murasoli thalayangam
“ம.பி-யில் ஒரு பேச்சு; குஜராத்தில் ஒரு பேச்சு.. இதெல்லாம் இலவசத்தில் சேராதா?” : மோடியை சாடிய முரசொலி !
இரண்டு நாக்குகள் இலவசம்!
குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த தேர்தலிலேயே தட்டுத் தடுமாறித்தான் ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. எனவே, இந்த முறை ஆட்சிக்கு வருவது சிரமமோ என்று அக்கட்சியின் தலைமை நினைக்கிறது.
அதனால் தேர்தல் தேதியையே இன்னமும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். இமாசலப் பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு, குஜராத்தை மூடி வைத்துள்ளார்கள். குஜராத் முடிவுகள் பணால் ஆனால், இது அகில இந்தியத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் என்பதால்தான் இந்த பயமும் பதற்றமும்!
“குஜராத் மாநிலத்து மக்களுக்கு இரண்டு காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்” என்று குஜராத் மாநில அமைச்சர் ஜித்துவாகன் வாக்குறுதி அளித்துள்ளார். “இதன் மூலமாக இம்மாநிலத்தில் 38 லட்சம் இல்லத்தரசிகள் பயனடைவார்கள். அவர்களுக்கு 1,700 ரூபாய் மிச்சம் ஆகும்” என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
இலவசங்களுக்கு எதிராக பிரதமரும் பா.ஜ.க.வும் பேசுகிறது. தேர்தல் ஆணையத்தை பேசவும் வைக்கிறது. ஆனால் இன்னொரு பக்கத்தில் தனது கட்சி வெற்றி பெறுவதற்காக இலவசத்தையும் அறிவிக்கிறது. இவர்களைத்தான், ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
குஜராத் அமைச்சர் அறிவித்த அதே நாளில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை காணொலி மூலமாக பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்கள். அப்போது, இலவசங்களுக்கு எதிராகக் கொந்தளித்து இருந்தார்.
“வரி செலுத்துவோர் பலரும் எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள். தங்கள் வரிப்பணம் தேர்தல் இலவசங்களின் விநியோகத்துக்காகச் செலவிடப்படும்போது அவர்கள் வேதனை அடைகிறார்கள். இலவசங்கள் கலாச்சாரத்தில் இருந்து நாட்டை விடுவிக்க சமூகத்தின் பெரும் தரப்பினர் தீர்க்கத்துடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டு சிலிண்டர்கள் கொடுத்தால், குஜராத்தில் உள்ள வரிச் செலுத்துவோர் வருத்தப்பட மாட்டார்களா? வருத்தப்பட்டு பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்தால் என்ன ஆகும்? எதற்காக இந்த பசப்பு வார்த்தைகள்? அல்லது, இலவசங்கள் என்றால் நாங்கள் மட்டுமே அறிவிக்க வேண்டும், மற்ற கட்சிகள் அறிவிக்கக் கூடாது என்று நினைக்கிறதா பா.ஜ.க.?
எது இலவசம் என்பதை பா.ஜ.க. தலைமையோ, இந்திய அரசோ வரையறுத்துவிட்டதா? சமூக நலத் திட்டங்களுக்கும் - இலவசங்களுக்கும் வேறுபாடு இன்னமுமா தெரியவில்லை. ஒரு தனி மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கான தேவையை ஒரு அரசு வழங்கினால் அது சமூகநலத் திட்டம் ஆகும்.
இலவசம் எது? மக்கள் நலத்திட்டம் எது? என்பது குறித்து உச்சநீதிமன்றமே விளக்கமளித்துள்ளது. இலவசங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறது. இலவசங்களுக்கு எதிராக பா.ஜ.க. எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக தி.மு.க. தனது வலுவான கருத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.
“தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது. ஆனால் சரியான வாக்குறுதிகள் எது? பொதுப் பணத்தைச் செலவிடுவதற்கான சரியான வழி எது? என்பதுதான் எங்களது கேள்வி” என்று தலைமை நீதிபதி ரமணா கூறியிருந்தார்.
“விவசாயிகளுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை இலவசமாகக் கருத முடியுமா? இலவச சுகாதாரச் சேவைகள், இலவச குடிநீர், நுகர்வோருக்கு இலவச மின்சாரம் ஆகிய வற்றையும் இலவசமாகக் கருத முடியுமா? இலவசப் பொருட்களையும் இலவசக் கல்விப் பயிற்சியையும் ஒப்பிடக்கூடாது.
மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஈடுசெய்ய வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டமே சொல்கிறது” என்றும் நீதிபதிகள் கூறினார்கள். இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவாகப் பேசி இருக்கிறார் பிரதமர்.
ஏழைகளுக்குத் தரப்படும் இலவசங்கள் குறித்து கவலைப்படுகிறார் பிரதமர். ஆனால் கார்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள 5 லட்சம் கோடி பணம் எல்லாம் இலவசத்தில் சேராதா? “517 கார்ப்பரேட் நிறுவனங்களின் 5 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததை இலவசம் இல்லை என மோடி சொல்வாரா?” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.
கடந்த ஏழாண்டு காலத்தில் இந்திய வங்கிகள் ரத்து செய்த வாராக்கடன்களுக்கு என்ன பெயர்? கடனை வாங்கிவிட்டுக் கட்டாமல் போனதால் அவர்களது கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் ஒழுங்காக கடன் கட்டியவர்கள் வருத்தப்பட மாட்டார்களா? அப்படி கடன் தொகை செலுத்தியவர்கள் யாரும், பிரதமருக்கு கடிதம் எழுதவில்லையா? ‘கடன் ரத்து கலாச்சாரத்துக்கு’ முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லவில்லையா?
கடன் வாங்குவது வளர்ச்சித் திட்டத்துக்காக என்றால், கடனைக் கட்டாமல் இருப்பதும் வளர்ச்சித் திட்டமாகிவிட்டதா பா.ஜ.க. ஆட்சியில்? வங்கிகள் சூறையாடப்படுவது யாருடைய அனுமதியால் நடக்கிறது? இதற்காக வருந்துவோர் ‘ஏழை’ மக்கள் மட்டுமே! இந்த மக்கள் யாரும் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லையா?
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பேச்சு, குஜராத்தில் ஒரு பேச்சு!
இரண்டு சிலிண்டர்கள் இலவசம் என்பதற்கு பதிலாக இரண்டு நாக்குகள் இலவசம் என்று அறிவிக்கலாமே!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!