murasoli thalayangam

அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க துடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு: முரசொலி சாடல்!

முரசொலி தலையங்கம் (28-11-2022)

அரசியலமைப்புச் சட்ட நாள் அன்றும் இன்றும் -1

நவம்பர் 26 அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நாள். அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நாள். இன்றுவரை இந்தியா வலிமையாக நிற்கிறது என்றால் அதற்குக் காரணம்: இந்திய அரசியலமைப்புச் சட்டமும், அதன் விழுமியங்களுக்குச் சேதம் ஏற்படாமல் காப்பாற்றிய தன்மையும்தான் என்பதை எவரும் மறுக்க இயலாது!

இந்தியவிடுதலைப்போராட்டம் நடந்துவரும்போதே. “இந்தியாவுக்கான தனியான அரசியலமைப்பு வேண்டும்" என்று 1922 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் கோரிக்கை வைத்தார். அதே ஆண்டு நடந்த சிம்லா மாநாட்டில் மத்திய சட்டசபையில் (அதாவது இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில்) இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில். புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான மாநாடு ஒன்றைக் கூட்டுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “இந்தியாவுக்கான புதிய அரசியலமைப்புப் பற்றி உருவாக்குவதற்காக வட்ட மேசை மாநாட்டைக் கூட்ட வேண்டும்” என்று பிரிட்டன் அரசை ஜவஹர்லால் நேரு (1924) கேட்டுக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு 42 அரசியல் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு கோரிக்கை விண்ணப்பமானது பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது பிரிட்டன் பொதுமக்கள் அவையில் விவாதிக்கப்பட்டது.

1927 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த காங்கிரசு மாநாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்ற தீர்மானத்தை மோதிலால் நேரு கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு நடந்த சென்னை காங்கிரசு மாநாட்டில். புதிய அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டத்தை காங்கிரசுக் கட்சி முழுமையாக தள்ளுபடி செய்தது. புதிய அரசியலமைப்பு இந்தியாவுக்குத் தேவை என்பதை பிரிட்டன் பிரதமர் அட்லி 1940ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டார். 1945 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நடந்து, தொழில் கட்சி ஆட்சி அமைந்தது.

இத்தகைய புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு லாரன்ஸ், கிரிப்ஸ், அலெக்சாந்தர் ஆகிய மூவரை அனுப்பி வைத்தார் பிரதமர் அட்லி. இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கி இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்கள். புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று இவர்கள்தான் சொன்னார்கள். அனைத்துத் தரப்பும் அனைத்துச் சிந்தனைகளும் அதில் இடம் பெற வேண்டும் என்று இவர்கள்

சொன்னார்கள். அதன்படி 389 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதியாக 211 பேர் பங்கு பெற்றனர்.

9.12.1946 அன்று சுதந்திரமான அரசியல் நிர்ணய சபை கூடியது. டாக்டர்இராசேந்திரபிரசாத் இதன்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரைவுக் குழுவின் தலைவராக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஏழு பேர் இக்குழுவில் இடம்பெற்று இருந்தார்கள். அண்ணல் அம்பேத்கர் அளித்த வரைவு அறிக்கையில் இறுதியாக 26.11.1949 அன்று டாக்டர் இராசேந்திர பிரசாத் கையெழுத்திட்டார். 2 ஆண்டுகள். 11 மாதங்கள், 18 நாட்கள் விவாதங்கள் நடத்தி தயாரிக்கப்பட்ட சட்டம் இது.

நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும், டாக்டர் இராசேந்திர பிரசாத் அவர்களும் எதையெல்லாம் சொல்லி பயந்தார்களோ அதுதான் இப்போது நடக்கத் தொடங்கி இருக்கிறது.

'’அரசியலமைப்பு உயர்வாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பு மிக மோசமானதாக ஆகிவிடும். மோசமான அரசியலமைப்பைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் மோசமான அரசியலமைப்பும் நல்லதாகிவிடும்” என்றார் அம்பேத்கர் அவர்கள்.

" நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றினால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும். இன்னல்கள் நேருமானால் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை நமது சுதந்திரத்தைக் காப்போம் என்ற உறுதிமொழியை மேற்கொள்ள வேண்டும்” என்று அன்றே சொன்னார் அண்ணல் அம்பேத்கர்.

"வகுப்பு வேறுபாடு. சாதி வேறுபாடு. மொழி வேறுபாடு. மாகாண வேறுபாடு போன்றவை நம்மிடம் உள்ளன. நாட்டின் நலனைப் பலிகொடுத்து விடாதவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். அரசியலமைப்பு என்பது உயிரில்லாத ஓர் இயந்திரம் போன்றது. அதனை மக்கள் இயக்கும் போதுதான் உயிர் பெறும். இயக்குபவர்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும்?” என்ற கவலையோடு பேசினார் டாக்டர் இராசேந்திர பிரசாத்.

அவர்கள் அன்று எதற்குப் பயந்தார்களோ, எது நடந்து விடக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடக்கத் தொடங்கி இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மையை மட்டுமல்ல, அரசியல் குணத்தையே மாற்றும் செயல்கள் வெளிப்படையாக நடக்கின்றன. சட்டத்தால் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசானது, இதனைப் பட்டவர்த்தனமாகவே செய்கிறது.

இந்திய அரசியல் சட்ட தினமான நவம்பர் 26ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் "ரிக் வேதமும் பாரத லோகதந்திரிக பாரம்பரியமும்", "சபாவும் சமிதியும்: பாரத லோகதந்திரிய பாரம்பரியத்தை ஆராய்தல்”, “கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பாரத லோகதந்திரமும்”, “கல்வெட்டு ஆதாரங்களும் லோகந்திரிக பாரம்பரியமும்”, “காப் பஞ்சாயத்துகளும் லோகதந்திரிக பாரம்பரியமும்" போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்த யு.சி.ஜி. பரிந்துரைத்துள்ளது.

அன்று எதற்காக சட்டம் தீட்டப்பட்டது? இன்று எதற்காக ரிக்வேதமும், அர்த்தசாஸ்திரமும் சொல்லப்படுகின்றன?

-தொடரும்

Also Read: ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை.. அருண்கோயல் நியமனத்தால் வெளிப்பட்டுள்ள பா.ஜ.க-வின் தோல்வி பயம்: முரசொலி!