murasoli thalayangam
"உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் மக்களுக்காக பேசட்டும்".. வாழ்த்திய முரசொலி!
இன்றைய முரசொலி தலையங்கம் (12.11.2022)
"என் வார்த்தைகள் அல்ல, என் வேலை பேசும்"
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஓய் சந்திரசூட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதி என்ற முக்கியப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இவரது தந்தையார் ஓய்.வி.சந்திரசூட், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது அடுத்த பெருமையாகும். உச்சநீதிமன்ற வரலாற்றில் மிக அதிக ஆண்டுகள் தலைமை நீதிபதியாக (1978-1985) இருந்தவர் ஒய். வி.சந்திரசூட் அதேபோல், இப்போது பொறுப்பேற்றுள்ள நீதிபதியும் இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருப்பார். அந்த வகையில் மிகமிக உன்னிப்பாகவும், கவனமாகவும் கவனிக்க வேண்டிய வருகையாக புதிய தலைமை நீதிபதியின் வருகை அமைந்துள்ளது.
"இந்திய நீதித்துறைக்குத் தலைமை தாங்குவது மிகப்பெரிய வாய்ப்பும் பொறுப்பும் ஆகும். பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதே எனது முன்னுரிமை, நாட்டில் உள்ள அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன்" என்று, பொறுப்பேற்றுக் கொண்டதும் தலைமை நீதிபதி கூறியிருக்கும் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது ஆகும்.
அவரது கடந்தகாலத் தீர்ப்புகள் அவரது அடையாளங்களாக இதனைத்தான் சொல்கின்றன. தனிமனித உரிமைகுறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் சந்திரசூட் பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையை நிலைநிறுத்தும் தீர்ப்புகளை அவர் வழங்கி இருக்கிறார். கருத்து வேறுபாட்டை ஜனநாயகத்தின் பாதுகாப்பு வால்வு" என்று சொன்னவர் இவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், "தனி மனிதர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரங்களைப் பெற உரிமை உண்டு மாறுபடும் உரிமையே வீரியமிக்க ஜனநாயகத்தின் அடையாளச் சின்னம். எதிர்த்தரப்பினர்களின் குரலை நெரிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தார்.
ஒரு திரைப்படத்தைத் தடை செய்யலாம் என்று சொன்னபோது. திரைப்படக் காட்சிக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, அனுமதி வழங்கி: காவல் துறையின் பாதுகாப்புத் தரப்படவேண்டும் எனத்தீர்ப்பளித்துள்ளார். பேச்சுச் சுதந்திரத்தைத் தடுக்கக் கூடாது. தணிக்கை செய்வதிலும் விதிவிலக்குகள் உண்டு என்றும் சொன்னார்.
சபரிமலை கோவில் தீர்ப்பை யாரும் மறந்திருக்க முடியாது. “கோவிலுக்குள் பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்த அமர்வில் நீதிபதி சந்திரசூட் இடம் பெற்றிருந்தார். இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் மாற்றம் வரவேண்டும் என்றும், பெண்களுக்கு அனுமதி மறுப்பது அடிப்படை மனித உரிமைகளை மறுப்பதாகும் என்றும் எழுதினார்.
இராணுவத்தில் பெண் அதிகாரிகளை, ஆண் அதிகாரிகளுக்குச் சமமாக மதிக்க வேண்டும்; பதவிகளை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். 'ஆணும் பெண்ணும் உடலளவில், மனதளவில் சமம் எனத் தீர்ப்பளித்தார். 23 நாடுகளின் நீதிபதிகள் மாநாட்டில் இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. 'இந்தியக் கடற்படையில் உள்ள பெண் மாலுமிகளுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு' என்ற தீர்ப்பளித்தவரும் இவரே, பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை வழங்கும் தீர்ப்பு வழங்கியவரும் இவரே. ஒரே பாலின திருமணம், இயற்கைக்கு எதிரானது அல்ல என்பதும் இவரது தீர்ப்பே, 20, 24 வார கர்ப்பத்தைக் அலைப்பதற்கு திருமணமான பெண்களைப் போலவே திருமணமாகாத பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சமீபத்தில் தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும், தீர்ப்புகளையும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். வெளிப்படையான நீதிமன்ற நடவடிக்கைகள் பொதுப்படையான நீதி ஆகியவற்றை பொதுமக்கள் அனைவரும் அறிய உரிமை உண்டு என்று அறிவுறுத்தினார்.
ஆதார் - பயோ - மெட்ரிக்' திட்டத்தின்மீது விமர்சனம் வைத்தார். ஆதார் அட்டையானது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி செல்லத் தக்கதா என்று விசாரணை நடந்தது. ஆதார் அட்டை செல்லும் என்று நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள். அந்த அமர்வில் இருந்த சந்திரசூட் மட்டுமே மாறுபட்ட தீர்ப்பை அளிந்தார். “இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி" என்று கடுமையாகக் கூறினார். "ஆதார் அட்டையானது தனிமனித பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது" என்றார். “ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாகக் கொண்டுவருவது அரசியல் சாசனத்தை ஏமாற்றும் வேலை" என்றார். "தனிநபரின் அடையாளம், பாதுகாப்பு, உரிமைகளைக் கேள்விக் குறியாக்குவதாக ஆதார் அமைந்துள்ளது” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். 'ஒரு தனிநபர் அடையாளத்தினைப் பாதுகாப்பதுதான் ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் வேலை' என்று சொன்னார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாடுகளில் பங்கெடுத்து உரையாற்றி உள்ளார் நீதிபதி சந்திரசூட் மனித உரிமைகளில் நாடுகடந்த நீதி, அரசியலமைப்பு ஏன் முக்கியமானது, கலை மூலம் சுதந்திரத்தைக் கட்டமைத்தல் ஆகிய தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறார். இந்தியாவை உருவாக்கும் சாயல்கள் - பன்மை முதல் பன்மைத்துவம் வரை” என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார்.
இந்தியாவின் புனித நூல்' அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே என்பதைச் சொல்லி வந்தவர் அவர். அரசியலமைப்பு' தான் அனைத்துக்கும் முக்கியத்துவம் என்று சொன்னவர் அவர்.
அரசை விமர்சிப்பது தேசத்துரோகம் ஆகாது. ஜனநாயகத்தன்மைதான் என்று குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். தேசவிரோதிகள் என்று அவர்களைச் சொல்வது அரசியலமைப்புச் சட்டத்தின் இதயத்தின் மீதான தாக்குதலாக அமையும் என்றும் சொல்லி இருக்கிறார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வந்த சூழலில் இதைப் பேசியதுதான் முக்கியமானது.
"என் வார்த்தைகள் அல்ல; என் வேலை பேசும்" என்று சொல்லியிருக்கிறார் தலைமை நீதிபதி சந்திரசூட், மக்களுக்காகப் பேசட்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!