்டும் இருந்த பெருமையை தொல்லியலாக அடையாளப் படுத்திவிட்டார் முதலமைச்சர் அவர்கள்.
கீழடியில் கிடைத்த ஆதாரங்கள்தான் இந்த வரலாற்று வழித்தடத்தை மீண்டும் புதுப்பித்துள்ளது. அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்ச நல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் ஆய்வுகள் இப்போது மீண்டும் சிறப்பாகத் தொடங்க இருக்கிறது.
‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம்,
மணலூர்), சிவகங்கை மாவட்டம்
* சிவகளை, தூத்துக்குடி மாவட்டம்
* கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்
* மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்
* வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
* துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்
* பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- – முதல் கட்டம் –- ஆகிய ஏழு இடங்களில் விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
* கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
* சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும், தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலையில் இருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
* கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த பொருளானது கி.மு. 1615 – - கி.மு. 2172 என காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி, காலத்தால் முந்தியது மயிலாடும்பாறை தான். இப்படி தொடர்ச்சியாக வர இருக்கின்றன. இவற்றை ஆய்வாளர்களுக்குள் மட்டுமே வைத்துவிடாமல் தமிழ் மக்களோடு சேர்த்து உலக மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்துவிட்டார் முதலமைச்சர்.
- தொடரும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!