murasoli thalayangam

‘’இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுத வேண்டும்”: முதல்வர் சொன்னதை மெய்பித்த பூம்புகார் ஆய்வு அறிக்கை

முரசொலி தலையங்கம் (23-01-2023)

பூம்புகார்

பூம்புகார் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிற ஆய்வு நேற்றைய தினம் வெளியாகி இருக்கிறது. இன்றைய தினம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்திருந்தால் அவர் அடைந்திருக்கும் மகிழ்ச்சியானது பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!

‘’சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை என் தம்பி கருணாநிதி தனது வளமிகு சொற்திறத்தால் - கற்பனைத் திறத்தால் நாடகக் காப்பியமாக வடித்துத் தருவது பொருத்தமானதே!’’ - என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். சிலப்பதிகாரத்தை முன் வைத்து மூன்று முக்கியமான பங்களிப்பை தமிழுக்குச் செய்து கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

* சிலப்பதிகார நாடகக் காப்பியம் – என்பது படைப்பிலக்கியமாக!

* ‘பூம்புகார் – என்ற திரைப்படைப்பாக!

* பூம்புகார் – என்ற கலைக்கூடமாக!

இவை மூன்றும் சிலப்பதிகாரத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய மாபெரும் தொண்டாகும்.

‘’பொதுவாக, ஆறு, கடலுடன் கலக்கும் முகத்துவாரத்திற்குப் புகார் என்பது பெயர். அதன்படி, காவிரி ஆறு கடலுடன் கலக்கும் இடமும் புகார் என்றே வழங்கப்பெற்றது. பின்னர், இந்தப் புகார், பொலிவின் காரணமாகவும், சிறப்பின் காரணமாகவும் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் பூம்புகார் என்னும் பெயர் மாறி, காவிரி புகும் பட்டிணம் என்றாகி, அதுவும் நாளடைவில் காவிரிப் பூம்பட்டிணம் என்று பலவாறாக வழங்கப் பெறலாயிற்று. கழக அரசு பழந்தமிழ்ப் பெயர்களையும், போற்றத்தக்க பழந் தமிழ்ப் பண்பாட்டையும் விடாமல் வலியுறுத்தி வந்ததால், மீண்டும் பூம்புகார் மலர்ந்து, தமிழர் மனத்தில் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்த திட்டமிட்டது” என்று ‘நெஞ்சுக்கு நீதி’யில் தீட்டினார் கலைஞர் அவர்கள்!

முத்துப் பந்தரும், தோரண வாயிலும் பொன்னும் மணியும் இழைத்த அரிய வேலைப்பாடுகள் உடையவை. கரிகாலன் இவற்றையெல்லாம் காவிரிப் பூம்பட்டினத்திற்குக் கொண்டுவந்து, ஒன்று சேர்த்துக் கண்கவரும் கொலுமண்டபம் ஒன்றை அமைத்தான். இந்த மண்டபம் புலவர்கள் பாடும் சிறப்பைப் பெற்றது. இதற்கு பட்டிமண்டபம் என்று பெயர். பட்டினப்பாக்கத்தில் ஐவகை மன்றங்கள் இருந்தன. அவை, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் எனும் பெயர் பெற்றிருந்தன –- என்பதை அன்றே கண்டுபிடித்து எழுதி இதனை மீண்டும் அப்படியே உருவாக்க நினைத்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.

கடற்கோள்களால் மறைந்த நகரமாக பூம்புகார் இருந்ததாலும், கண்ணகி வாழ்ந்த ஊரில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப நினைத்தும் பூம்புகார் கலைக் கூடத்தை கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். சிலப்பதிகாரக் காட்சிகளைச் சிற்பங்களாக வடித்து, அவற்றை ஒரு மண்டபத்திலே அமைத்து, சிலப்பதிகாரக் கதையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். 1973 ஏப்ரல் 17 ஆம் நாள் சித்திரை பெளணர்மி நாளில் திறப்பு விழா செய்யப்பட்டது.

கண்ணகி கதையை விளக்கும் 48 சிற்பங்கள், ஒரே கல்லில் எட்டடி உயரமும், மூன்றரை டன் எடையும் கொண்ட மாதவி சிலை, ஏழு மாடங்கள் உள்ள கலைக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களது பெயரால் விருந்தினர் மாளிகை அமைக்கப்பட்டது. திறப்பு விழாவில் 24 அலங்கார வண்டிகள் கொண்ட ஊர்வலம் சென்றது. தமிழறிஞர்கள் அனைவரையும் அழைத்து மேடையில் அமர வைத்தார் தலைவர் கலைஞர். பட்டிமன்றமும், கவியரங்கமும் நடந்தன. மீண்டும் சிலப்பதிகார காலத்தை மனக்கண் முன் கொண்டு வந்தார் கலைஞர் அவர்கள். திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது என்று கேட்கும் தற்குறிகளுக்கு இதெல்லாம் தெரியாது. இத்தகைய விழாக்களின் மூலமாக தமிழினத்தின் எழுச்சியை மீட்பதற்கு அடித்தளம் அமைத்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.

அன்றைய தினம் எந்த சிலப்பதிகார காலத்தை நம் மனக்கண் முன் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்களோ, அதே காலத்தை வரலாற்றுப் பூர்வமாக மெய்ப்பிக்கும் ஆய்வு முடிவானது வந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலைக் கழக தொலை உணர்வுத் துறை பேராசிரியரும், பூம்புகார் ஆய்வுத்திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளருமான சோம. இராமசாமி தலைமையிலான குழுவினர் தங்களது முதல்கட்ட ஆய்வு அறிக்கையை கடந்த 20 ஆம் நாள் வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆய்வுப் பணியை இவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை சார்பில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவிரி டெல்டா -1 பகுதியில் உள்ள பூம்புகார் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கண்டு பிடித்துள்ளார்கள். தற்கால கடற்கரையில் இருந்து 30 - 40 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கு கீழே 50–100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுக நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. துறைமுகம், கட்டடங்கள், கலங்கரை விளக்கம் ஆகியவை இருந்துள்ளன. பூம்புகார் நகரம் 1 - என்பது 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், பூம்புகார் நகரம் 2 என்பது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், பூம்புகார் நகரம் 3 என்பது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று ஆய்வு அறிக்கையில் கூறி இருக்கிறார்கள்.

பூம்புகாரின் வரலாற்றை முழுமையாக வடிவமைக்க 12 நிறுவனங்களை இணைத்து இந்த ஆய்வை தொடர இருக்கிறோம் என்றும், இதைப் போலவே குமரிக் கண்டத்தையும் ஆய்வு செய்ய உள்ளோம் என்று பேராசிரியர் சோம.இராமசாமி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

‘’இந்தியாவின் வரலாறு என்பது தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அறிவித்தார்கள். அத்தகைய அறிவிப்புகள் ஆய்வாளர்களின் அறிக்கைகள் மூலமாக மெய்ப்பிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.

‘தமிழ்நாடு அப்போது இல்லை’ – என்று சொல்லிக் கொள்பவர்கள் இதனைக் கவனிக்க வேண்டும்!

Also Read: நாடாளுமன்ற தேர்தல்.. பிரதமர் மோடி பேச்சில் தெரியும் பயம்: சுட்டிக்காட்டும் முரசொலி!