murasoli thalayangam
‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை.. அருண்கோயல் நியமனத்தால் வெளிப்பட்டுள்ள பா.ஜ.க-வின் தோல்வி பயம்: முரசொலி!
முரசொலி தலையங்கம் (26-11-2022)
‘‘சட்டத்தின் மவுனத்தைச் சுரண்டுவது”
பொதுவாக தேர்தல்கள்தான் சர்ச்சை ஆகும். இப்போது இந்தியத் தேர்தல் ஆணையரே சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார்.
கடந்த 19ஆம் தேதி இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக அருண்கோயல் நியமிக்கப்பட்டார். “தேர்தல் ஆணையர் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போது தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்?” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
இந்தியாவானது அடுத்த பொதுத்தேர்தலை நெருங்கி வரும் போது தேர்தல் ஆணையர் நியமனமும் - அது தொடர்பான உச்சநீதி மன்றத்தின் கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் ஆணையராக இருந்த சுஷீல் சந்திரா, கடந்த மே மாதம் 15 அன்று ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதும் புதிய தேர்தல் ஆணையர் நியமிக்கப்படவில்லை. புதிய தலைமை ஆணையராக அருண்கோயலை நவம்பர் 19ஆம் தேதி நியமித்தார்கள்.
இந்த அருண்கோயல், ஒன்றிய அரசின் துறை சார்ந்த செயலாளராக இருந்து நவம்பர் 17ஆம் தேதிதான் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற இவரை இரண்டு நாட்களுக்குள் புதிய ஆணையராக நியமித்து இருக்கிறார்கள்.ஓய்வு வயதையும் அவர் அடையவில்லை. விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கிறார். மறுநாளே அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது. மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு கொலீஜியம் போன்ற முறையை அறிமுகம் செய்யும் மனுவை உச்சநீதிமன்றம் நவம்பர் 17 ஆம் தேதிதான் விசாரிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில் அவசர அவசரமாக அருண்கோயலுக்கு ஒனறிய அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வைக் கொடுத்து அவரையே தேர்தல் ஆணையராக நியமித்துவிட்டார்கள். கொலீஜியம் வைத்து ஆணையரைத் தேர்வு செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்டால், தாங்கள் நினைப்பவரை நியமிக்க முடியாது என்பதே ஒன்றிய ஆட்சியாளர்களின் உள்நோக்கமாக அமைந்திருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. எனவே தான் அருண்கோயலின் நியமனத்தை குளறுபடி என்று விமர்சித்துள்ளார்கள் நீதிபதிகள்.
தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்ற ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் இந்த அமர்வில் உள்ளார்கள். இப்பிரச்சினை குறித்து தங்களது கடுமையான கருத்துகளை நீதிபதிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி அடுக்கி இருக்கிறார்கள்.
‘‘2004 முதல் இதுவரை எந்த தலைமைத் தேர்தல் ஆணையரும் தங்களது முழு பதவிக் காலமான ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை. பத்து ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் 6 தலைமை ஆணையாளர்கள் இருந்துள்ளார்கள். இப்போதைய ஆட்சிக் காலத்தில் 6 ஆண்டுகளில் 7 ஆணையர்கள் இருந்துள்ளார்கள். ஆறு ஆண்டு காலம் பதவியில் ஒருவர் இருந்தால்தான் அவர் நினைக்கும் தேர்தல் சீர்திருத்தத்தைச் செய்ய முடியும். ஆனால் 160 நாள்,- 188 நாட்கள் பதவியில் இருந்தால் என்ன செய்ய முடியும்? இது கவலைக்குரியது” என்று சொன்ன நீதிபதிகள்.
‘‘இது அரசியல் சாசனத்தின் மவுனத்தைச் சுரண்டுவது போல இருக்கிறது” என்று உச்சந்தலையில் கொட்டி இருக்கிறார்கள்.
‘‘தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று ஒன்றிய அரசின் சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. இதனை உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு ஏற்கவில்லை. ‘‘எந்த அரசாக இருந்தாலும் தன்னைத் தானே அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகின்றன” என்று அமர்வின் தலைமை நீதிபதி ஜோசப், ஒன்றிய அரசின் மீதும் விமர்சனம் செய்துள்ளார்.
‘‘தற்போதைய நியமன நடைமுறைப்படி, ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை அப்படியே வைத்துக் கொள்வார்கள். எங்களைப் பொறுத்த வரையில் தேர்தல் ஆணையத்தின் நுழைவாயிலில் அதன் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியது அருண்கோயலின் நியமனம் ஆகும். தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது அருண்கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மனுதாரரின் வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். ‘‘அருண்கோயல் நியமிக்கப்படாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவரை நியமித்த செயல்முறையை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அவரது நியமனம் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் எங்களுக்கு வந்தாக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
‘’பிரதமருக்கு எதிராக புகார் வந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிகிற தலைமை தேர்தல் ஆணையர் வேண்டும்” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் கூறியிருக்கிறார். ‘’அருண்கோயலின் நியமனத்தில் எப்படி மின்னல் வேகத்தில்- 24 மணி நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன?’’ என்று நீதிபதிகள் கேட்டுள்ளார்கள்.
‘’நாங்கள் இந்த விவகாரம் குறித்து நவம்பர் 18ல் விசாரிக்கத் தொடங்கினோம். அன்றைய தினம் அருண்கோயலின் நியமன ஆவணம், பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பிரதமர் அன்றைய தினமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னல் வேகம் ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்தால் நான்கு பேர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த நால்வருமே ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க இயலாது. ‘தேர்தல் ஆணையராக ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நான்கு பேரை எப்படித் தேர்வு செய்தீர்கள்?’ என்று கேட்டுள்ளார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நியமனமாக அருண்கோயல் நியமனம் அமைந்திருக்கிறது. வரப்போகும் பொதுத்தேர்தல் குறித்த பயமே, பா.ஜ.க.வின் இந்தச் செயல்பாட்டின் மூலமாகத் தெரிகிறது!
Also Read
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!
-
”கனமழை - தயார் நிலையில் இருக்க வேண்டும்” : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
86,150 மாணவர்களுக்கும்,8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !