murasoli thalayangam
“இதில் என்ன குறை? - RN.ரவி இன்னொரு அண்ணாமலையாக ஆக மாற வேண்டாம்” - ஆளுநருக்கு ஆதாரத்துடன் முரசொலி பதிலடி !
என்ன குறை கண்டார் ஆளுநர்?
கோவை கார் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக அவசியமற்ற புகாரை ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருக்கிறார். 'கோவை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கியதில் ஏன் இந்த காலதாமதம் என்பதுதான் என்னுடைய கேள்வி' என்று பொத்தாம் பொதுவாக பேசி இருக்கிறார்.
ஆளுநர் பொறுப்பில் இருப்பவருக்கு முதலில் எங்கே எதைப் பேச வேண்டும் என்ற புரிதல் முதலில் இருக்க வேண்டும். ஒரு தனியார் நிறுவனம், தனது யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியை திறந்து வைப்பதற்காக இவரை அழைத்திருக்கிறது. அந்த இடத்தில் போய் இப்படி கேட்டுள்ளார்.
ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசிடம் கேள்வி எழுப்பும் முறை இதுதானா? அதுவும் கோவை போன்ற விவகாரத்தில் இப்படிக் கேட்கலாமா? அதுவும் இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அதுவும் உளவுத்துறையில் இருந்தவர். இப்படிக் கேட்பதுதான் இவரது பணிக்காலத்தில் பயன்படுத்திய முறையா?
''இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் தமிழக காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டது. நான் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்று எனக்கு தமிழகக் காவல் துறை தான் தகவல் அளித்தது. அந்த வகையில் நாட்டில் உள்ள காவல் துறைகளில் தமிழகக் காவல் துறை சிறப்பாகச் செயல்படக் கூடியது என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பது தான் என் கேள்வி" என்று பேசி இருக்கிறார். ''தமிழகக் காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டது..." என்று சொல்லிவிட்டு, 'ஆனால்' போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டதா? ஒரு மாதம் ஆகிவிட்டதா? ஒரு வாரம் ஆகிவிட்டதா? மூன்றாவது நாளே தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கை மாற்றிவிட்டார் முதலமைச்சர். இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்?
அக்டோபர் 23 அன்று காலையில் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26 அன்று காலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதில் எந்த தாமதமும் இல்லை.
1. Delhi court complex வெடிவிபத்து நடந்த நாள் 23.12.2021.
என்.ஐ.ஏ.வழக்கு பதிந்த நாள் 13.1.2022
2. Bomb explosion at ps khejuri WB வெடிவிபத்து நடந்த நாள் 4.1.2022
என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 25.1.2022
3. BOMB explosion at naihati WB வெடிவிபத்து நடந்த நாள் 27.1.2022
என்.ஐ.ஏ.வழக்கு பதிந்த நாள் 8.2.2022
4. Low intensity blast in police bazar of Shillong city வெடி விபத்து நடந்த நாள் 30.01.2022
என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 4.3.2022
5. Loud explosion at an automobile work shop durtlang வெடிவிபத்து நடந்த நாள் 18.03.2022
என்.ஐ.ஏ.வுக்கு வழக்கு போன நாள் 20.7.2022
- இந்த வகையில் பார்த்தால் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து எல்லாம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளார்கள். ஆனால் இங்கே மூன்றாவது நாளே ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்?
காரில் இருந்த சிலிண்டர் வெடித்து, காருக்குள் இருந்தவர் மரணம் அடைகிறார். உடனடியாக அந்த இடத்தில் இருந்த அனைத்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டது. அப்போதே, உடனடியாக டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை தலைவர் டேவிட்சன் ஆசிரிவாதம் உள்ளிட்ட அனைவரும் கோவைக்கு வந்துவிட்டார்கள்.
அன்றைய தினமே, அந்த கார் யாருடையது என கண்டறியப்பட்டது. அன்றைய தினமே அந்த நபர் யாரென கண்டறியப்பட்டார். அன்றைய தினமே அந்த நபரின் வீடு சோதனையிடப்பட்டது. அவர் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் அன்றைய தினமே கைப்பற்றப்பட்டது. ஆறு தனிப்படைகள் இதற்காக உடனடியாக அமர்த்தப்பட்டது. அந்த மாவட்டமே போலிஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. எவரும் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டார்கள்.
மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டது. அருகில் இருந்த மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டார்கள் காவல் அதிகாரிகள். சுற்றிலும் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை வைத்து அந்த நபரோடு தொடர்பில் இருந்த அனைவரும் மறுநாள் போலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். இதில் நேரடி தொடர்புடைய ஐந்து பேர் உடனடியாக மறுநாள் கைது செய்யப்பட்டார்கள்.
மாநிலம் முழுவதும் இது போன்ற அடிப்படைவாத தீவிரவாதிகளை கண்காணிக்க காவல்துறை உத்தரவிட்டது. இது போன்ற பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆளுநர் நினைப்பது போல யாரும் அலட்சியமாக இருக்கவில்லை.
எந்தப் பெரிய சம்பவம் நடந்தாலும் உள்ளூர் போலிஸ் வழக்கு பதியும். அது பயங்கரவாத நிகழ்வாக இருந்து, வெளிமாநிலம் - வெளிநாடு அளவில் விசாரிக்க வேண்டியதாக இருந்தால் மாநில அரசுக்கு இது தொடர்பான கோரிக்கையையும் உள்ளூர் போலிஸ் தான் அனுப்பி வைக்க வேண்டும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் - தேசிய புலனாய்வு முகமைச் சட்டப்பிரிவு ஆகியவை சேர்க்கப்பட வேண்டிய வழக்காக இருந்தால் ஒன்றிய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும். அது தான் இதில் நடந்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்?
தமிழ்நாடு காவல் துறை போட்ட அதே முதல் தகவல் அறிக்கையைத் தான், என்.ஐ.ஏ.வும் போட்டுள்ளது. எனவே, எந்த தடயமும் அழிக்கப்பட்டாதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. குறை சொல்வதாக இருந்தால் நாமும் அதிகமாகக் கேட்போம். இப்போது இறந்து போன நபரை 2019 ஆம் ஆண்டு விசாரித்தது இதே முகமை தானே. அப்போது இருந்தது அ.தி.மு.க ஆட்சி. அவரை அந்த ஆட்சியோ, என்.ஐ.ஏ.வோ தொடர்ந்து கண்காணித்ததா?
2008 ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது தான் தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் ஆகும். இதில் திருத்தம் செய்ய வேண்டுமானால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டே செய்திருக்க வேண்டும். ஆனால் 2019 ஆம் ஆண்டு தான் திருத்தம் செய்தார்கள். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் திருத்தம் கொண்டுவர மனம் வந்ததா? ஏன் இந்தக் காலதாமதம் என்று நாமும் கேட்கலாமே?
பலரையும் பயங்கரவாதிகள் என்று அறிவித்திருந்தார்கள். அதில், 2019 இல் விசாரிக்கப்பட்ட இந்த நபர் ஏன் இல்லை? - இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். பா.ஜ.க ஆட்சியில் தேசிய புலனாய்வு முகமைச் சட்டத்துக்கு திருத்தம் வந்தபோது தி.மு.க. ஆதரித்து வாக்களித்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.
பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் உறுதியாக இருப்பது தி.மு.கழகமும், அதன் ஆட்சியும். அதன் மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் - பொறுப்பற்றுப் பேசக் கூடாது. அவர் இன்னொரு 'அண்ணாமலை'யாக ஆக வேண்டாம். தமிழக பாஜக தாங்காது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!