murasoli thalayangam
திராவிட இயக்கம்தான் படிக்க வைத்ததா என கேட்கும் ஞானசூனியங்களுக்கு.. முரசொலி தலையங்கத்தின் தரமான பதில்!
முரசொலி தலையங்கம் (10-02-2023)
புதுமை அரசின் புதுமைப் பெண் திட்டம்!
இந்தியர்களில் படிக்காதவர் எண்ணிக்கை 1911ஆம் ஆண்டு 94 விழுக்காடு ஆகும்! 1921 ஆம் ஆண்டில் 92 விழுக்காடு! இந்தியப் பெண்களில் 100 பேரில் 2 பேருக்கு மட்டுமே 1921 இல் எழுதப்படிக்கத் தெரியும். இவை வரலாற்று ஆசிரியர் பிபின் சந்திரா தரும் புள்ளிவிபரங்கள். இதுதான் இந்திய நிலைமையாக இருந்தது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த ஆர்ய தர்மாபிவர்த்தினி சபை - திருக்கோவிலூர், சிதம்பரம் - அத்வைத சபை, ஆரிய தர்மாபிவர்த்தினி பிரம்மண மஹாசபை – வீரட்டம், ப்ராமணர் சநாதன தர்ம சம்ரட்சண சபை – தஞ்சை, அத்வைத ப்ரகடன சபை - மதுரை, வர்ணாசிரம தர்ம சபை - சோலார்பேட்டை என்பவை பொதுவாகவே கல்வியை எதிர்த்தன.
‘சென்னை மாநிலக் கல்லூரியில் நம்மவர்கள் படித்தால் அவர்கள் பண்பாட்டை இழந்துவிடுவார்கள், வேதப்பாட சாலையில் படிக்கும் ஆண்களையே நாம் நம் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவர்கள்தான் நம் பெண்களுக்கு சிறந்த கணவர்களாக இருப்பார்கள்’ என்று அத்வைத சபை கூறியது. எந்த நிலைமையில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு.
திராவிட இயக்கம் வந்துதான் படிக்க வைத்ததா என்று கேட்கும் ஞானசூனியங்கள் இதனை அறிய வேண்டும்.
நீதிக்கட்சி அரசு 09.03.1923 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது.அதன்படி அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்பதைக் கட்டாயச் சட்டம் ஆக்கியது நீதிக்கட்சி அரசு. இந்தியத் துணைக்கண்டத்தில் நீதிக்கட்சி ஆட்சிதான் முதன்முதலாக அனைவருக்கும் கல்வி என்பதைச் சட்டமாக்கியது. நீதிக்கட்சி ஆட்சி அமையும் வரை மருத்துவப்படிப்பில் ஒரு மாணவன் சேர வேண்டுமானால் அவன் கட்டாயமாக சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்கிற விதிமுறை நடப்பில் இருந்தது. இது யாருக்கு சாதகமானது எனச் சொல்லத் தேவையில்லை. நீதிக்கட்சி பதவியேற்றவுடன் பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற விதி தூக்கி எறியப்பட்டது.
அந்தக் காலத்தில் கல்லூரி முதல்வர்களே, யாரைச் சேர்க்கலாம், யாரைச் சேர்க்கக் கூடாது என தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர்களாக இருந்தார்கள். அதனை மாற்றி கல்லூரிக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுதான் விருப்பு வெறுப்பு இல்லாமல் மாணவர்களைத் தேர்வு செய்யும் என்று விதிவகுத்தது நீதிக்கட்சி ஆட்சி. பட்டியலின மாணவர்களைக் கட்டாயமாக அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்க வேண்டும், மறுக்கும் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் நிதி வழங்கப்பட மாட்டாது என்று சட்டமியற்றியது நீதிக்கட்சி ஆட்சி. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கும் கல்லூரிப் படிப்பிற்கும் உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியது. மாணவர் விடுதிகள் உருவாக்கப்பட்டது. கிராமப்புற ஆரம்பக் கல்வி வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு, 500 பேர் இருக்கும் கிராமத்தில் ஒரு பள்ளியை உருவாக்கலாம் என சட்டம் போடப்பட்டது. இரவுப் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. பஞ்சாயத்துகளில் வாசக சாலைகள் உருவாக்கப்பட்டன.
இந்த வரிசையில் பெண்களுக்கு எட்டாம் வகுப்புவரை இலவசக்கல்வி அளிக்கப்பட்டது. பெண்களுக்கு செகண்டரி பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு, அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இவைதான் தமிழ்நாட்டில் –- அன்றைய சென்னை மாகாணத்தில் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது. பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் திறக்கப்பட்டது. 1967 ஆட்சி மாற்றமானது தமிழ்நாட்டில் அனைத்துவித மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது.
கல்லூரிக் கல்வியில் அதிகப்படியான கவனத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செலுத்தினார். 1947 முதல் 67 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் 68. ஆனால் கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 காலக்கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது. புதுமுக கல்லூரி வகுப்பு வரை இலவசக் கல்வி என்று முதல்வர் கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களே, ‘எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கலைஞர் கருணாநிதியிடம் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்கள். அறிவியல் பாடங்களை அதிகப்படுத்தி அறிவியல் கூடங்களை அதிகம் அமைத்தார். பாடப்புத்தகங்கள் இலவசமாகத் தரப்பட்டன. பஸ் பாஸ் வழங்கப்பட்டது. கணினி பாடத்தை அறிமுகம் செய்தார்.
மருத்துவம், சட்டம், தமிழ் இணையம், கால்நடை ஆகியவற்றுக்கு தனித்தனி பல்கலைக் கழகங்களை உருவாக்கினார். நெல்லை, சேலம் பல்கலைக் கழகங்களை உருவாக்கினார். ஏராளமான மருத்துவக் கல்லூரி களை உருவாக்கினார். இந்த வரிசையில் கலைஞரின் கொள்கைக்கும், இலக்குக்கும் வாரிசாக அமைந்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசானது -கல்வியை அனைத்துப் பிரிவினருக்குமானதாக ஆக்கும் முயற்சியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளது.
கல்விச் சாலைக்குள் வந்தவர்களை முன்னேற்றுவது மட்டுமல்ல, வர முடியாதவர்களையும் வரவழைத்து முன்னேற்றும் அரசாக தனது அரசைச் செயல்பட வைத்து வருகிறார் முதல்வர் அவர்கள். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்க்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000/–- அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக இத்திட்டம் 05.09.2022 அன்று துவங்கப்பட்டது. 1.16 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். ‘படிப்பை பாதியில் நிறுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த 12 ஆயிரம் மாணவிகள் –- இத்தொகை கிடைத்ததால் படிப்பை தொடர்கிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். ஒரு லட்சம் மாணவிகள் இதில் பயனடைய இருக்கிறார்கள். ‘‘பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் அவர் கல்லூரிக்குள் நுழைகிறார். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தை திருமணங்கள் குறையும். பெண் அதிகாரம் பெறுவாள்” என்று வரிசைப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
அனைவர்க்குமான வளர்ச்சி என்று முதலமைச்சர் சொல்லி வருவது இதனைத்தான். படிக்க வந்தவர்களை முன்னேற்றுவது மட்டுமல்ல, படிக்க முடியாதவர்களையும் வரவழைத்து படிக்க வைப்பதுதான் புதுமையானது!
Also Read
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !