murasoli thalayangam
'சமூக நீதியை நிலைநாட்ட இப்போதும் இவர்கள் தேவை': இந்தியா முழுமைக்குமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல்!
முரசொலி தலையங்கம் (28-12-2022)
இந்தியா முழுமைக்குமான குரல்!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளர்களில் ஒருவரான ஆ.கோபண்ணா எழுதிய 'மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு" என்ற நூலினை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை என்பது இந்தியா முழுமைக்குமான குரலாக அமைந்துள்ளது. இதையே, ராகுல் காந்தியின் நேற்றைய உரையும் தெளிவுபடுத்துகிறது.
“இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொண்டிருந்ததும் - இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொள்ள வேண்டியதும் ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான்” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் அவர்கள், இந்தியா வின் குரலை நேரு அவர்கள் எதிரொலித்தார் என்றும், இந்தியா முழு மைக்குமான மனிதராக - இந்தியா முழுமைக்குமான பிரதமராக நடந்து கொண்டார் என்பதையும் விளக்கினார். ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனம் - ஒரே கலாச்சாரம் - ஒரே பண்பாடு ஒற்றைத் தன்மை - ஒற்றை சட்டம் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தவர் நேரு என்பதையும் குறிப்பிட்டார். வகுப்புவாதமும், தேசிய வாதமும் சேர்ந்து இருக்க முடியாது என்று நேரு சொன்னதைச் சுட்டிக் காட்டினார் முதலமைச்சர். ஒற்றை மதவாதம் தலைதூக்கும் போதுதான் வேற்று மையில் ஒற்றுமை கண்ட நேருவின் பெருமை உயர்கிறது என்றும் குறிப்பிட்டார் முதலமைச்சர் அவர்கள்.
“இத்தனை ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டுக்கு தந்தை பெரியாரும். பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் தேவைப் படுவதைப் போல - இந்தியாவுக்கு காந்தியடிகளும், மாமனிதர் நேருவும், தேவைப்படுகிறார்கள். கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார் பின்மையை, சமத்துவத்தை. சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை நாம் நிலைநாட்டுவதற்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள்” என்றும் முதலமைச்சர் அவர்கள் குரல் ஒலித்தது. இதுதான் இன்று இந்தியாவுக்குத் தேவையான குரலாகும்.
டெல்லி செங்கோட்டையில் பேசிய ராகுல்காந்தி, 'மதவெறுப்பு அரசியலுக்கு எதிராக அன்பைப் பரப்புவோம்' என்று சொல்லி இருக்கிறார். "நேருவைப் போல பேசுகிறார் ராகுல்' என்று முதல்வர் சொல்வது இதனால்தான்.
முன்னாள் பிரதமர் நேருவை பா.ஜ.க.வினர் அதிகப்படியான வன்மத்துடன் விமர்சித்து வருகின்றனர். 'நேரு பிரதமர் ஆனது தான் இந்தியாவுக்கு பின்னடைவு' என்று சொல்லி வருகிறார்கள். படேல் கையில் அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இன்று ஏற்படும் பல பின்னடைவுகளுக்கு 1964 ஆம் ஆண்டு மறைந்து போன நேருவைக் காரணமாகச் சொல்லி தாங்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
இந்தியாவின் வளர்ச்சியை அனைவர்க்குமானதாக ஆக்கியதும். அனைத்துத் தரப்பினருக்குமானதாக ஆக்கியதும், ஒற்றைத் தன்மை யில் இருந்து விலக்கியதும்தான் நேருவின் வெற்றி ஆகும். இரண்டு நாடுகள் உருவாகும் போது ஒரு நாடு மதச்சார்புள்ள ( பாகிஸ்தான்) நாடாகவும், இன்னொரு நாடு மதச்சார்பற்ற ( இந்தியா) நாடாகவும் ஆனது. இந்தியாவின் இத்தகைய தன்மைக்கு நேருவே காரணம்.
1954 ஆம் ஆண்டு இந்தியாவில் அனைத்து மாநில முதலமைச்சர் களுக்கும் பிரதமர் நேரு எழுதிய கடிதத்தில், “இந்தியா மாபெரும் நாடாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இந்தியா அகத்திலோ, புறத்திலோ மற்றவற்றை ஒதுக்கக் கூடாது. அறிவின் அல்லது ஆன்மாவின் அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள எல்லாவற்றையும் கைவிட வேண்டும்” என்று குறிப்பிட்டார். சமத்துவத் தையும் சோசலிசத்தையும் தனது இலட்சியமாக அறிவித்தார்.
வகுப்புவாதப் பிரச்சினையில் எந்த சூழலிலும் சமரசம் செய்யக் கூடாது என்றார் நேரு. 'வகுப்புவாதப் பிரச்சினையில் சமரசம் செய்வது நம் கொள்கைக்குத் துரோகம் செய்வதாகும். இந்தியாவின் சுதந்திரத்தை அழிப்பதாகும்' என்றார் நேரு. இந்தியாவின் கல்வி, அரசாங்கம், நிர் வாகம் ஆகியவை அனைத்தும் மதத்தில் இருந்து தனித்திருக்க வேண் டும் என்றார். எல்லா மதத்தினருக்கும் தனது அரசு சம வாய்ப்பைத் தரும் என்றார். 'நாட்டில் கல்வி வளர்ச்சி அடையும் பொழுது. மக்களிடம் அறிவியல் சிந்தனை அதிகரிக்கும் பொழுது வகுப்புவாதம் படிப்படியாக குறைந்துவிடும்' என்று நினைத்தார் நேரு. ஆனால் கல்வி வளர்ச்சி அதிகம் ஆகும் போதும், அறிவியல் வளர்ச்சியின் விளைவாக இருக்கும் ஊடகங்களிலும் வகுப்புவாதம் தலைதூக்கியே வருகிறது. வார்த்தை களின் வன்மம் சேர்த்து அதிகமாக எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.
“இந்திய அரசு மதச்சார்பில்லாதது என்று நாம் கூறுகிறோம். அதன் அர்த்தம் என்ன? மதத்தை நிராகரிக்கின்ற சமூகத்தை அது குறிப்பிடவில்லை. மக்கள் மதத்தை நம்புவதற்கு உரிமையுண்டு; மதத்தை நம்பாதிருப்பதற் கும் உரிமையுண்டு. மதங்களின் பெயரால் அல்லது அரசின் அடிப்படை யான கருதுகோளைப் பற்றி சச்சரவுகள் கூடாது என்பது அதன் அர்த்தம்” என்று விளக்கினார் அன்றைய பிரதமர் நேரு அவர்கள்.
தத்துவஞானி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் மதச்சார்பின்மையை இந்தியப் பண்பாட்டின் ஒரு பகுதியாக விளக்கினார். “(அரசு) ஏதாவதொரு மதத்துக்கு முக்கியத்துவம் அளிக்காது. மற்றவர்களைக் காட்டிலும் எங்க ளுக்கு அதிகமான உரிமைகளுண்டு என்று யாரும் சொல்லமுடியாது. ஒரு மனிதர் தன்னுடைய மதத்தின் காரணமாக துன்பப்படக்கூடாது. எல்லோரும் முழுமையான அளவுக்கு சமூக வாழ்க்கையில் பங்கெடுக்கவேண்டும்.. இங்கு சொல்லப்படும் மதச்சார்பின்மை இந்தியாவின் தொன்மையான சமய மரபுடன் பொருந்துகிறது." என்றார் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்.
இவை அனைத்தும் திரும்பத் திரும்ப பேச வேண்டிய கருத்துகளாக உள்ளன. ஏனென்றால் இத்தனையாண்டு கால வளர்ச்சியை வகுப்பு வாதம் காவு வாங்கத் துடிக்கிறது. இதனைத் தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்பதையே முதலமைச்சரின் முழக்கம் அழுத்தம் தருகிறது. அதனையே ராகுலின் உரையும் எதிரொலிக்கிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!