murasoli thalayangam
சாவர்க்கர் பரம்பரையில் வந்த தேசமகா பக்தர்களின் ‘குறுகிய பாரதம்’: பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்த முரசொலி
பா.ஜ.க.வின் ‘குறுகிய பாரதம்’!
தமிழ் - தமிழன்- தமிழ்நாடு- தென்னாடு என்று நாம் பேசினால் உடனே, ‘பாரத் மாதாகீ ஜே’ கோஷ்டிக்கு உடனே கோபம் வந்துவிடும். குறுகிய எண்ணம் - மொழிவாதம் - இனவாதம் – - மாநில வாதம் - என்று சிந்தனா பக்கவாதத்துடன் குறை சொல்வார்கள்.
ஆனால் கர்நாடக பா.ஜ.க. முதலமைச்சரும், மகாராஷ்டிரா பா.ஜ.க. முதலமைச்சரும் பேசியதைக் கவனித்தீர்களா? அதே மொழிவாதம் - இனவாதம் - மாநிலவாதம் பேசுகிறார்கள். ‘பாரத்’ என்று நினைக்காமல் கர்நாடகாவுக்கு ஜே, மகாராஷ்டிராவுக்கு ஜே என்று சொல்கிறார்கள். சாவர்க்கர் பரம்பரையில் வந்த இந்த தேசமகா பக்தர்கள் இப்படி குறுகிய வாதங்களுக்குள் மூழ்கலாமா? இந்த பாரத தேசத்துக்கு வந்த பெரும் சோதனை பா.ஜ.க.வால் வந்த பெரும் சோதனை அல்லவா இது?
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியை மாராட்டிய மாநிலமும் - மராட்டியத்தில் உள்ள சோலாப்பூரை கர்நாடகமும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், அவை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
தமிழகத்துக்கும் இது போல பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. இதேபோல், அனைத்து மாநிலங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கர்நாடகாவுக்கும் மராட்டியத்துக்கும் வெடித்திருக்கிறது. இரண்டு மாநில அரசுகளையும் ஆள்வது பா.ஜ.க.தான். ஆனால் அவர்களுக்கு பாரத தேச அக்கறை இல்லாமல் போனது ஏன்?
1960 ஆம் ஆண்டு பம்பாய் மாநிலம் இரண்டாகப் பிரிந்தது. மகாராஷ்டிரா, குஜராத் என பிரிந்தது. அதுவரை பம்பாய் மாகாணத்தில் இருந்த பெலகாவி, வியாப்புரா, பாகல்கோட்டை ஆகியவை மைசூர் மாகாணத்தில் சேர்க்கப்பட்டன. இதனை அப்போதே மராட்டிய அரசியல்வாதிகள் எதிர்த்தார்கள். பெலகாவி என்பது அதிகமாக மராட்டியம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதி என்று சொன்னார்கள். இது மகாராஷ்டிராவுடன்தான் இருக்க வேண்டும் என்றார்கள்.
இது குறித்து ஆராய 1966 ஆம் ஆண்டு மெஹர்சந்த் மகாஜன் ஆணையம் அமைக்கப்பட்டது. இக்குழு தனது இறுதி அறிக்கையில் பெலகாவி உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. பெலகாவியை மராட்டியத்தில்தான் சேர்க்கவேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்த ஆவணங்களைத் தயாரிக்க 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை கண்காணிக்க இரண்டு அமைச்சர்களை நியமித்துள்ளது மராட்டிய அரசு. மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தலைமையில் ஒரு சட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது கர்நாடக அரசு. கடந்த நவம்பர் 30 அன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் வரவில்லை. மராட்டிய அரசு இப்போது புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. இதற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்நாடக அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதனைக் கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். பெலகாவியில் நடந்த தனியார் விழாவில் கன்னடக் கொடியைக் காட்டிய மாணவர்கள் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளார்கள். வேறொரு விழாவில் பங்கேற்க மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் இருவர், பெலகாவி வருவதாக இருந்தது.
‘இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவுவதால் இரண்டு அமைச்சர்களும் இங்கு வர வேண்டாம்’ என்று கர்நாடக தலைமைச் செயலாளர் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். இதனையே கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் பேட்டியாக கொடுத்திருக்கிறார்.
‘’தற்போதைய சூழலில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் பெலகாவிக்கு வருவது சரியல்ல. அவர்கள் வரக்கூடாது. வந்தால் கடந்த காலத்தில் எடுத்ததைப் போன்ற நடவடிக்கை எடுப்போம். மராட்டியத்தில் உள்ள ஜாத் வட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள், தங்களை கர்நாடகாவுடன் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
பெலகாவி விவகாரத்தை மராட்டியம் கையில் எடுப்பதால் ஜாத் பகுதியை கர்நாடகாவில் சேர்க்க வலியுறுத்தி அப்பகுதி ஊராட்சிகளின் தீர்மானங்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வோம்” என்று பசவராஜ் பொம்மை அறிவித்து இருக்கிறார். சபாஷ் சரியான போட்டி என்பது மாதிரி மாநில வாதம் அங்கு தலைதூக்கி இருக்கிறது.
இதனால் இரண்டு மாநில அரசுகள் மோதிக் கொண்டு இருக்கின்றன. இரண்டுமே ‘பாரத – பா.ஜ.க.’ அரசுகள்தான். மாற்றுக் கட்சி அரசுகளாக இருந்தால் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பார்கள். ஆனால் இரண்டுமே பா.ஜ.க. அரசுகளே! (மராட்டியத்தில் இருப்பது சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி என்றாலும் அது பாஜக ஆட்சிதான்!) எல்லாமே ‘கீ.. ஜே’ கோஷ்டிகள்தான்! இத்தகைய குறுகிய வாதம் கொண்டவர்களை ஒருங்கிணைக்க ‘காசி சங்கமம்’ போல ஒன்றை நடத்த வேண்டாமோ?
‘ஒரே பாரதம் என்ற முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ்ச் சங்கமம்’ என்று சென்னையில் பேசி இருக்கிறார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன். நம்மை பிரிக்கும் வேறுபாடுகள் அனைத்தும் இடைக்காலத்தில் வந்தவையாம். தவறான பொருளாதாரக் கணக்குச் சொல்வதைப் போலவே, தவறான சமூகக் கணக்கையும் சொல்லி இருக்கிறார். இந்த இடைக்கால வேறுபாடுகளை நீக்க பா.ஜ.க. என்ன செய்யப் போகிறது என்பதை அவர் சொல்லவில்லை. இருந்தால்தானே சொல்வார்!
இடைக்கால வேறுபாட்டை பசவராஜ் பொம்மை - ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூவரையும் வைத்து ஒரு பெலகாவி சங்கமம் நடத்தத் தயாரா? கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறதே! நாட்டுக்கே நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறதே! ஒரே பாரத எண்ணத்தோடு ஒரு முடிவை அறிவியுங்கள் பார்க்கலாம்! பார்க்கலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!