murasoli thalayangam
கழக ஆட்சியில் முதன்மையாக திகழும் தமிழ்நாடு.. தமிழினத்தை வாழ்விக்கும் சொல்தான் ’திராவிட மாடல்’.. முரசொலி !
முரசொலி தலையங்கம் (21.12.2022)
முதன்மையான தமிழ்நாடு - 2
‘இந்தியா டுடே’ ஒரு வெற்றிச் செய்தியை வழங்கி இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் தனக்குத்தானே ஒரு இலக்கை வைத்துக் கொண்டார் முதலமைச்சர் அவர்கள். அதுதான், ‘திராவிட மாடல்’ என்பதாகும். தமிழினத்தை வாழ்விக்கும் சொல்தான் திராவிட மாடல் என்பதாகும்.
திராவிடம் - – தமிழர்களுக்கு கற்பித்தது.
திராவிடம் -– தமிழர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது.
திராவிடம் -– சமூக நீதியை நிலைநாட்டியது.
திராவிடம் -– பெண்களுக்கு சம உரிமையைப் பெற்றுத் தந்தது.
திராவிடம் –- தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.
திராவிடம் –- தமிழ் மறுமலர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
திராவிடம் -– இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலைநிமிர வைத்தது.
திராவிடம் -– தேய்ந்து கிடந்த தெற்கை வளப்படுத்தியது
– என்று குறிப்பிட்ட முதலமைச்சர் அவர்கள், அத்தகைய இலக்குதான் எனது இலக்கும் என்றும் சொல்லி வந்தார். அதனைச் செயல்படுத்திக் காட்டத் தொடங்கி இருக்கிறார் என்பதைத்தான் ‘இந்தியா டுடே’ சொல்கிறது.
* ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடம்
* பொருளாதாரத்தில் 2 ஆவது இடம்
* உள்கட்டமைப்பில் 3 ஆவது இடம்
* சுகாதாரத்தில் 3 ஆவது இடம்
* தூய்மையில் 3 ஆவது இடம்
* கல்வியில் 4 ஆவது இடம்
* சட்டம் ஒழுங்கில் 4 ஆவது இடம்
* சுற்றுச்சூழலில் 4 ஆவது இடம்
* தொழில் முனைப்புகளில் 5 ஆவது இடம்
இப்படி உயரத்தை நோக்கி நகர்த்திக் கொண்டு போகிறார் இன்றைய முதலமைச்சர் அவர்கள். தமிழகம் ஒட்டுமொத்தமாக எத்தகைய உயர்வை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பதை விரிவாக எழுதி இருக்கிறது ‘இந்தியா டுடே’.
“ஒரு நிர்வாகி என்ற முறையில் ஸ்டாலினின் நிர்வாகப் பாணி அவருக்கு முன்பிருந்த முதலமைச்சர்களின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தனது அமைச்சரவை சகாக்களை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து காலைத் தொட்டு வணங்க வைத்த அ.தி.மு.க. தலைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவைப் போலல்லாமல், அடிவருடிகளைப் போல் புகழ்தலைத் தவிர்க்கிறார். அரசியலில் நீண்டகாலம் இருந்தவர் என்பதால் எதையும் பொறுமையாகக் கவனிக்கிறார்” என்று ‘இந்தியா டுடே’ எழுதி இருக்கிறது. இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பதன் அடையாளம்தான் ‘இந்தியா டுடே’ வழங்கிய மொத்தப் பாராட்டையும் தனக்காக வைத்துக் கொள்ளாமல், அமைச்சர்கள் அனைவருக்கும் இது பொதுவானது என்று முதலமைச்சர் சொன்ன சொல்லின் மூலம் உறுதி ஆகி இருக்கிறது.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்லத் திருமணத்தில் உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள், ‘இந்தியா டுடே’ வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து பெருமை பொங்கச் சொன்னார். “நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும், அதுதான் எனக்குப் பெருமை என்று நான் சொன்னேன். இந்த ஆண்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது தனிப்பட்ட ஸ்டாலினால் அல்ல; இங்கிருக்கக் கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லோருடைய கூட்டு முயற்சியால்தான் இன்றைக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்று சொன்னார்கள். இதுதான் இத்தகைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு துறையையும் தனித்தன்மையுடன் இயங்க அனுமதித்து –- அவர்களது வளர்ச்சிக்கு வழிகாட்டும் சிறப்பான பணியை முதலமைச்சர் அவர்கள் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு துறைக்கும் இலக்கை குறித்துக் கொடுத்துள்ளார்கள். அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைக் காட்டி இருக்கிறார்கள். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தரு கிறார்கள். இதனை மிகச் சரியாகச் செய்து வரும் அமைச்சர்களை பொது மேடைகளில் வெளிப்படையாக முதலமைச்சர் அவர்கள் பாராட்டிப் பேசுகிறார்கள்.
அரசு விழாக்களாக இருந்தாலும்- துறை சார்ந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் – அந்த துறை சார்ந்த சாதனைகளைப் பட்டியலிட்டு அமைச்சர்களைப் பாராட்டுவதை தனது வழக்கமாக முதலமைச்சர் அவர்கள் வைத்துள்ளார்கள். இது தன்னுடைய அமைச்சர்கள், எத்தகைய திறமைசாலிகள் என்பதை மாநிலத்துக்குச் சொல்வதாக மட்டுமல்ல; தனது திறமையின் மீதான மாபெரும் நம்பிக்கையாகவும் அமைந்துள்ளது.
சட்டமன்றத்தில் தன்னை அளவுக்கு மீறிப் புகழும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை வெளிப்படையாகவே கண்டித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு நேரம் ஒதுக்கவே அதிகம் விரும்புவதை இதன் மூலமாகக் காட்டினார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நேரம் ஒதுக்கிச் சொல்ல வைத்து அதற்கு பதில் அளிக்கும் ஜனநாயகப் பாங்குடன் அவை நடவடிக்கைகளை நகர்த்திச் செல்கிறார்.
அனைத்தையும் எட்டிவிட்டோம், அனைத்திலும் வென்றுவிட்டோம் என்பது இதன் பொருள் அல்ல. நாம் அடைய வேண்டிய தூரம் இருக்கிறது. அந்த இலக்கை நோக்கிய முதலமைச்சரின் பயணமானது சீராகச் சென்று கொண்டு இருக்கிறது. நமது மாநிலம் தொழில் தொடங்குவதற்கு எளிமையான மாநிலமாக தன்னை தகவமைத்து வருகிறது. இந்த தன்மையில் 14 ஆவது இடத்தில் இருந்து 3–ஆவது இடத்துக்கு வந்தி ருக்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு பன்னாட்டுத் தொழில் முனைவோர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு 2–ஆவது பெரிய மாநிலமாக திகழ்கிறது.
உள்கட்டமைப்பு வசதி களின் காரணமாக முதலீட்டாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகவும் விரும்பும் மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு 80 சதவிகித கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. அனைவரையும் திறமைசாலிகளாக ஆக்க, ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர். இப்படி அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அதனால்தான் இந்த பெருமையை அடைய முடிந்தது.
இவை அனைத்துக்கும் காரணம், ‘பதவி அல்ல இது, பொறுப்பு’ என்று தமிழினத் தலைவர் கலைஞர் சொன்ன சொல் மட்டுமே. அந்த சொல்லே, முதலமைச்சரின் செயலாக இருக்கிறது. அதுவே தமிழ்நாட்டின் உயர்வாக அமைந்திருக்கிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!