murasoli thalayangam
“இது உங்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தும்” : பா.ஜ.க-வின் கீழ்த்தர குதிரை பேர அரசியலை தோலுரித்த முரசொலி !
சந்தையுமல்ல... மந்தையுமல்ல...
மற்ற கட்சி மக்கள் பிரதிநிதிகளை விலை பேசும் பா.ஜ.க-வின் கொல்லைப்புற அரசியலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள், 'ஜனநாயகம் சந்தையுமல்ல, மக்கள் பிரதிநிதிகள் மந்தையுமல்ல' என்று சொல்லி இருக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு இது விந்தையுமல்ல. அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் தான் விந்தையாக இருக்கும்.
கட்சிகளை உடைப்பதும், ஆட்சிகளைக் கவிப்பதும், பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சிகளை அமைப்பதும் அவர்களுக்கு கை வந்த கலை. அதனை பீகாரில் செய்யப் பார்த்தார்கள். நிதிஷ் உஷார் ஆகி அவர்களுக்கே 'பெப்பே' காட்டினார். மகாராஷ்டிராவில் சிவசேனாகாரர்கள் சிக்கிக் கொண்டார்கள். இந்தியா முழுமைக்கும் ஆள்கிறோம் என்ற பம்பாத்துக்குப் பின்னால் இருப்பது இத்தகைய கீழ்த்தர அரசியல் தான் என்பது அனைவர்க்கும் தெரியும்.
பாஜகவின் இத்தகைய அசிங்க அரசியலை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பலப்படுத்தி இருக்கிறார். ''தெலங்கானாவில் ஆளும் எங்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விலக்க்கு வாங்க பா.ஜ.க முயற்சித்தது. அதற்கு ஆதாரமான வீடியோ பதிவுகள் முழுமையாக இருக்கிறது. இந்த வீடியோ அனைத்து மாநில முதல்வர்கள், நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
' ஏற்கனவே நாங்கள் 8 மாநில அரசுகளைக் கவித்தோம். விரைவில் ஆந்திரா, தெலங்கானா, டில்லி, ராஜஸ்தான் ஆகிய நான்கு அரசுகளையும் கவிழ்ப்போம்' என்று அந்த வீடியோவில் 3 பேர் சொல்லி இருக்கிறார்கள். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால் ஹைதராபாத்துக்கு ராமச்சந்திர பாரதி என்பவர் வந்தார். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வான ரோஹித் ரெட்டியைச் சந்தித்தார்.
ராமச்சந்திரபாரது பேசியதை ரோஹித் ரெட்டி என்னிடம் சொன்னார். அதன்பிறகு தான் அந்த 3 பேரையும் கைது செய்தோம். 'ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் இணைத்தால் 100 கோடி தருகிறோம், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்' என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி பேரம் பேச வந்தவர்கள் தங்கள் பேச்சில் அமைச்சர் அமித்ஷா பெயரை 20 முறையும், பிரதமர் பெயரை 2 முறையும் சொல்லி இருக்கிறார்கள். ஜே.பி.நட்டா பெயரை பல முறை சொல்லி இருக்கிறார்கள். இவர்களை அனுப்பியது யார் என்பது விசாரணை முடிவில் தெரியவரும்" என்று தெலங்கானா முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.
பா.ஜ.க கால இந்திய ஜனநாயகம் என்பது இதுதான் என்பதை ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே வெளிப்படுத்தி விட்டார். இதுவரை பா.ஜ.க தலைமை வாயைத் திறக்கவில்லை. நட்டாவோ, அமித்ஷாவோ பதிலளிக்கவில்லை. மாநிலக் கட்சி என்பதைத் தாண்டி தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் சந்திரசேகர ராவ்.
'தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி' என்பதை 'பாரத் ராஷ்டிர சமிதி' என்று பெயர் மாற்றம் செய்தார் கடந்த மாதத்தில். அங்கே உட்கார்ந்து குடைச்சல் கொடுக்கப் பார்த்த தெலங்கானா ஆளுநர் தமிழிசையை அங்கிருந்து துரத்தி விட்டார். புதுவையை புகலிடமாகக் கொண்டு பதுங்கி விட்டார் தமிழிசை. இதனால் பா.ஜ.க இவரை கடுமையான எதிரியாகப் பார்க்கிறது.
மக்களைச் சந்தித்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவது பா.ஜ.க.வுக்கு தெரியாத அரசியல். அதனால் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைக்கப் பார்த்தார்கள். ரோஹித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்த்தன், காந்தாராவ், பாலா ராஜூ ஆகிய நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் நடத்தியது பா.ஜ.க. இந்த பணபேரத்தில் ஈடுபட்ட சதீஷ் சர்மா, கே.நந்தகுமார், சிம்ஹயாஜூலு ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். அவர்கள் பேரம் பேசும் வீடியோவையும் வெளியிட்டு விட்டார் சந்திரசேகர ராவ். அந்த நான்கு எம்.எல்.ஏ.க்களையும் பொதுமேடைக்கு அழைத்து பாராட்டும் தெரிவித்துவிட்டார் அவர்.
'' இந்த வீடியோவில் இருக்கும் நபர்களில் ஒருவர் துஷார். இவர் அமித்ஷாவின் ஆள். பா.ஜ.க சார்பில் வயநாட்டில் தேர்தலில் போட்டியிட்டவர். இவர் தான் ஆட்சியைக் கவிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்" என்று சொல்லி இருக்கும் சந்திரசேகரராவ் அவர்கள், '' பிரதமரிடம் சொல்கிறேன்.. நானும் உங்களைப் போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் தான். உங்களைப் போலவே அரசியலமைப்புச் சட்ட ரீதியாகத்தான் நானும் ஆட்சி செய்து வருகிறேன். இது போன்ற மோசமான சதித்திட்டங்களை நிறுத்துங்கள். இது நல்லதற்கல்ல. உங்களுக்குத் தான் இது அசிங்கத்தை ஏற்படுத்தும்" என்றும் சொல்லி இருக்கிறார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேட்டி அளித்த மறுநாள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பேட்டி அளித்துள்ளார். '' ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் டெல்லி முதலமைச்சர் ஆக்குவதாக மணிஷ் சிசோடியாவிடம் பா.ஜ.க பேரம் பேசியது. அவர் மறுத்துவிட்டார். அந்தக் கட்சியினர் இப்போது என்னை நாடினார்கள்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாமல் விலகிக் கொண்டால் நாங்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரையும் விட்டு விடுகிறோம். அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் கைவிட்டு விடுகிறோம் என்று பேரம் பேசினார்கள். என் நண்பர் வழியாக வந்து இந்த பேரத்தை நடத்தினார்கள்" என்று சொல்லி இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அதாவது ஒரே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் பேரம் பேசுவது, அவருக்கு எதிராக அவர் அருகில் இருப்பவர் மனதையும் கலைப்பது. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கட்சி பாஜக என்பதைத்தான் இரண்டு மாநில முதலமைச்சர்களும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனை இந்திய மக்களும் அறிவார்கள்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!