murasoli thalayangam
“சேது சமுத்திரத் திட்டம்.. அத்வானி & ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்” : அம்பலப்படுத்திய முரசொலி !
சேதுபாலமும் இரட்டை வேடமும் – 2
எல்லாவற்றிலும் மதவாத காவிச் சாயம் பூசும் சக்திகள், சேது சமுத்திரத் திட்டத்திலும் அதே காரியத்தைச் செய்தார்கள். இந்தியக் கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமைவதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘‘நாம் இருக்கும் வரை ராமர் சேதுவை யாராலும் தொட முடியாது” என்று எல்லாக் கூட்டங்களிலும் அத்வானி சொல்லி வந்தார்.
பா.ஜ.க.வை விட ஜெயலலிதாதான் அதிகமாகக் குதித்தார். ‘‘ராமர் பாலம் ஒரு புராதனச் சின்னம். நடுக்கடலில் இவ்வளவு தொடர்ச்சியாக இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையில் பாலம் ஏற்படக் காரணம் என்ன? இயற்கையாக இது தோன்றியது என்றால் வேறு எங்கும் ஏன் தோன்றவில்லை?” என்று பெரும்புத்திசாலியைப் போல கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தார் ஜெயலலிதா.
‘இத்தனை ஆண்டு காலத்தில் நடந்த கடல் சீற்றங்களால் ஏன் அந்தப் பாலம் இடியவில்லை?’ என்ற புல்லரிக்கும் கேள்வியைக் கூட ஜெயலலிதா கேட்டார்.
அண்ணா மேம்பாலம் போல ஒரு பாலம் ராமேஸ்வரம் கடலுக்குள் இருப்பதைப் போல ஜெயலலிதாவே கற்பனை செய்து கொண்டு, அந்தப் பாலம் எப்படி இத்தனை லட்சம் ஆண்டுகளாக இடியாமல் இருக்கிறது என்று கேட்டார் ‘கான்வென்ட்’ ஜெயலலிதா.
சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 10.5.1986 தீர்மானம் போட்டவர் தான் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்பதே ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லை.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பலமுறை கருத்துச் சொன்னவர்தான் ஜெயலலிதா. 1991 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில், இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இருந்தார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ( 22.8.1991)
2001 ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதில் ராமர் பாலம் என்ற சொல் இல்லை, ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றுதான் சொல்லி இருந்தார் ஜெயலலிதா.
பா.ஜ.க.வும் சேதுசமுத்திரத் திட்டத்தை ஆதரித்த கட்சிதான். 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று சென்னையில் ம.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாகவே அறிவித்தார்கள்.
‘‘இன்றைக்கு நம்முடைய வைகோ அவர்கள், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நானும் அக்கறை கொண்டு இருக்கிறேன். ஆனால் தொடர்ந்து பதவியில் இருந்த அரசுகள் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வராத காரணத்தால் இப்போது அந்தத் திட்டத்தின் செலவு அதிகமாக உயர்ந்து இருக்கிறது.
சிறப்பான இந்த வேளையில், அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவில், இந்த மாபெரும் மக்கள் கடலுக்கு முன்னால் நான் அறிவிக்கிறேன். சேது சமுத்திரத் திட்டத்தை இந்த அரசு விரைவில் நிறைவேற்றும்” என்று பலத்த கைதட்டலுக்கு இடையில் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அறிவித்தார்கள்.
சேது சமுத்திர திட்டத்தின் தொடக்க ஆய்வுப் பணிக்காக ஐந்து கோடி ரூபாயை பா.ஜ.க. அரசின் நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்கா அவர்கள் 1999 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தார்கள். இந்த அறிக்கை இரண்டு ஆண்டுகளில் தரப்பட வேண்டும் என்றும் பா.ஜ.க. அரசு சொன்னது. சேது சமுத்திரத் திட்டம் புத்துயிர் பெற்றிருப்பதாக அன்றைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ‘இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்று நாடாளுமன்றத்திலேயே நிதி அமைச்சர் சின்கா பேசினார்.
2003 ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சத்ருக்கன் சின்ஹா அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் சங்கரலிங்கத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பாம்பன் தீவிற்கு கிழக்கே, ஆதம் பாலம் வழியாகச் செல்கின்ற புதிய கடல்வழிப் பாதையில் திட்டம் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இத்திட்டம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லி இருந்தார். எனவே சேதுசமுத்திரத் திட்டப் பாதையை தீர்மானித்தது பா.ஜ.க. ஆட்சி காலமே ஆகும்.
பா.ஜ.க. ஆட்சி காலத்து அமைச்சர்களாக இருந்த அருண்ஜெட்லி 9.3.2001 அன்றும், வி.பி.கோயல் 29.10.2002 அன்றும், சு.திருநாவுக்கரசர் 25.10.2002 அன்றும், சத்ருக்கன் சின்ஹா 23.10.2003 அன்றும் கடல்வழிப் பாதை தொடர்பான கோப்புகளில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். 6 ஆவது கடல்வழிப் பாதையைத் தீர்மானிக்கும் கோப்பில் அதிகமான கையெழுத்து பா.ஜ.க. அமைச்சர்கள்தான் போட்டுள்ளார்கள். ஆட்சி பறிபோனபிறகு அரசியல் காரணங்களுக்காக ராமர் பாலம் இருந்தது என்று கிளம்பியது பா.ஜ.க.
2004 ஆம் ஆண்டு ஆட்சி மாறியது. தி.மு.க.வை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் மலர்ந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேதுசமுத்திரத் திட்டத்தையும் இணைக்க வைத்தார் தலைவர் கலைஞர். கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனார் டி.ஆர்.பாலு அவர்கள்.
மதுரையில் தொடக்க விழா நடந்தது. 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு போடப்பட்ட அரசியல் முட்டுக்கட்டைகளின் காரணமாக நின்று போனது. இப்போது அந்தத் தடையை பா.ஜ.க. அரசே உடைத்துவிட்டது. அப்படி எதுவும் இல்லை என்று பா.ஜ.க. அரசே சொல்லி விட்டது. இனி என்ன? சேது சமுத்திரத் திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் நிறைவேற்றித் தர பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முனைப்பு காட்ட வேண்டும்!
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!