murasoli thalayangam
“அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளில் நடந்த ஊழல்கள்.. மக்கள் இன்னும் மறக்கவில்லை பழனிசாமி”: முரசொலி!
மக்கள் மறக்கவில்லை பழனிசாமி!
‘‘அ.தி.மு.க. அரசு கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. ஒருங்கிணைந்த மழை நீர்வடிகால் பணிகளை மேற்கொண்டது. சென்னையில் நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன” என்று வாய்நீளம் காட்டி இருக்கிறார் பழனிசாமி.
அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத தனத்தின் ஒரே ஒரு உதாரணம்... 02.12.2015 அன்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையே மிதந்தது. 174 பேர் இறந்தார்கள், 2 ஆயிரத்து 711 கால்நடைகள் இறந்தன, ஒரு முக்கியமான மருத்துவமனையின் ஜெனரேட்டர் அறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்த அறைகளில் வெள்ள நீர் புகுந்ததால் 14 நோயாளிகள் இறந்தார்கள். சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவலத்தையும் அப்போது நாடு பார்த்தது.
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவையே அதிகாரிகளால் இரண்டு நாட்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சென்னை மிதந்ததற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு செயல்படவில்லை. அதனால்தான் மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். தன்னார்வலர்களாக மக்கள் எழுந்து செயல்பட்டு மக்களுக்கு உதவிகள் செய்தார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களை அரசு காப்பாற்றவில்லை. மக்களை மக்களே காப்பாற்றிக் கொண்டார்கள். இதை இன்னும் மக்கள் மறக்கவில்லை பழனிசாமி!
ஏதோ திட்டமிட்டோம் என்கிறாரே, இவர் திட்டமிட்டதன் லட்சணங்கள் குறித்து 2020 ஜனவரியில் ‘தினமலர்’ எழுதி இருக்கிறது. ‘மழை நீர் வடிகால் குறைபாடுகளால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்’ என்பது அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்கான தலைப்பு.
மழை நீர் வடிகால் கட்டுமானக் குறைபாடுகளால் சென்னை மற்றும் புறநகரில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன என்றும், பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன என்றும், ஏரிகள் ஆக்கிரமிப்பு நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, வடிகால் கட்டுமானக் குறைபாடுகள்தான் காரணம் என்றும், வடிகால் கட்டுமானத்திலும் சாலைகள் அமைப்பதிலும் நிர்ணயிக்கப்பட்ட தரை மட்டத்தைக் கடைப்பிடிக்காததே பிரச்சினைக்குக் காரணம் என்றும் செய்தி வெளியிட்டது ‘தினமலர்’
சென்னைப் பெருநகரில் 2013 ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்புகள் 43 சதவிகிதமாக அதிகரித்தது என்றும் 2016ஆம் ஆண்டு இது 69 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும் அதே நாளிதழ் சொன்னது. ‘மழை நீர் வடிகால் அமைக்க ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி வடிகால்கள் கட்டப்படுகின்றன. ஆனால் இந்த வடிகால்களில் பெரும்பாலானவை ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி அமைந்து உள்ளன. புவியியல் அமைப்புக்கு மாறாக வடிகால்கள் இருக்கின்றன’ என்றும் அதே நாளிதழ் சொன்னது.
‘நீர் வழித்தடங்களைத் தூர் வாருவதில் மெத்தனம்; வெள்ளநீர் வடிவது தாமதம்’ என்ற இன்னொரு செய்திக் கட்டுரையையும் அதே நாளிதழ் வெளியிட்டு இருந்தது. நீர் வழித்தடங்களை தூர் வாருவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டியதால் தலைநகர் சென்னையில் வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது என்றும், நடப்பாண்டில் மட்டும் 9.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், ஆனால் தூர்வாரும் பணிகளை ஓப்பந்த நிறுவனங்கள் முறையாகச் செய்யவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது. இதுதான் அவர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டது ஆகும். இதனை மக்கள் மறக்கவில்லை பழனிசாமி!
இவரது ஆட்சியில் திட்டமிட்டதாக அறிவித்தார்கள். அறிவிப்பை செயல்படுத்துவதைப் போல பாசாங்கு செய்தார்கள். கணக்குக் காட்டினார்கள். ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரால் மொத்தமாக பணம் கொள்ளையடித்தார்கள். மழைநீர் வடிகால் பணிகள் நடக்கவே இல்லை.
அ.தி.மு.க. ஆட்சியின் 2016-–21 காலக்கட்டத்தில் சென்னையின் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக மட்டும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 7,744 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிவிப்புகள் வெளியானது. இதனை முழுமையாக, ஒழுங்காக, ஊழல் இல்லாமல் செய்திருந்தாலே இந்தளவுக்கு தண்ணீர் வெளியேறி மிதந்திருக்காது என்பதுதான் உண்மை!
* 2016-–17 நிதிநிலை அறிக்கையில் 445.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவித்தார்கள்.
* 2018–-19 நிதி நிலை அறிக்கையில் 2,055.67 கோடி ரூபாய் என்றும், 1,243.15 கோடி ரூபாய் என்றும் அறிவித்தார்கள்.
* 2020-–21 நிதிநிலை அறிக்கையில் 3000 கோடி என்று அறிவித்தார்கள்.
- இவை அனைத்தும் பழனிசாமி விட்ட பழைய கப்சாக்கள். இதனையும் மக்கள் மறக்கவில்லை. இந்த ஊழல்களை 1.11.2018 ஆம் நாளே, “அறப்போர் இயக்கம்” சார்பில் அம்பலப்படுத்தினார்கள் ‘’சென்னை மாநகராட்சியில் மழைக்கால அவசரப் பணி என்னும் பெயரிலே மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. ஒவ்வொரு டெண்டரும் சென்னை மாநகராட்சியின் விலைப் பட்டியலை விட 30 முதல் 50 சதவிகிதம் வரை அதிகமாக வழங்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியது அந்த அமைப்பு.
‘‘மழைநீர் வடிகால் எங்கெல்லாம் இல்லையோ அங்கெல்லாம் அமைக்கப் போவதாக மழைக்கால அவசரப் பணி என்று கூறி அவசர கால டெண்டர் விட்டுள்ளார்கள். 440 கோடிக்கு டெண்டர் விட்டார்கள். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், 44 தெருவில் 8 தெருவில் மட்டுமே மழை நீர் வடிகால் இல்லை. மழைநீர் வடிகால் இல்லாத பகுதியில் போடுவதற்குப் பதில் ஏற்கனவே நன்கு வேலை செய்யும் பல பகுதிகளில் மழை நீர் வடிகாலை இடித்து மீண்டும் போடும் பணி துவங்கி உள்ளது.
80 சதவிகிதம் மழை நீர் வடிகால் உள்ள சாலைகளில் எதற்காக மழைக்கால அவசரப் பணி என்று கூறி மழை நேரத்தில் பள்ளம் வெட்ட வேண்டும்? இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது” என்று சொல்லி இருந்தார்கள். இதனை இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாராகவும் கொடுத்தார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பிலும், அறப்போர் இயக்கத்தின் சார்பிலும் வழக்காகவும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தான் திட்டமிட்டோம் என்கிறார் பழனிசாமி.
‘’எல்லா ஏரியையும் தூர் வார முடியாது. தூர் வாரலை, தூர் வாரலை என்றால் பணம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டவர்தான் பழனிசாமி என்பதையும் மக்கள் மறக்கவில்லை!
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!