murasoli thalayangam
“பொது சிவில் சட்டம் இசுலாமிய - பழங்குடி மக்களுக்கு எதிரானது..” : பா.ஜ.க அரசை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
பொது சிவில் சட்டம்
பா.ஜ.க. அடுத்து கையில் எடுக்கப் போகும் ஆயுதம் பொது சிவில் சட்டம்தான் என்பதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, அக்கட்சியின் தலைவர் நட்டா ஆகியோரின் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் போது, "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது ஜனசங்க நாள்களில் இருந்தே நாட்டு மக்களுக்கு பா.ஜ.க.வின் வாக்குறுதி ஆகும்" என்று உறுதிபடத் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. "பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களவைக்கும் அரசியல் நிர்ணயசபையும் அறிவுரை வழங்கி இருக்கிறது. ஏனெனில் மதச்சார்பற்ற ஒரு தேசத்தில் மதங்களின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக் கூடாது" என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
"பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வர பா.ஜ.க.வைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் ஆதரவாக இல்லை. இந்த விவகாரத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் தேவை. பா.ஜ.க. ஆளும் இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறையில் கிடைக்கப்பெறும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜனநாயக ரீதியான அனைத்து விவாதங்களும் நிறைவடைந்த பிறகே பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க. தீர்மானத்துடன் உள்ளது” என்றும் சொல்லி இருக்கிறார் அமித்ஷா. பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்பதை மிகமிகத் தெளிவுபடுத்தி விட்டார் அமித்ஷா. இதையேதான் அனைத்துக் கூட்டங்களிலும் பேசி வருகிறார் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் நட்டா. "பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது” என்று அவர் சொல்லி இருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அதில் இதனை முக்கியமான கொள்கையாக பா.ஜ.க. அறிவித்து வருகிறது."ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்று சட்டமன்றத் தேர்தல் நடக்கும் குஜராத், இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறிவிப்புச் செய்துள்ளார்கள். முடிந்த வரை விரைவாக இதனை அமல்படுத்துவோம் என்று நட்டா சொல்லி இருக்கிறார்.
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தரப்பினர் சிலரால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "இதுபற்றி ஆலோசித்து வருகிறோம்" என்று ஒன்றிய அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்து வரும் நிலையில் முன்கூட்டியே இதற்கான நாடாளுமன்ற, மாநிலங்களவை நிலைக் குழுக்களை பா.ஜ.க. அரசு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அமைத்துவிட்டது. இக்குழு வுக்கு பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தவர் இவர்.
"அனைவருக்கும் பொதுவான சட்டம்” என்பது வெளியில் இருந்து பார்ப்பதற்கு பளபளப்பாகத் தெரியலாம். ஆனால், பல்வேறு மதங்கள் உள்ள இந்த நாட்டில் அவர்களது பழக்க வழக்கங்கள் சார்ந்த கருத்துருக்களுக்கு மரியாதை தர வேண்டிய கடமை அனைவர்க்கும் உள்ளது.
இசுலாமியச் சிறுபான்மையினருக்கு திருமணம் மற்றும் மணமுறிவுக்கு தனியாக ஒரு சட்டம் இருக்கிறது. இதன்படி திருமணம், வாரிசு, தத்து எடுத்தல், சொத்து அளித்தல், வக்பு சொத்து பாதுகாப்பு ஆகியவைக்கான தனிச் சட்டம் இது. இது 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 'முஸ்லீம் தனிநபர் சட்டம்' ஆகும். அதுதான் இவர்களது கண்ணை உறுத்துகிறது.
இசுலாமியர்களுக்கு திருமணச் சட்டம் நீங்கலாக மற்றவை அனைத்தும் அவர்களுக்கும் பொதுவானதுதான். இந்திய அரசின் அனைத்துச் சட்டங்களும் அனைவர்க்கும் பொதுவானவைதான். "அனைவர்க்கும் சமநீதி" என்கிற அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை இவர்கள் கொண்டு வரவில்லை. இசுலாமியர்களுக்கு இருக்கும் தனிச்சட்டத்தை எடுப்பதற்கான தந்திரமாக பொதுசிவில் சட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். (இசுலாமிய திருமணச் சட்டம் குறித்த சாதக, பாதகங்கள் குறித்து இங்கு நாம் பேசவில்லை. அது தனி விவாதத்துக்குரியது!)
இது இசுலாமியர்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல. இந்தியப் பழங்குடி மக்களுக்கும் எதிரானது ஆகும். பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும் கட்டுப்படுத்துவதாக, அழிப்பதாக அமைந்திருப்பதாக வடமாநில பழங்குடி அமைப்பினர் சொல்லி இருக்கிறார்கள். பார்சிக்கள், ஜெயின்கள், சீக்கியர்களது தனிப்பட்ட வழக்கங்களுக்கு எதிராக இந்த சட்டமானது அமைந்துவிடும். 2012 ஆம் ஆண்டு சீக்கியர்கள் தனிச்சட்டத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இவை அனைத்தையும் மறந்துவிட்டு இப்போது, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் கிளம்பி இருக்கிறார்கள்.
வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிராகவே இருந்தது. 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் மக்களவையில் இதுகுறித்து பா.ஜ.க. உறுப்பினர் யோகி ஆதித்யநாத் (இன்றைய உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர்!) கேள்வி எழுப்பினார்.
அன்று சட்ட அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி அவர்கள், "சிறுபான்மைச் சமூகத்தினரிடமிருந்து தேவையான முன்முயற்சிகள் வராத வரை, அவர்களின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடக் கூடாது என்பது மத்திய அரசின் நிலையான கொள்கை ஆகும். எனவே, இது தொடர்பாக எந்த காலக் கெடுவையும் வகுக்க முடியாது" என்று பதில் அளித்திருக்கிறார். இதே பதிலை 2001 நவம்பர் 29 அன்றும் அமைச்சர் அருண்ஜெட்லி உறுதி செய்துள்ளார்.
அனைத்து மக்களும் தங்களது மதத்தை, நம்பிக்கைகளை, வழக்கங்களைப் பின்பற்றிக் கொள்வதற்கான உரிமையை அரசியல் சட்டத்தின் கூறுகள் வழங்கி உள்ளன. மதம் சார்ந்த நெறிகளில் முரண்பாடுகள் இருக்குமானால், காலத்தின் போக்குக்குத் தகுந்த சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் அதனைச் செய்யலாம். அதனைச் செய்வதற்கு பொதுசிவில் சட்டம் தீர்வு ஆகாது.
பொது சிவில் சட்டத்தின் நோக்கமானது மத உள்நோக்கமே தவிர, சீர்திருத்தம் அல்ல. இசுலாமியத் தனிச்சட்டம் குறித்து கோபம் வரும் இவர்களுக்கு சாதிக்குச் சாதி, கிராமத்துக்கு கிராமம் வைத்திருக்கும் தனித்தனிச் சட்டங்கள் குறித்து ஏன் கோபம் வரவில்லை? ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்குச் சொத்துரிமை, வாரிசுச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து இந்து சட்டமசோதாவை 1951 ஆம் ஆண்டு அன்றைய சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்தபோது எதிர்த்தவர் யார்? இன்றைக்கு பொதுசிவில் சட்டம் கொண்டு வரத் துடிப்பவர்களின் பிதாமகர்கள்- தானே? இனியும் அமைச்சராகத் தொடர்வதில் பயனில்லை என்று அம்பேத்கர் விலகியது யாரால்? எதனால்?
பொது சிவில் சட்டத்தின் தொடர்ச்சி என்பது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாகவும், பட்டியல் இன, பழங்குடி மக்களது தனிச்சட்டங்கள் உரிமைகளைப் பறிப்பதாகவும் படிப்படியாகச் செல்லும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தனி உரிமைச் சட்டங்களை ஒரே நாளில் தூக்கி எறியவும் இது அடிப்படை அமைத்துத் தரும். இந்த ஆபத்தை உணர வேண்டும்.
அனைவரும் பொது - அனைவரும் சமம் என்று நினைக்காதவர்கள் கொண்டு வருவது பொதுவான சட்டமாக இருக்காது. அனைத்து மதங்களும் - அனைத்து மொழிகளும் - அனைத்து இனங்களும் சமம் என்று நினைக்காதவர்கள் கொண்டு வருவது பொது நோக்கம் கொண்டதாகவும் இருக்காது.
Also Read
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !