murasoli thalayangam
“கல்வி என்பது மாநில உரிமையே” : பிரதமர் முன்னிலையில் தமிழ்நாட்டின் குரலை ஓங்கி ஒலித்த முதல்வர் - முரசொலி !
கல்வி என்பது மாநில உரிமையே!
“அதிகார பரவலாக்கலும், ஜனநாயகம் உயிர் பெறுதலும் கிராமங்களிலிருந்தே தொடங்க வேண்டும்” என்பது அறிஞர் அண்ணாவின் கருத்தாகும், இதுதான் காந்தியடிகளின் கருத்தும் ஆகும். அரண்மனையில் வீற்றிருந்த அதிகாரத்தை, கல்வியை ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்து எளிய மக்களின் கல்விக் கனவை நனவாக்கியது காந்தி கிராம பல்கலைக்கழகம்.
இதன் பட்டமளிப்பு விழாவில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அவர்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார்கள். பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் அவர்கள் ஆணித்தரமான கோரிக்கை ஒன்றை வைத்தார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வியானது மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கையாகும்.
‘’கல்வி தான் யாராலும், எந்த சூழலிலும் பறிக்க முடியாத சொத்து ஆகும். அத்தகைய அறிவுச் சொத்தை உருவாக்கித் தர வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதன் மூலமாக இத்தகைய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் கல்வி என்பது மாநிலப்பட்டியலில்தான் இருந்தது. அவசர நிலைக்காலத்தில்தான் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மீண்டும் அதனை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்பதே முதலமைச்சரின் கோரிக்கையாகும்.
இது ஏதோ அரசியல் கோரிக்கை அல்ல. - மாநில உரிமை – மக்களாட்சி – கல்வி உரிமை - மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை மாநில அரசு கல்விக்காகச் செலவு செய்கிறது. அப்படியானால் கல்வித்துறை அதிகாரங்கள் என்பவை மாநிலப்பட்டியலில்தானே இருக்க வேண்டும். ஆனால் பொதுப்பட்டியலில் வைத்து – நடைமுறையில், ஒன்றிய அரசு, அதிகப்படியான அழுத்தங்கள் தரும் துறையாக கல்வித் துறையை மாற்றி விட்டது.
பள்ளிகள் நடத்துவது எல்லாம் மாநில அரசு. ஆனால் புதிய தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு. மருத்துவக் கல்லூரிகள் அனைத்தையும் நடத்துவது மாநில அரசு. ஆனால் ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக் கல்வியைக் கட்டுப்படுத்துவது ஒன்றிய அரசு. அதனால்தான் கல்வி என்பது மாநிலப்பட்டியலில் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். இதைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறோம்.
‘’நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் அவர்கள் ‘அறம் செய்ய விரும்பு’ அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.
‘’மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது’’ என தமிழக அரசுத்தரப்பில் இந்த வழக்கின் விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ‘அறம் செய்ய விரும்பு’ அமைப்பின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘’எந்த நோக்கத்துக்காக, காரணத்துக்காக இந்த அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவிக்கப்படவில்லை. 1978 ஆம் ஆண்டு 45வது அரசியல் சாசன திருத்தம் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, கல்வி மீண்டும் மாநில பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலில் சேர்த்தது கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது’’ என வாதிட்டார்.
‘’தமிழகம் மட்டுமல்லாமல் எந்த மாநிலமாக இருந்தாலும் கல்வி சம்பந்தமாக இயற்றும் சட்டங்களை, டில்லியில் உள்ள அதிகாரி செல்லாததாக்க முடியும் என்பதால் இந்த திருத்தம் கூட்டாட்சிக்கு எதிரானது. என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தின் அடிப்படையில் மாநில பாடத் திட்டத்தை வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதும் கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது. அரசியல் சாசன நிர்ணய சபையில் கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டியது அவசியம் என விவாதங்கள் நடந்தது” என்றும் அவர் வாதிட்டார்.
கழக அரசும் இதனையே தனது முழுமையான கருத்தாக வழிமொழிந்துள்ளது. தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். ‘’உயர் கல்வியின் தரம் குறித்து தீர்மானிக்க மட்டுமே ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், ஒன்றிய அரசின் தலைமைச் செயலகமான டில்லி நார்த்பிளாக்கில் இருந்து கொண்டு, நாட்டில் உள்ள குழந்தைகள் குறிப்பிட்ட மொழியில்தான் படிக்க வேண்டும் என முடிவெடுக்க முடியாது; குழந்தைகள் இந்தி தான் படிக்க வேண்டும் எனக் கூறினால் அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்க வேண்டும். குழந்தைக்குத் தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது” என்று தமிழக அரசின் குரலை ஓங்கி ஒலித்தார் கபில்சிபல்.
அரசியல் சாசனத்தில் பொது ஒழுங்கு என்ற வார்த்தையைச் சேர்த்து கொண்டு வரப்பட்ட முதல் திருத்தத்துக்கு எதிராக தற்போதுதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகக் கூறி, 46 ஆண்டுகளுக்கு முந்தைய திருத்தத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் வாதங்களை வைத்தார்.
‘’கல்வி அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தமான கொள்கையல்ல எனவும், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது” என வாதிட்டார்.
‘’இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தன்னாட்சி அந்தஸ்து உள்ளது என்பதால் மாநிலத்தின் கல்வி குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே தகுதி உள்ளது’’ என்றும் கபில் சிபல் தெரிவித்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இதன் தீர்ப்பைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரும் வரை சட்டப் போராட்டம் தொடர வேண்டும்.
முரசொலி தலையங்கம்
15.11.2022
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?