murasoli thalayangam
800 கோடிப் பேருக்கு வீடான பூமி.. இதைத் தாங்க தயாராகி இருக்கிறதா உலகம்? - கண்முன்னே இருக்கும் சவால்கள்!
முரசொலி தலையங்கம் (18-11-2022)
800 கோடி கனவுகள்!
இன்றைய உலகத்தின் மக்கள் தொகை 800 கோடியைத் தொட்டுள்ளது. இதனை ஐக்கியநாடுகள் அவை அதிகாரப்பூர்வமாக நேற்றைய தினம் அறிவித்திருக்கிறது.
‘’800 கோடி நம்பிக்கை -– 800 கோடி கனவுகள் –- 800 கோடி வாய்ப்புகள்!
நமது பூமி இப்போது 800 கோடிப் பேருக்கு வீடாகி இருக்கிறது.
நாம் 800 கோடி மக்களுடன் வலிமையாகும் இந்த தருணத்தில், 800
கோடிப் பேர் செழிக்கும் வகையில், நாம் ஒன்று சேர்ந்து ஒரு வலிமையான உலகத்தைக் கட்டமைப்போம் – என்று ஐ.நா. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
800 கோடி ஆகி இருக்கிறோம் என்றால் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே 100 கோடி அதிகமாகி இருக்கிறது. என்ற வகையில் இது பத்து ஆண்டுகால வளர்ச்சியாகும்.
1800 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 100 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. 100 முதல் 200 கோடியாக வளர 100 ஆண்டுகள் ஆனது. ஆனால் அது 800 கோடி ஆக 100 ஆண்டுகள் போதுமானதாகவும் இருக்கிறது. 900 கோடியாக எப்போது ஆகும்? என்ற அரிய கேள்விக்கான பதிலையும் ஐ.நா.சொல்லி இருக்கிறது. இதற்கு 14.5 ஆண்டுகள் ஆகுமாம். அதாவது 2037 ஆம் ஆண்டில் 900 கோடியைத் தொடுவோம். 2058 ஆவது ஆண்டில் 1000 கோடியைத் தொடுவோம். 2060 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1,040 கோடியாக ஆகும் என்றும் கணித்திருக்கிறார்கள்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 800 கோடியில் இந்தியர்களின் பங்கு என்பது 141.2 கோடி ஆகும். நம்மை முந்தி நிற்கிறார்கள் சீனர்கள். 142.6 கோடி என்பது சீனநாட்டின் மக்கள் தொகை ஆகும். அடுத்த ஆண்டில் சீனாவைத் தாண்டி இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகி விடும் என்பதையும் ஐ.நா. ஒப்புக் கொண்டுள்ளது.
2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையானது 166.8 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையானது 131.7 கோடியாகத்தான் இருக்குமாம். இந்தியா அப்போது மக்கள் தொகை வல்லரசாக இருக்கும்!
இதனைக் கூட, ‘இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவே’ ஐ.நா. கணித்துள்ளது. இந்தியாவில் சராசரி கருவுருதல் விகிதமானது 2.2 என்ற நிலையில் இருந்து 2 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. கூறுகிறது. நவீன குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகளே இந்தியாவில் கருவுறுதல் விழுக்காடு குறைந்ததற்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் பல செயல்கள் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிபரங்கள் உணர்த்துகிறது. 800 கோடி மக்களின் பிரச்சினைகளைத் தாங்கும் அளவுக்கு உலகம் தயாராகி இருக்கிறதா என்பதே இன்றைய கேள்வி ஆகும்.
சில நாடுகள் மக்கள் தொகையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. சில நாடுகள் தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதை நினைத்து வருந்தி, மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. இரண்டுமே இன்று உலகத்தில் நடந்து வருகிறது. ஜப்பான் உள்ளிட்ட உலகின் பணக்கார, தொழில் மய நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது. 22 நாடுகளில் மக்கள் தொகை மிகமிகக் குறைந்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இந்தியாவிலேயே 2050 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை குறையும் என்றே சொல்கிறார்கள். இவை அனைத்துமே ஆய்வுக்கு உரியவை ஆகும். இவை அனைத்தையும் துல்லியமாக ஆராய்ந்து திட்டங்களைத் தீட்டியாக வேண்டும்.
உலகின் இன்னொரு பகுதியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து கவலைப்பட்டுள்ளார்கள். இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு இம்முறைக் கிடைத்துள்ளது.
இதில் கலந்துகொண்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் இதனைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். “உணவுப் பொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்களுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க அவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான நிதியாதாரம் ஏழைகளிடம் இல்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் தோல்வியடைந்துள்ளதை தயக்கமின்றி ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த அமைப்புகளில் போதிய சீர்திருத்தங்களைப் புகுத்துவதிலும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறோம்” என்று மிகமிக வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்.
* வறுமை ஒழிப்பு
* உணவுப் பாதுகாப்பு
* ஊட்டச்சத்துக் குறைபாடு
* தண்ணீரின் தேவைகள்
* புவி வெப்பமடைதல்
* பருவநிலை மாற்றம்
* அழியும் இயற்கை வளம்
* வேலையின்மை
* எரிசக்தியின் தேவை
* தொற்றுநோய்கள்
* அனைவர்க்கும் இலவசக் கல்வி
* வகுப்பு மற்றும் பிளவுவாதங்கள்
* மிதமிஞ்சிய நுகர்வு கலாச்சாரம்
* நிலம் பிடிக்கும் யுத்தம்
* அண்டை நாடுகளிடையே மோதல்கள்
- ஆகியவை உலகளாவிய பிரச்சினைகளாக உள்ளன. அவற்றுக்கு ஒருநாடு தனியாகத் தீர்வினைக் காண முடியாது. ஒருங்கிணைந்த தீர்வை அனைத்துலக நாடுகளும் எட்ட வேண்டும். ஜி20 நாடுகளுக்குத் தலைமை வகித்துள்ள இந்தியா இதனை நோக்கி தனது கவனத்தைச் செலுத்தியாக வேண்டும்.
‘உண்டால் அம்ம, இவ்வுலகம்’ என்பது புறநானூற்றுப் பண்பாடு!
Also Read
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
பூம்புகார் கைத்திறன் விருதுகள் : 227 கைவினை கலைஞர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் TM அன்பரசன்!
-
மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!