murasoli thalayangam
“பெருநிறுவனங்களுக்கு கடன் கொடுத்து, அதை ஈடுகட்ட பொதுமக்கள் மீது வட்டியை திணிக்கிறார்கள்” -முரசொலி தாக்கு!
அதிகரிக்கும் வட்டி சுமைகள் !
மத்திய தர வர்க்கத்துக்குப் பேரிடியாக வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தி இருப்பதால் வீட்டுக் கடன், கார் மற்றும் இருசக்கர வாகனக் கடன், சொந்தத் தேவைக்காக வாங்கும் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப் போகிறது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, நாட்டின் பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். கடந்த 2022 மே முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் மொத்தமாக 2.5% வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மத்திய தர வர்க்கத்தின் முதுகில் எத்தகைய சுமை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலமாக அறியலாம்.
கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கைக் குழுவின் (எம்.பி.சி) மூன்று நாள் கூட்டத்தை பிப்ரவரி 6- திங்கட்கிழமை தொடங்கியது. இம்மூன்று நாள் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த டிசம்பர் மாத கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால ரெப்போ வட்டி விகிதம் 6.25%, எஸ்.டி.எப். விகிதம் 6.00%, எம்.எஸ்.எப். விகிதம் 6.50%, வங்கி விகிதம் 6.50%, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%, சி.ஆர்.ஆர். விகிதம் 4.50%, எஸ்.எல்.ஆர். 18.00% என்ற நிலையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
இன்றைய கூட்ட முடிவில், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக அதாவது 0.25% உயர்த்தப்படும். உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கையில் சவால்கள் அதிகரித்துள்ளன. இருந்தாலும் உலகப் பொருளாதாரத்தின் நிலைமை தற்போது பலவினமாக இல்லை. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் வகையில், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2022 மே முதல் இதுவரை ரெப்போ வட்டி விகிதம் 6வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2.5% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருக்கிறார்.
உலகப் பொருளாதார நிலைமை பலவீனமாக இல்லை என்று சொல்லிவிட்டு, மத்திய தர வர்க்கத்தினருக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறார். ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய தர வர்க்கத்தின் அனைத்து விதமான கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். வீடு, கார், இருசக்கர வாகனங்கள் வாங்க கடன் வாங்கியவர்கள் பாதிக்கப்படுவார்கள். சொந்தத் தேவைக்காக கடன் வாங்கியவர்கள், புதிதாக சிறுதொழில் தொடங்க நினைத்தவர்களும் பாதிக்கப்படுவார்கள். மாதம் தோறும் அவர்களது செலவுத் தொகை அதிகமாகும். இப்படி வாங்க நினைத்திருப்பவர்களுக்கும் கூட இனி அந்தச் சிந்தனை போகாது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த ரெப்போ விகிதத்தைப் பயன்படுத்துகிறது என்றும், மக்களிடம் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டில் பொருளாதார மந்தநிலையை சரி செய்வதே இதன் நோக்கமாகும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் சொல்வார்கள். ஆனால் அடிப்படையில் மத்திய தர வர்க்கத்தின் தலைச்சுமை அதிகரிக்கிறது என்பதே அனைவர்க்கும் பொதுவாகத் தெரியும் பொருளாதாரப் பாடம் ஆகும்.
பணவீக்கம் குறித்து மாறுபட்ட கருத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்லி வருகிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது என்று பா.ஜ.க. அமைச்சர்கள் சொல்வார்கள். பணவீக்கம் குறைந்து வருகிறது என்றால் வட்டி விகிதத்தை அதிகரிக்காமல் இருந்திருக்கலாமே? பணவீக்கமானது குறையும் என்று சொல்லும் ரிசர்வ் வங்கி ஆளுநரும், வட்டி விகிதத்தை அதிகரிக்கவே செய்துள்ளார். இரண்டுமே முரண்பாடாக உள்ளது.
வங்கிகளை முறையாக, ஒழுங்காக நடத்தினாலே இத்தகைய நெருக்கடிகளை மத்திய தர வர்க்கத்தின் தலையில் சுமத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. கடந்த ஆண்டு மட்டும் 9 ஆயிரத்து 102 மோசடிகள் வங்கிகளில் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. இதைச் சொல்வதும் ரிசர்வ் வங்கியேதான். இதன் மொத்த மதிப்பு 60 ஆயிரத்து 389 கோடி ரூபாய் ஆகும். மோசடியான கடன்கள் நாளுக்குநாள் அதிகமாகி வருகின்றன. கடன் வாங்கியவரை திவாலானவராக அறிவிப்பதும் அதிகமாகி வருகிறது.
வாராக் கடன்களின் தொகையைச் சொன்னால் யாராலும் நம்ப முடியாது. 'பட்டியலிடப்பட்ட வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி ரூபாய் வாராக்கடனை செயல்படாத சொத்தாக வரையறுத்துள்ளது' என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் அறிவித்திருக்கிறார்.
“வங்கிகளின் முதலீட்டை மேம்படுத்தவும், வரிச் சலுகை பெறவும், கணக்கு அறிக்கைகளை சீர்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்றார் அமைச்சர். இந்த நடவடிக்கையையும் ஆர்.பி.ஐ.தான் எடுத்தது. அதேநேரத்தில், 'கடன் வசூலையும் தொடருவோம்' என்றும் சொல்லிக் கொண்டார்கள். இந்தப் பட்டியலில் சாதாரண மக்களின் கடன்கள் இல்லவே இல்லை. அனைத்தும் பெருநிறுவனங்கள் பெற்ற கடன்கள்.
இவை எல்லாம் சேர்ந்துதான் மத்திய தர வர்க்கத்தின் தலையில் சுமத்தப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!