murasoli thalayangam
அதானி முறைகேடு விவகாரம்.. உண்மையை காட்டிக் கொடுக்கும் பிரதமர் மோடியின் 'மௌனம்' : முரசொலி தாக்கு!
முரசொலி தலையங்கம் (11-02-2023)
பயமே காட்டிக் கொடுக்கிறது!
அதானி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தனது விசாரணையைத் தொடங்க இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணையை இந்தியாவில் உள்ள - (அ.தி.மு.க. போன்ற ஒன்றிரண்டு சில்லறைக் கட்சிகள் தவிர!) பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மக்கள் மன்றத்தில் அதானி விவகாரம் சந்தி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது. சில ஊடகங்கள் மறைக்க நினைத்தாலும் அதானியைக் குறித்து எதையாவது சொல்லியாக வேண்டிய அளவுக்கு செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இத்தகைய சூழலில் காங்கிரசுத் தலைவர் ராகுல் காந்தி சொன்னதைப் போல, தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரைக்கும் அதானி ... அதானி ... அதானிதான். எங்கும் அதானி மயம் தான்!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அதானி விவகாரம் தொடர்பாக எதையும் சொல்ல வில்லை. ‘தவறு நடந்திருக்குமானால் விசாரணைக்கு உத்தரவிட நான் தயங்க மாட்டேன்’ என்றாவது பிரதமர் சொல்லி இருக்க வேண்டும். இதனை வைத்துத்தான், ‘தனது நண்பரை பிரதமர் காப்பாற்ற நினைக்கிறார்’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருக்கிறார்.
நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் ஈர்க்கப்பட்டுள்ள விவகாரத்தில் பிரதமரும் சேர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் போது, மெளனமாக இருப்பது சரியான நெறிமுறை அல்ல. அதனைப் பேசி மாட்டிக் கொள்ளக் கூடாது என்று பிரதமர் பயப்படுகிறார். இதுவே சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
எப்போது பதில் அளிக்க மறுக்கிறார்களோ, அப்போதே அது, அதானி விவகாரம் என்பதைக் கடந்து பா.ஜ.க.வின் விவகாரமாக பிரதமர் மோடியின் விவகாரமாக மாறிவிட்டது.
பா.ஜ.க. தலைமைதான் உரிய பதில் சொல்லவில்லை என்றால், அதானியாவது பதில் சொன்னாரா என்றால் இல்லை. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல், நாட்டுக்கு ஆபத்து, தேசத்துக்கு ஆபத்து என்று சொல்லியதுதான் அவர்கள் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
‘’மொத்தமுள்ள 413 பக்கங்களில் 30 பக்கங்களில் மட்டுமே பிரச்சினை குறித்து இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள பக்கங்களில் நீதிமன்ற உத்தரவுகள், குழுமத்தின் நிதி நிலைமை, பொதுவான தகவல்கள், முன்னெடுப்புகள், பெண்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எனத் தேவையற்ற விவரங்களே இடம் பெற்றுள்ளன. நாங்கள் எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை. பல கேள்விகளை ஒருங்கிணைத்து பிரச்சினையை திசை திருப்பவே முயன்றுள்ளது. தங்கள் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்ற பிம்பத்தைக் கட்டமைக்க அதானி குழுமமும் அதன் தலைவர் கௌதம் அதானியும் முயன்றுள்ளனர். அதை ஹிண்டன்பர்க் நிராகரிக்கிறது.
“இந்தியா திறன்மிக்க ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. ஆனால், திட்டமிட்ட மோசடி நடவடிக்கைகள் மூலமாக அதானி குழுமம் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சிக்கிறது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் நிகழ்த்தினாலும் மோசடி, மோசடியே’’ என்று ‘ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவர்கள் இந்தியாவை இணைத்து இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. அதானியைத் தனியாகப் பிரித்தே இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் கற்பனையான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் கற்பனை யானவையாக இல்லை.
‘’2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் ஆனது எப்படி? 2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது எப்படி? விமான நிலையம் என்றாலும் அதானிதான். துறைமுகம் என்றாலும் அதானிதான். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் அதானிதான். அவர் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் நஷ்டம் அடைவது இல்லையே எப்படி? என்னைச் சந்திக்கும் மக்கள் அனைவரும் அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். இவர்கள் இருவருக்குமான உறவு குஜராத் முதலமைச்சராக மோடி இருக்கும் காலத்தில் இருந்து தொடர்கிறது.
முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு
6 விமான நிலையங்கள் தரப்பட்டன. இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார். அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார். உடனே இஸ்ரேல் இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்களும் அதானிக்கு வந்து விடுகிறது.
இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாயமந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது. வங்கதேசத்திற்கு மோடி முதல் முறையாகச் செல்கிறார். அங்கு மின் விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்குப் பின் வங்கதேசத்தின் மின்வாரியம், 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 – மெகாவாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்கு கிடைக்கிறது.
அங்கிருந்து இலங்கை செல்கிறார். ஜூன் 2022ல் இலங்கை காற்றாலை மின் உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபட்சே சொன்னார். இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளியுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வெளியுறவுக்கொள்கை” - என்பது ராகுல் சொல்லி வருவதன் உள்ளடக்கம் ஆகும்.
பிரதமரே, உங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் அதானியும் நீங்களும் எத்தனை முறை ஒன்றாகச் சென்றுள்ளீர்கள்? எத்தனை முறை அதானி உங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் பின்னால் வந்து சேர்ந்துகொண்டார்? நீங்கள் சென்று வந்த நாடுகளுக்கு உடனடியாக எத்தனை முறை அதானி சென்றுள்ளார்? எத்தனை நாடுகளிலிருந்து நீங்கள் சென்று வந்தபின் அதானிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன? அதனைவிட முக்கியமான கேள்வி; கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு அதானி எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்? தேர்தல் கடன் பத்திரம் மூலம் எவ்வளவு வழங்கியுள்ளார்?” - இவை நாடு எழுப்பும் கேள்விகளாக அமைந்துள்ளன.
பயமில்லாமல் பா.ஜ.க. பதில் அளித்தாக வேண்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!