murasoli thalayangam
6 ஆண்டுகள் கடந்தும் தொடரும் மர்மம்.. பணமதிப்பிழப்பால் நாட்டில் கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா?: முரசொலி!
முரசொலி தலையங்கம் (03-01-2023)
நோக்கம் நிறைவேறியதா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை அளித்துள்ளது. இது பா.ஜ.க. அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. அரசின் நடவடிக்கைக்கு எது உண்மையான வெற்றியாக அமையமுடியும் என்றால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறி இருந்தால் மட்டும்தான் அதன் வெற்றியாகச் சொல்ல முடியும்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் நள்ளிரவில் பிரதமர் நரேந்திரமோடி ஒரு அறிவிப்பைச் செய்தார். இந்த நிமிடத்தில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு என்ன காரணம் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. ஆறு ஆண்டு காலம் ஆனபிறகும் அந்த ‘மர்மம்’ தொடரவே செய்கிறது. இந்த நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் சொன்னபிறகும் மர்மம் தொடரவே செய்கிறது.
எதற்காக இந்த நடவடிக்கை என்று அப்போது பிரதமர் அப்போது விளக்கினார். ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் அதை பக்கம் பக்கமாகச் சொன்னது.
* நாட்டில் இனி கருப்புப் பணம் இருக்காது.
* நாட்டில் இனி ஹவாலா இருக்காது
* நாட்டில் இனி எல்லை தாண்டிய வன்முறை இருக்காது. கருப்புப் பணம் தான் வன்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
* நாட்டில் இனி போதைப் பொருள் நடமாட்டம் இருக்காது. போதையால் வரும் பணம், கருப்புப் பணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
– இவைதான் பா.ஜ.க. அரசு சொன்ன காரணங்கள். இப்படிச் செய்து கொண்டு இருக்கும் யாரும் அன்று தெருவில் பணத்தை மாற்றுவதற்காக அலைந்து கொண்டிருக்கவில்லை. ஏ.டி.எம். வாசலில் நிற்கவில்லை. 2000 ரூபாய் நோட்டை அப்பாவி ஒருவன் கண்ணில் பார்க்க வாரக்கணக்கில் ஆனது. ஆனது, அவர்கள் யாரை ஒழிப்பதாகச் சொன்னார்களோ, அவர்கள் தங்கள் நோட்டுகளை மாற்றிவிட்டு நிம்மதியாக ஆகிவிட்டார்கள்.
சரி, ஆறு ஆண்டுகள் ஆனதே பாரத தேசத்தில் கருப்புப்பணம் ஒழிந்து விட்டதா? கள்ளப்பணம் ஒழிந்துவிட்டதா? எல்லை தாண்டிய வன்முறை இல்லையா? போதை பொருள் நடமாட்டம் இல்லையா? அனைத்துமே இருக்கிறது. அப்படியானால், பணமதிப்பிழப்பு பயனைத் தந்துள்ளதா?
இது குறித்து ஏற்கனவே பலமுறை நாம் எழுப்பிய கேள்விகளைத் தான் மீண்டும் எழுப்ப வேண்டியதாக உள்ளது. அந்தக் கேள்விகள் அப்படியே தான் இருக்கின்றன.
2017–முதல் இன்று வரை குஜராத் துறைமுகங்களில் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பே பல்லாயிரம் கோடி ஆகும். உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளர்களால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் குஜராத் வழியாக வருகிறது. ஆப்கானிஸ்தானில் தயாராகும் ஹெராயின்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவுக்குக் கடத்தப்படுவதாக ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் கூறுகிறது. சமீப காலமாக குஜராத் துறைமுகங்களைப் பயன்படுத்தி போதைப் பொருள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடமாநிலங்களில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2021-–ம் ஆண்டு மட்டும் சுமார் 21 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டு கள் மட்டும் 12 கோடி என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் போலி 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் மட்டும் ரூ.12.18 கோடியாகும். அதாவது கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலானவை 2 ஆயிரம் ரூபாய் தாள்களே ஆகும். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு ரூ.15.92 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2017, 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.28.10 கோடி, ரூ.17.95 கோடி, ரூ.25.39 கோடி, ரூ.92.17 கோடி மற்றும் 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக ரூ.15.49 கோடி போலி ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன. 2021 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்களில் 500 ரூபாய் தாள்கள் ரூ.6.6 கோடி மதிப்புக்கும், ரூ. 200 தாள்கள் 45 லட்சம் மதிப்புக்கும் கைப்பற்றப்பட்டது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே புதிதாக 2,000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாக அரசு கூறும் நிலையில், தற்போது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளில் கள்ளநோட்டுகளில் அதிகம் அச்சிடப்பட்டது 2,000 ரூபாய் நோட்டுகள்தான்.
* 2016 சனவரி 2 ஆம் நாள் நடந்தது பதான்கோட் தாக்குதல். 7 பேர் பலி.
* 2016 பிப்ரவரியில் பொம்பொரியில் எட்டு ராணுவ வீரர்கள் பலி.
* 2016 செப்டம்பரில் உரியில் இருக்கும் இந்திய ராணுவத் தலைமையகத்தில் நடந்த தாக்குதலில் 19 படைவீரர்கள் பலி.
* 2017 ஏப்ரல் 24 அன்று இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீது சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பலி.
* 2017 –- போபால் உஜ்ஜைனி தொடர் வண்டியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டுப் பேர் காயம்.
* 2017 - அமர்நாத் கோவில் தாக்குதலில் ஏழு பேர் பலி.
* 2017 –- லெத்திபோரா கமாண்டோ பயிற்சி நிலைய தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் கொலை.
* 2019– பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதல் நடந்தது. ஒரு தற்கொலை தீவிரவாதி தாக்கியதில் 40 படைவீரர்கள் பலி.
* 2021 அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் 11 பேர் பலி.
* 2022 ஆகஸ்ட் 11 –- இரஜோரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாகுதலில் 3 ராணுவ வீரர்கள் மரணம்.
- இவை எல்லாம் எதைக் காட்டுகிறது? எல்லை தாண்டிய தீவிரவாதம் நின்று விட்டதா?
எது பயனாக இருக்கும் என்றார்களோ அது பயனாக இல்லை. மர்மமாகவே இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!