murasoli thalayangam
“முழுமுதல் வெற்றி.. தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பாராட்டு!
முதன்மையான தமிழ்நாடு – 1
‘இந்தியா டுடே’ வார இதழ், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக அறிவித்திருக்கிறது. முழுமுதல் வெற்றியை இரண்டாவது ஆண்டே அடைந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கடந்த ஆண்டு இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற உயரத்தை அடைந்தார். ‘தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்பதே தனக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும்’ என்று அவர் தொடர்ந்து சொல்லி வந்தார். இதோ இப்போது அந்த உயரத்தையும் அடைந்திருக்கிறார். அத்தகைய வெற்றியையும், ‘எனது அமைச்சர்கள் அனைவருக்குமான வெற்றி’ என்று சொல்லி பகிர்ந்தளித்து தனது பெருந்தன்மையை நிலைநாட்டி இருக்கிறார் முதலமைச்சர்!
இந்தியாவில் ஒட்டுமொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று ‘இந்தியா டுடே’ ஆங்கில வார இதழ் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வறிக்கையை ‘இந்தியா டுடே’ வெளியிட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்களை கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம், நிர்வாகம், சுற்றுலா, தொழில், சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை 12 பிரிவுகளாகப் பிரித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி ஆயோக், பொருளாதார நிபுணர்கள், மிகச்சிறந்த கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் நம்பகத்தன்மை வாய்ந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 12 பிரிவுகளில் 9 பிரிவுகளில் தமிழ்நாடு முன்னிலை பெற்று ஒட்டுமொத்த செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளது.
பொருளாதாரத்தில் 4வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. உள்கட்டமைப்பில் கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்தாண்டு 3வது இடத்துக்கும், சுகாதாரத்தில் 5வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.
கல்வியில் ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கும், சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் நான்காவது இடத்துக்கும் தமிழ்நாடு முன்னேறியுள்ளது. நிர்வாகத்தில் தமிழ்நாடு தற்போது 6வது இடத்தைப் பிடித்துள்ளது. தூய்மையை கடைப்பிடிப்பதில் கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பழனிசாமி ஆட்சி காலத்தில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்பதை 7.12.2020 நாளிட்ட ‘இந்தியா டுடே’ ஏடு வெளியிட்ட ஆய்வு அறிக்கை மூலமாக அறியலாம்.
இரண்டு தர வரிசைப்பட்டியலை ‘இந்தியா டுடே’ அப்போது வெளியிட்டு இருந்தது. ஒன்று - 13 துறைகளில் ஒரு அரசாங்கத்தின் சமீபத்திய செயல்பாடுகள் என்பது ஆகும். இரண்டு - வளர்ச்சிக் குறியீடுகளில் சமீப கால மாற்றங்கள் என்பது ஆகும். இந்த இரண்டையும் வைத்து சிறந்த செயல்பாடு கொண்ட அரசாங்கம் என்ற தரவரிசையை வெளியிட்டு இருந்தது. இந்த சிறந்த செயல்பாட்டுக்குரிய அரசாங்கம் என்ற பட்டியலில் பழனிசாமியின் அரசாங்கத்தின் பெயரே அப்போது இடம்பெறவில்லை.
கடந்த ஐந்தாண்டு (2016-20) காலத்தில் அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் என்ற தரவரிசைப் பட்டியலில் பழனிசாமி அரசாங்கத்தின் பெயரே அப்போது இடம்பெறவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய வளர்ச்சியைக் கொண்டு வருவதன் மூலமாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் மொத்தம் 20 மாநிலங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் பழனிசாமியின் அரசு, 19 ஆவது இடத்தில் தான் இருந்தது.
‘இந்தியா டுடே’ வெளியிட்ட அடிப்படையில் பழனிசாமியின் ஆட்சியின் நிலைமை இதுதான் :
* உள்கட்டமைப்பில் 20 வது இடம்.
* ஐந்து ஆண்டுகளின் செயல்பாட்டில் 19 வது இடம்.
* விவசாயத்தில் 19 ஆவது இடம்.
* சுற்றுலாவில் 18 ஆவது இடம்.
* உள்ளடக்கிய வளர்ச்சியில் 18 ஆவது இடம்.
* தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14 ஆவது இடம்.
* ஆட்சி நிர்வாகத்தில் 12 ஆவது இடம்.
* தூய்மையில் 12 ஆவது இடம்.
* சுகாதாரத்தில் 11 ஆவது இடம்.
* கல்வியில் 8 ஆவது இடம்.
* பொருளாதார வளர்ச்சியில் 8 ஆவது இடம்
* சுற்றுச்சூழலில் 6 ஆவது இடம்.
* சட்டம் ஒழுங்கில் 5 ஆவது இடம்.
- இதுதான் பழனிசாமி வாங்கிய இடம்!
இப்படி தரைமட்டத்தில் கிடந்த தமிழகத்தைத்தான் தலைநிமிர வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
– தொடரும்!
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !