murasoli thalayangam
களத்தில் முதலமைச்சர் : “இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” -முரசொலி புகழாரம் !
களத்தில் முதலமைச்சர்
கோட்டையில் இருந்து உத்தரவு போடுபவராக மட்டுமல்ல, கடைக்கோடிக்கும் சென்று அவை செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண் காணிப்பவராகவும் இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கோட்டையில் இருந்து மட்டுமல்ல, களத்துக்குச் சென்றும் ஆட்சியைச் செலுத்திக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக முதலமைச்சர் அவர்கள் நடத்திய ஆய்வுக் கூட்டமானது தமிழ்நாடு அரசு நிர்வாகம் இதுவரை பார்க்காத காட்சிகள் ஆகும். பொதுவாக முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர்கள், அரசுத் துறை கூடுதல் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் வரையிலான கூட்டங்களை மட்டுமே நடத்துவார்கள். அதில் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
ஆனால், அதனினும் கீழ் மட்டத்தில் இறங்கி ஒவ்வொரு துறையிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகளை அழைத்து - ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் ஆய்வு நடத்தியது இல்லை. ஆய்வு நடத்துவதும் இல்லை. இதனை மாற்றி, அறிவிக்கப்படும் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதை நேரடியாக அவர்களிடமே கேட்கும் முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என்று இத்திட்டத்துக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நான்கு மாவட்டங்களை மட்டும் எடுத்து, அந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளைப் பட்டியலிட்டு - அதனை முன்கூட்டியே ஆய்வும் செய்து அதன் இன்றைய நிலைமையை உணர்த்தும் வகையில் இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் வரையறுத்து இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர்கள் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் -மாவட்ட உயரதிகாரிகள் கூட்டமாக மட்டும் இதனையும் சுருக்கி விடாமல் தங்கியிருக்கும் - மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வை முதலமைச்சர் அவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.
வேலூர் புறநகர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்குள் முதலமைச்சர் அவர்கள் திடீரென நுழைகிறார்கள். அந்தப் பள்ளிக்கு முதலமைச்சர் அவர்கள் வருவது முன்கூட்டியே சொல்லப் படவில்லை. திடீரென அந்தப் பள்ளியின் பெயரை அறிவிக்கிறார்கள். முதலமைச்சரின் வாகனம் நுழைகிறது. காலை உணவுத் திட்டம் செயல்படுவது குறித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர். அனைத்து பிள்ளைகளும் வந்துவிட்டார்களா - அவர்கள் வருவதற்கு முன்னால் உணவு வந்து விட்டதா - வந்த உணவு தரமானதாக சுவையாக இருக்கிறதா - இது குறித்து பள்ளிக் குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் - ஆகிய அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார் முதலமைச்சர். இந்தத் தகவல்களை வைத்து அதிகாரிகளிடம் கேள்வி கேட்டார் முதலமைச்சர் அவர்கள்.
பள்ளிக் குழந்தைகள் அனைவரும் உணவு தரமானதாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் சில பள்ளிகளுக்கு உணவானது சீக்கிரமாக வந்து விடுகிறது. சில பள்ளிகளுக்கு உணவு தாமதமாக வருகிறது என்கிற புகார் சொல்லப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கிறார். 'மிகச் சரியான
நேரத்தில் வந்தால்தான் உணவு சூடாகவும் சுவையாகவும் இருக்கும். எனவே, உணவை எடுத்து வருவது குறித்து கவனமாக இருக்க வேண்டும்' என்று சொல்கிறார் முதலமைச்சர்.
ஒரு உணவு தயார் ஆவதில் இருந்து - அது பள்ளிக்கு வருவது வரை ‘செயலி'யில் பதிவு செய்ய வேண்டும். இப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் முதலமைச்சர் ஆய்வு செய்துள்ளார். இப்படி உணவுப் பொருள் தரமான இடத்தில் தயாரிக்கப்படுகிறதா, சமையல் கூடம் சுத்தமாக இருக்கிறதா என்பதையும் பார்த்துள்ளார். வேலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சி.எம்.சி. காலனியில் உணவுக் கூடத்தை திடீரென்று போய் பார்த்துள்ளார் முதலமைச்சர். அந்த உணவை சுவைத்தும் பார்த்துள்ளார்.
வேலூர் சத்துவாச்சேரியில் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல ஆய்வு மையத்தையும் பார்வையிட்டுள்ளார் முதலமைச்சர். கட்டுமானப் பணிகள் தரமானதாக இருக்கிறதா என ஆய்வு செய்துள்ளார். இவை அனைத்தும் முன்கூட்டியே சொல்லப்படாத இடங்கள் ஆகும். இந்த இடங்களுக்குச் செல்லும் வழியெங்கும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதா, சுத்தமாக உள்ளதா என்பதைக் குறித்து வைத்துக் கொண்ட முதலமைச்சர் அவர்கள், அதன்பின் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் தான் பார்த்த இடங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள்.
'நான் செல்லும் வழியில் பல இடங்களில் குப்பைகள் குவிந்திருப்பதைப் பார்த்தேன். இவை சரியல்ல. அதிகாரிகள் அதிகாலையிலேயே ரவுண்ட்ஸ் போயிருந்தால் இப்படி இருக்காது அல்லவா? இனிமேலாவது அதிகாலையில் சுற்றி வந்து பாருங்கள்' என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். இப்படி ஒவ்வொரு சிறுசிறு அறிவுரைகளாகச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
அதே நேரத்தில் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் அதிகாரிகள், அலுவலர்கள் ஆகிய அனைவரையும் பாராட்டினார் முதலமைச்சர் அவர்கள். “கடந்த 20 மாத காலத்தில் எத்தனையோ திட்டங்களைத் தீட்டினோம். அவற்றில் 80 சதவிகித பணிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம் என்றால் அது உங்களது துரிதமான செயல்பாடுகளால்தான் என்பதை உறுதியாக ஒப்புக் கொள்பவன் நான். அந்த வகையில் தான் உங்களுக்கு நன்றி சொன்னேன். இதே ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். உற்சாகப்படுத்துவதாகவும், வழிகாட்டுவதாகவும் இக்கூட்டமானது நடைபெற்றுள்ளது.
திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணத்தில் இருந்து குறைவாகச் செலவு செய்து - முடித்துக் காட்ட முடியுமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதே போல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் இட்ட உத்தரவு என்பது மிக மிக முக்கியமானது. அனைத்து அரசுத் துறைகளும் தனித்தனியாக அல்ல, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டு நிர்வாக வரலாற்றில் மிகமிக முக்கியமான தலைசிறந்த முன்னெடுப்பாக 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற இந்த திட்டம் அமைந்துள்ளது. தலைசிறந்த நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலமாக தலைசிறந்த முதலமைச்சராக இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!