murasoli thalayangam
தயிருக்கும் மோருக்கும் GST போட்ட பாஜகவை கண்டித்து எத்தனை முறை போராடுவது? - கேள்விகளை அடுக்கிய முரசொலி!
இன்றைய முரசொலி தலையங்கம் (09.11.2022)
எத்தனை முறை போராடுவது?
தமிழகத்தில் பால் விலை உயர்ந்துவிட்டதாகவும், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் பா.ஜ.க. அறிவித்துள்ளது.
பெட்ரோல் விலையைக் கண்டித்து- –
டீசல் விலையைக் கண்டித்து- –
சிலிண்டர் விலையைக் கண்டித்து- –
விலைவாசி உயர்வைக் கண்டித்து- –
ஜி.எஸ்.டி. வரிவசூலைக் கண்டித்து- –
நிதி ஒதுக்கீடுகளை முறையாக வழங்காததைக் கண்டித்து – - என பா.ஜ.க.வுக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்துவது என மக்கள் கேட்கிறார்கள்.
பால்விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. வெற்றி பெற்று வந்ததும் முதலமைச்சர் அவர்கள் அதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பித்தார். இதுதான் தி.மு.க. ஆட்சியாகும்.
கடந்த 5 ஆம் தேதியன்று ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து தமிழக அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். அதன் மூலமாக கிராமப் பொருளாதாரமும் உயரும்.
பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 32 இல் இருந்து 35 ரூபாயாகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு 41 லிருந்து, 44 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுவது உண்மைதான்.அதனை அரசு செய்யவில்லை.
விவசாயிகள் நலனுக்காகவே பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சொல்லி இருக்கிறார். “கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், பொதுமக்கள் அதிக அளவில் வாங்கும் நீலம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்பட வில்லை” என்றும் அவர் கூறினார். இதுதான் உண்மை.
பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஆவின் நீலம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை. ஆரஞ்சு நிற பால் பாக்கெட்களின் விலை மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
விற்பனை விலையைப் பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட நீல நிற பால் பாக்கெட் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை பாக்கெட் ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும் என்றுதான் அரசு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நிறைகொழுப்பு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு 46 ரூபாய்க்கே புதுப்பிக்கப்படும் என்றும் சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக மாற்றி அமைக்கப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது பொதுமக்கள் அதிகம் வாங்கும் நீல நிற, பச்சை நிற பால் பாக்கெட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆரஞ்சு பால் பாக்கெட் விலையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் 24 ரூபாய் குறைவு. இதுதான் உண்மையான நிலவரம் ஆகும்.
இதில் போராடுவதற்கு என்ன இருக்கிறது? அதனால்தான் பா.ஜ.க தனது போராட்டம் தொடர்பான அறிக்கையிலும் பால்விலை எந்தளவு உயர்ந்துள்ளது, அதனால் எந்தளவுக்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தகவலே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை பால்விலை உயர்வு, உயர்த்திவிட்டார்கள் பால்விலையை என்று பரப்ப நினைக்கிறார்கள். அதற்காக இத்தகைய போராட்ட அறிவிப்புகளைச் செய்கிறார்கள்.
உண்மையில் பால் கொள்முதல் விலை உயர்வுக்காக பால்வளத் துறையை பாராட்டி இருக்க வேண்டும். 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை செய்திருக்கிறது ஆட்சி என்று போற்றி இருக்க வேண்டும். கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த இது காரணமாக அமைந்துவிட்டது எனச் சொல்லி இருக்க வேண்டும். இவர்களிடம் இருந்து தான் நாள் தோறும் 40 லட்சம் லிட்டர் பாலை அரசு கொள்முதல் செய்கிறது. எனவே, கொள்முதல் விலையை உயர்த்தியதன் மூலமாக அனைத்து உற்பத்தியாளர்கள் மனதில் பால் வார்க்கப்பட்டுள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
தங்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்தார்கள். மூன்று ஆண்டு காலமாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இடுபொருள்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகமாகி விட்டது என்றும் அவர்கள் சொல்லி வந்தார்கள். அதனடிப்படையில்தான் பசும்பால், எருமைப்பால் கொள்முதல் விலை அதிகரித்து தரப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான இடுபொருள்களையும், கலப்புத் தீவனத்தையும், கால்நடை களுக்கான மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் தொய்வின்றி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழங்கப்பட்டும் வருகின்றன.
இந்த மாபெரும் நன்மையானது வெளியில் தெரிந்துவிடுவதைத் தடுக்கும் வகையில் அவதூறு பாணி ஆர்ப்பாட்டத்தை பா.ஜ.க. செய்கிறது. இவர்களது ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தங்களை தக்க வைப்பதற்காகவே என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
தயிருக்கும் மோருக்கும் ஜி.எஸ்.டி. போட்டது பா.ஜ.க. 90 நாட்கள் வரை கெடாத டிலைட் பாலுக்கு ஜி.எஸ்.டி. போட்டது பா.ஜ.க. 55 மைக்ரான் கொண்ட பால் கவருக்கும், அதனை அச்சடிப்பதற்கும் ஜி.எஸ்.டி. போட்டது பா.ஜ.க. இதன் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஜி.எஸ்.டி. போட்டது பா.ஜ.க. இதை எல்லாம் எதிர்த்து எத்தனை முறை போராடுவது?!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!